மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக வரும் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நாள் முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.
வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு 48 மணிநேரத்துக்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதியாகும்.
அதன் அடிப்படையில், நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.
இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது – அந்த நேரத்துக்குள் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் – அதன்பிறகு, மவுன பிரச்சாரம் உள்ளிட்ட எந்த விதமான பிரச்சாரத்துக்கும் அனுமதி இல்லை – மாலை 6 மணிக்கு மேல் அந்தந்த தொகுதிக்குத் தொடர்பு இல்லாத அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்’ என்று கூறினார்.
மோடி – ராகுல்:
தேர்தல் பிரச்சாரம் நாளையுடன், முடிவடைவதால், அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியும் நேற்று ஒரே நாளில் பிரச்சாரம் செய்தனர். மோடி நெல்லையிலும் ராகுல் நீலகிரியிலும் ஓட்டு சேகரித்தனர்.
கேரள மாநிலம் வயநாடு செல்லும் வழியில், ஊட்டி அருகேயுள்ள தாளூருக்கு ராகுல் ஹெலிகாப்டரில் நேற்று காலை வந்திறங்கினார்.
அங்குள்ள மண்டபம் ஒன்றில் விவசாயிகள் மத்தியில் பேசிய ராகுல், ’’தமிழகத்துக்கு வருவதும், தமிழ் மக்களைப் பார்ப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
”பிரதமர் மோடி, நமது நாட்டின் பன்முகத்தன்மையை மதிக்கத் தவறிவிட்டார் – பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை” என ராகுல் குற்றம் சாட்டினார்.
ஸ்டாலின் – இபிஎஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாதவரத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, ”நாடு முழுவதும் உள்ள மக்கள் ’இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச்செய்யத் தயாராகி விட்டார்கள் – நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவையும், தமிழ்நாட்டையும், எதிர்கால தலைமுறையையும் காக்கட்டும்” என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
‘’முன்னாள் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் பொய் வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறார் – ஆட்சி மாறினால் காட்சி மாறும் – எங்களைப் பழி வாங்க நினைத்தால், அது உங்களுக்குப் பின் விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.
பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், தமிழகம் முழுவதும் தலைவர்கள் உச்சக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
– பி.எம்.எம்.