மூன்று முதலமைச்சர்களைத் தந்த ‘நட்சத்திர’ தொகுதி!

தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி யாருக்கு?

இன்னாள், முன்னாள் அமைச்சர்கள், தலைவர்களின் வாரிசுகள், சினிமா ஸ்டார்கள் போட்டியிடும் தொகுதிகளை ‘நட்சத்திர’ தொகுதி என அழைப்பது வழக்கம்.

தமிழ்நாட்டில் நிஜமாகவே நட்சத்திரத் தொகுதி என்றால், அது, தேனி மக்களவைத் தொகுதி தான்.

இந்த தொகுதிக்குள் அடங்கிய ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், 1984-ம் ஆண்டு போட்டியிட்டு மூன்றாம் முறையாக முதலமைச்சர் ஆனார்.

உடல் நலக்குறைவால் அப்போது அவர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கிருந்தபடியே வேட்புமனுவில் கையெழுத்திட்டு அனுப்பி, தொகுதியில் பிரச்சாரம் செய்யாமலேயே 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

அவருக்கு இது, புதிய விஷயமல்ல.

ஏற்கனவே  மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபடி 1967-ம் ஆண்டு பரங்கிமலையில் வென்றவர் அவர்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 2006-ம் ஆண்டு ஆண்டிபட்டித் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

தேனி தொகுதியில் அடங்கிய போடி சட்டமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்று மூன்று முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.

கலைஞர்களின் மண்

மூன்று முதலமைச்சர்களை வழங்கிய தேனி மக்களவைத் தொகுதியை சேர்ந்த திரைப்படக் கலைஞர்களைப் பட்டியலிட்டால், எஸ்.எஸ்.ராஜேந்திரன், (இவர் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்) பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து மற்றும் அவர்கள் குடும்பத்தினரோடு ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் அடங்குவர்.

மாவட்டத் தலைநகரான தேனிக்கு மக்களவைத் தொகுதி என்ற அங்கீகாரம், ஆரம்பத்தில் இல்லை. பெரியகுளம் மக்களவைத் தொகுதியின் ஒரு அங்கமாகவே இருந்தது.

2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் பெரியகுளம் தொகுதி நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

இப்போது, தேனி  மக்களவைத் தொகுதியில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடி, சோழ வந்தான், உசிலம்பட்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

வேளாண்மையை பிரதானமாகக் கொண்ட தேனி தொகுதி ஆன்மிக பூமியாகும்.

குச்சனூர் சனீஸ்வரன், வீரபாண்டி கவுமாரியம்மன், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உள்ளிட்ட பழமையான கோயில்கள் இங்குள்ளன.

வைகை, முல்லைப் பெரியாறு, கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட நீராதாரங்கள் இந்த தொகுதியின் முக்கிய அடையாளங்கள்.

அதிமுகவின் கோட்டை

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் கணிசமாக வசிக்கும் தொகுதி இது.

கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி தொகுதி, குளிர்ச்சிக்கும், வளமைக்கும், இதமான பருவ நிலைக்கும் பெயர் பெற்றது.

தேனி தொகுதியில் (பழைய பெரியகுளம் தொகுதியையும் சேர்த்து) மொத்தம் 17 முறை தேர்தல்  நடைபெற்றுள்ளது.

அதிமுக எட்டு  முறை வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 2 முறையும் வென்றுள்ளது. சுதந்திரா கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும்  தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

வேட்பாளர்கள் யார்? யார்?

தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  களம் இறங்கியுள்ளார். இதனால்  இந்த தொகுதி ‘ஸ்டார்’ அந்தஸ்து பெற்றுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டிடிவி தினகரன், அவரது வெற்றிக்கு உழைத்தவர் தங்க தமிழ்செல்வன்.

அமமுக கட்சியின் தளபதியாக இருந்த அவர், இந்த தொகுதியில், திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அதிமுக சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார். 40 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் இவர், இப்போது ஒன்றிய செயலாளர்.

மேற்கண்ட 3 வேட்பாளர்களுமே அதிமுக எனும் நாற்றாங்காலில் வேர்விட்டு வளர்ந்தவர்கள் என்பது விநோதமான உண்மை.

நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜெயிக்கப் போவது யார் ?

கடந்த முறை நடைபெற்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் சுமார் 5 லட்சம் ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், 4 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வாங்கினார்.

கடந்த தேர்தலில் அதிமுக வென்ற ஒரே தொகுதி தேனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், சோழவந்தான்  ஆகிய 4 தொகுதிகளை திமுக கைப்பற்றி இருந்தது.

உசிம்பட்டி, போடி ஆகிய இரண்டு  தொகுதிகளில் மட்டும் அதிமுக வென்றது.

இந்தத் தேர்தலில் தேமுதிக மட்டுமே அதிமுக அணியில் உள்ளது.

ஆனால் திமுக கூட்டணியில்,  காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

தங்க.தமிழ்ச்செல்வன் நீண்ட காலமாக தொகுதியிலேயே வசித்து வருபவர் என்பதோடு,  ஆளும் கட்சி என்ற பலமும் உள்ளது.

பாஜக கூட்டணியில் அமமுக வேட்பாளராக  போட்டியிடும், டிடிவி. தினகரன் ஏற்கெனவே இந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர்.

தொகுதி மக்களுக்கு நன்றாக பரிச்சயமானவர். கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக, சுமார் 1 லட்சத்து 44 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி இருந்தது.

பாஜக, ஜான் பாண்டியனின் தமமுக ஆகிய கட்சிகளுக்கு இந்தத் தொகுதியில் கணிசமான ஓட்டுகள் இருப்பது, தினகரனின் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

தேனியின் மைந்தரான ஓ.பன்னீர் செல்வம், ஆதரவும் தினகரனுக்கு உள்ளது.

எனினும் தேனியில் போட்டி பலமாகவே உள்ளது.

– பி.எம்.எம்.

madhannarayanasamythanga tamilselvanTheni Constituencyttv dinakaranடிடிவி தினகரன்தங்க தமிழ்ச்செல்வன்தேனி மக்களவைத் தொகுதிநாராயணசாமிமதன்
Comments (0)
Add Comment