நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரைப் பலரால் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்று வேலூர் தொகுதி.
அதில், களம்காணும் வேட்பாளர்கள் புதிய நீதிக்கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகமும், தமிழக மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த்தும் மோதுவதுதான் இந்தப் போட்டியை முக்கியமானதாக ஆக்கியிருக்கிறது.
இஸ்லாமிய சமூகத்தினர் அதிகமுள்ள வேலூர் தொகுதியில், 5 முறை திமுகவும், 3 முறை காங்கிரசும், 2 முறை அதிமுகவும், 2 முறை பாமகவும் வென்றிருக்கின்றன.
ஒரு முறை திமுக அணியில் இடம்பெற்றிருந்த முஸ்லீம் லீக் வென்றிருக்கிறது. வேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற பலரும் முஸ்லீம் வேட்பாளர்கள் தான்.
வேலூர் தொகுதியைப் பொறுத்தவரை பரவலாக அறியப்பட்டவர் புதிய நீதிக்கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகம்.
சென்ற முறை (2019-ம் ஆண்டில்) ஏ.சி.சண்முகம் பெற்ற வாக்குகள் 4 லட்சத்து 77 ஆயிரத்து 199. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் பெற்ற வாக்குகள் 4 லட்சத்து 85 ஆயிரத்து 340.
அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான தீபலெட்சுமி பெற்ற வாக்குகள் 26,995.
ஆக சென்ற தேர்தலில் மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறார் கதிர் ஆனந்த்.
அப்படி வெற்றி பெற்ற வேட்பாளரான கதிர் ஆனந்த் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார் என்று பார்த்தால், தொகுதி மக்களால் திருப்திகரமாக பதில் அளிக்க முடியவில்லை என்பது அவருக்கு இப்போதும் இருக்கும் மைனஸ் பாயிண்ட்.
இன்னொரு மைனஸ் பாயிண்ட் கதிர் ஆனந்தின் நக்கலானப் பேச்சு. மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதைப் பற்றி அவர் பொதுவெளியில் அடித்த கேவலமான கமெண்ட் அவருக்கே எதிரான ஒன்றாக இந்தத் தேர்தலில் பரவிக் கிடக்கிறது.
அவருடைய தந்தையான துரைமுருகனும் இதேபாணியில் பரவலாகப் பேசியிருக்கிறார்.
தன்னுடைய மகனை கைது செய்ய முயற்சி நடப்பதாக வெளிப்படையாகக் கூறி தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு மிரட்சியை ஏற்படுத்தினார்.
இருந்தும் கதிர் ஆனந்தின் பிரச்சாரம் எந்தளவுக்கு சூடுபிடித்திருக்கிறது என்று பார்த்தால் அதில் அவர் பின் தங்கியே இருக்கிறார்.
இந்த நிலையில் கதிர் ஆனந்த் நம்பியிருப்பது அதிகார பலத்தையும், கடைசி நேர பண விநியோகத்தையும் தான்.
இதற்கு நேர் எதிராக பரவலாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிர்ச்சி மதிப்புக்காகவோ, ஊடகங்களில் தனது பேர் பரபரப்பாக அடிபட வேண்டும் என்பதற்காகவோ பேசாமல் தன்னுடைய இயல்பான பாணியில் பிரச்சாரத்தை பரவலாக எடுத்துச் சென்றிருக்கிறார் ஏ.சி.சண்முகம்.
ஆனால் சென்றமுறை அவர் போட்டியிட்டது இரட்டை இலை சின்னத்தில். அந்தச் சின்னம் அவருக்கு தனிபெரும்பலத்தைக் கொடுத்தது என்பது உண்மை.
இந்த முறை பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடக்கூடிய ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி முதற்கொண்டு முக்கியமான பிரமுகர்கள் பலரும் தொகுதிக்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது அவருக்கான முக்கியமான பிளஸ் பாயிண்ட்.
வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்கு பரிச்சயமான, சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை தனக்கு எதிரான அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.