நேரு குடும்பத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் குடும்பம் என்றால், அது, ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவின் குடும்பம் தான்.
பீகாரை தலைமையிடமாக கொண்டு ஆர்.ஜே.டி. கட்சியை உருவாக்கினார், லாலு. பீகார் முதலமைச்சர், மத்திய ரயில்வே அமைச்சர் ஆகிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
பீகார் முதலமைச்சராக இருந்தபோது லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதனால் தனது மனைவி ராப்ரிதேவியை, முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்து விட்டு ஜெயிலுக்குப் போனார்.
கொஞ்சகாலம், முதலமைச்சராக இருந்த ராப்ரிதேவி, இப்போது எம்.எல்.சி.யாக இருக்கிறார். தனது வாரிசுகளையும் ஒவ்வொருவராக அரசியலில் களம் இறக்கினார், லாலு.
அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவும், இளைய மகன் தேஜஸ்வியும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆனார்கள்.
நிதிஷ்குமார் அமைச்சரவையில் தேஜஸ்வி, துணை முதலமைச்சராகவும், தேஜ் பிரதாப் அமைச்சராகவும் பதவி வகித்தனர்.
7 மகள்கள்
தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள பாரதி, நடைபெற இருக்கும் தேர்தலில் பாடலிபுத்திரம் தொகுதி ஆர்.ஜே.டி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், லாலுவின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யாவுக்கு, மக்களவை தேர்தலில் போட்டியிட ஆர்.ஜே.டி. கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.
சரண் தொகுதியில் அவர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில், லாலு நான்கு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ரோகிணி, பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
லாலு பிரசாத் யாதவ், உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது அவரை கவனித்துக் கொண்டவர் ரோகிணி.
மேலும் லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்து, கட்சிக்காரர்கள் மத்தியில் அபிமானம் பெற்றவர்.
நரசிம்மராவை வீழ்த்திய ஆசிரியர்
ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து, வாஜ்பாய் தலைமையில் 1984-ம் ஆண்டு பாஜக எனும் புதிய கட்சி உருவாகி இருந்தது. அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், வாஜ்பாய் தோற்றுப்போனார்.
ஆனால் பாஜக இரு இடங்களில் வென்றது. அதில் ஒரு தொகுதி, ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்த கனமகொண்டா.
அப்போது அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர், பின்நாட்களில் பிரதமராக இருந்த பிவி நரசிம்மராவ்.
பாஜக வேட்பாளராக அங்கு போட்டியிட்ட ஜங்கா ரெட்டி, 52 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், நரசிம்மராவை தோற்கடித்தார்.
ஜங்கா ரெட்டி, ஓய்வு பெற்ற பள்ளிக்கூட ஆசிரியர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொண்டர்.
ஆசிரியராக வேலை பார்த்த சமயத்தில் இயக்கப் பணிகளில் ஈடுபட்டதால், ஆந்திர மாநில காங்கிரஸ் அரசாங்கம், ஜங்கா ரெட்டியை இடமாற்றம் செய்து கொண்டே இருந்தது.
இது, பத்திரிகைகளில் செய்தியாக வெளியானதால் மக்களின் அனுதாபத்தை சம்பாதித்திருந்தார், ஜங்கா ரெட்டி.
அந்த நேரத்தில் என்.டி.ராமராவ், புதிதாக தொடங்கி இருந்த தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. இதனால் நரசிம்மராவை, ஜங்கா ரெட்டி எளிதாக வீழ்த்த முடிந்தது. கணவன் – மனைவியைப் பிரித்த அரசியல்.
மத்தியப்பிரதேச மாநிலம் பாலகத் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார், கங்கர் முஞ்சார். இவர், முன்னாள் எம்.பி.ஆவார்.
கடந்த 5-ம் தேதி முதல் அவர், அங்குள்ள மரத்தடியில் தான் தங்கி இருக்கிறார். அந்தப் பகுதியில் அவருக்கு சொந்த வீடு இருந்தும், அங்கே செல்வதில்லை.
காரணம் என்ன?
அரசியல்.
அவரது மனைவி அனுபா, பாலகத் சட்டசபைத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
கணவனும், மனைவியும் வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் அரசியல் பயணமும் வேறு வேறு பாதையில் செல்கிறது.
தனது கணவரை எதிர்த்து, இந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் சிங்கை, ஆதரித்து, அனுபா தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
“என் மனைவி காங்கிரஸ். நான் பகுஜன் சமாஜ். இது தேர்தல் நேரம் என்பதால், மாறுபட்ட சித்தாந்தங்களை கொண்ட நாங்கள், ஒரே வீட்டில் வசிப்பது சரியாக இருக்காது.
எனவே, தேர்தல் பிரச்சார நேரம் தவிர மற்ற சமயங்களில், இந்த மரத்தின் அடியிலேயே தங்குகிறேன். தேர்தல் முடிந்த பிறகுதான், வீட்டுக்கு போவேன்” என்கிறார், முஞ்சார்.
– பி.எம்.எம்.