ஜெயகாந்தனின் வாதம் பிரதிவாதம்!

- எழுத்தாளர் இந்திரன்

தமிழ் எழுத்துலகம் எனும் கடலில், எழுத்துக் கலையின் ஜீவ ஆதாரமாக இருக்கிற சுய சிந்தனைகளுக்கு நேர்மையாக இருத்தல் எனும் பிராண வாயுவை, முரண்பாடுகளின் செவுள்களைத் திறந்து மூடியபடி, லாவகமாக சுவாசித்தபடி, கடலைக் கலங்க அடித்துக் கொண்டு நீந்திய ஒரு சுறா மீன்தான் ஜெயகாந்தன்.

1970-ல் சென்னை சோவியத் கலாசார மைய அரங்கத்தின் வெளியே என்னை ஜெயகாந்தனுக்கு என் குருநாதர் புலவர் த.கோவேந்தன் அறிமுகப்படுத்தி வைத்தபோது ஜெயகாந்தன் நின்ற கம்பீரமான தோற்றம் இன்னமும் என் கண்ணிலேயே நிற்கிறது.

கவர்ச்சிகரமான புருவம். கன்னத்தில் வழிந்திறங்கும் அடர்த்தியான கிருதா. முறுக்கி மேலேற்றிய மீசை.

முகத்தில் ஒர் அலட்சிய புன்னகை. புள்ளி புள்ளியாகப் போட்ட பளபளக்கும் அரைக்கை சட்டையை பேண்ட்டுக்குள் நுழைத்து அணிந்திருந்தார். கையில் மேல்நாட்டவர்களைப் போல புகை பிடிக்கும் பைப் வைத்திருந்தார்.

எதிரில் கலைஞர் பதிப்பக உரிமையாளர் மாசிலாமணி லாகிரி பொட்டலத்தைக் கையில் வைத்திருக்க, ஜெயகாந்தன் அதை எடுத்து பைப்புக்குள் நிரப்பியபடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த காட்சியில் அன்றைய தமிழ் எழுத்தாளர்களின் ஜிப்பா, ஜோல்னா பை கல்யாண குணங்கள் நொறுங்கி விழுந்தபடி இருந்தன.

துயரத்தை ஆற்றாமல் அழுது புலம்பும் ஒப்பாரிக்குள் தொழிற்படும் சோக ரசாயணம் பூசிய ஒரு அழகியலை ஜெயகாந்தன் என்றைக்கும் தனது எழுத்து உலகத்தை முலாம் பூசுவதற்காகப் பயன்படுத்தியது இல்லை.

மாறாக அன்றாட வாழ்க்கையின் பற்சக்கரங்களில் சிக்கி சின்னா பின்னமான தனிமனிதர்களின் துயர கதைகளையும் உப கதைகளையும் மனிதாபிமானம் மிக்க வாத, பிரதிவாத வெளிச்சங்கள் கொட்டி அலசி ஆராய்பவராக அவர் இருந்தார்.

சிறுகதை, நாவல், சினிமா, கட்டுரை, நேர்காணல் என்று எதுவாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையின் கொடூர யதார்த்தங்களைத் தனது எழுத்துக் கலையின் உதவியுடன் சிங்காரிப்பதை நிராகரித்து, அதன் கொடூரத்தை ஒரு தவளையை சோதனைச் சலையில் வெட்டி பிரித்து அதன் பாகங்களை ஆராய்வது போல செயல்பட்டார்.

தான் வாழ்கிற சமூகத்துக்கு – எந்த அளவுக்கு உவப்பானதாக இல்லாதபோதும் – தன் மனதில் கனியும் சிந்தனைகளைத் துணிச்சலுடன் வெளியிடுவது என்பது சிரச்சேதத்துக்குரிய குற்றம் அல்ல என்று ஜெயகாந்தன் வாழ்நாள் முழுவதும் நம்பினார்.

”அது அத்தகைய குற்றமே ஆனாலும் என்னைச் சிரச்சேதம் செய்ய இவர்கள் யார்? “ என்று கேட்டவர் அவர்.

தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்ளும் சுய விமர்சன மரபு ஒன்றைத் தமிழர்கள் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

“நான் ஒரு எழுத்தாளன். ஆனாலும்கூட தமிழில் நல்ல நாவல், உலக அளவுகோலுக்கு உட்பட்ட ஒரு நாவல் இல்லை என்பதை மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். அப்படியே ஏற்றுக் கொள்ளாவிடினும் அந்த கருத்துக்கு ஒரு மரியாதை கொடுத்தாவது நாம் பரிசீலிக்க வேண்டும்.

“ஆகா, நான் எழுதுகிறவன். என்னிடம் இப்படி சொல்லப் போச்சா”, என்று ஆத்திரப்பட்டால் இந்த பீடத்துக்கு நான் தகுதியில்லை என்றாகிவிடும்”, என்று அவர் ஒரு மணிவிழா மேடையில் துணிந்து சொன்னபோது பார்வையாளர் வரிசையில் நான் இருந்தேன்.

பாமரத்தனமான சினிமா, இலக்கியமில்லாத நாடகம், சினிமாவை நம்பிய பத்திரிகைகள், அவற்றிற்கு தீனியாகும் இலக்கியம் என்று திரும்பத் திரும்ப ஒன்றை ஒன்று விழுங்கப் பார்க்கும் நான்கு பாம்புகளாய் தமிழனின் உடம்பைச் சுற்றி வளையமிட்டிருக்கிறன.” என்று அவர் காலத்தில் வாதிட்டப்போது இருந்த நிலை இன்னமும் மாறவில்லை என்பதனாலேயே ஜெயகாந்தனின் எழுத்துக்களின் இத்தொகுதி இக்காலத்தில் வெளியிடப்பட வேண்டியது கட்டாயமாகிறது.

ஜெயகாந்தனின் கதைமாந்தர்களில் அயோக்கியர்கள் என்பவர்களை நீங்கள் பார்க்க முடியாது.

ஒருவனை யோக்கியனா, அயோக்கியனா என்று தீர்மானிப்பது அவனது தனிப்பட்ட குணாம்சங்களால் அல்லாமல், சமூகத் தீமைகளில் அல்லது நன்மைகளில் அவன்/அவள் எடுத்துக் கொள்ளும் பங்கெடுப்பு என்பதைப் பொருத்தே வழக்கும், வாதும், தீர்ப்பும் அமைகிறது என்பதுதான் ஜெயகாந்தனின் வாதம். அவரே ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்: ஜெயகாந்தன் எனும் படைப்பாளியின் அஸ்திவாரம் மனிதாபிமானம்.

எழுத்தாளன் என்பவன் சதாகாலமும் எழுதிக் கொண்டிருக்கிற யந்திரம் அல்ல. போட்டியும், வர்த்தகமும் நிறைந்து விட்டபிறகு – இந்த கும்பலில் நான் இல்லை என்று எனக்கு நானே நிரூபித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

எனவே நான் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திக்கூட வைப்பேன். அது என் சுதந்திரம் என்று அவர் பேசினார்.

ஜெயகாந்தனின் மகனாகிய ஜெ.ஜெயசிம்ஹன் தொகுத்து, அவரது அணுக்கத் தொண்டர்களில் ஒருவராகத் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவழித்த த.எழில்முத்து பதிப்பித்து, அவரது படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த மீனாட்சி புத்தக நிலையம் வெளியிடும் இந்தத் தொகுதி ஜெயகாந்தனின் சாரமாக எது இருந்ததோ அதனை வெகு சிறப்பாக நமக்குக் காட்டுகிறது.

திருவள்ளுவரை நாம் நேரில் கண்டதில்லை. ஆனால் திருவள்ளுவரின் 1330 அருங்குறள்களும்தான் நமக்கு திருவள்ளுவர். பாரதியை நேரில் கண்டவர்கள் இன்று நம்மிடையே இல்லை.

ஆனால் பாரதியின் ஒவ்வொரு சொல்லும் பாரதியாக நம்மிடம் பேசி வாழ்ந்து வருகின்றன. இதே போன்றுதான் ஜெயகாந்தன் இன்று நம்மிடையே இல்லை.

ஆனால், ஜெயகாந்தன் தனது எழுத்துக்களின் மூலமாக இன்னமும் நம்மிடையே வாழ்ந்து வர வேண்டும் என்றால் அவரது எழுத்துகள் மீண்டும் மீண்டும் புத்தகங்களாக வெளியிடப் பட வேண்டும்.

அந்த வகையில் ஜெயகாந்தனின் எழுத்துகள் அடங்கிய இத்தொகுதி ஜெயகாந்தனை வாசித்து, மறுவாசிப்பு நிகழ்த்துவதற்கு அஸ்திவாரமாக அமையும் என்பது திண்ணம்.

indiranJeyakanthansirugathaiwriter indiranஎழுத்தாளர் இந்திரன்கட்டுரைசிறுகதைசினிமாதமிழர்கள்நாவல்நேர்காணல்பாரதிமனிதாபிமானம்ஜெயகாந்தன்
Comments (0)
Add Comment