சென்னை, தி.நகர் பாண்டிபஜாரில் இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி, ‘ரோடு ஷோ’ நிகழ்வில் கலந்து கொண்டார்.
பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை இந்த வாகனப்பேரணி நடைபெற்றது. அப்போது மோடி, தாமரை சின்னத்தைக் காட்டி, பாஜக வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த வாகனப் பேரணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.
ஜனநாயகம் இருக்காது
தேனியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
’’பாஜக ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியாவை அமளியான இந்தியாவாக மாற்றிவிடுவார்கள் – ஒருதாய் மக்களாக வாழும் நம்முடைய மக்கள் மனதில் வேறுபாட்டு விதைகளைத் தூவி, இந்தியாவையே நாசம் செய்துவிடுவார்கள்.
மற்றொரு முறை மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது – நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. தேர்தல் என்பதே ஜனநாயகப்பூர்வமாக இருக்காது – மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது – சட்டமன்றங்கள் இருக்குமா என்பதே சந்தேகம்.
ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். இவை அனைத்துக்கும் மேலாக, சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்’’ என்று ஸ்டாலின் எச்சரித்தார்.
சென்னையில் நடந்த மோடியின் ‘ரோடு ஷோவை’யும் அவர் விட்டு வைக்கவில்லை.
’’இத்தனை நாளாக வெளிநாடுகளுக்கு ’டூர்’ சென்ற பிரதமர் மோடி, தேர்தல் வந்துவிட்டதால், உள்நாட்டுக்குள் ’டூர்’ அடிக்கிறார் – அவர் ஏதோ ’ஷோ’ காட்ட வருகிறார் என்று நான் சொல்லவில்லை – அவரே ‘ரோடு ஷோ’ காட்டுகிறேன் என்று தான் சொல்லி இருக்கிறார் – உங்கள் ’ரோடு ஷோ – ஃப்ளாப் ஷோ ’ ஆனது.
இது குறித்து, சமூக வலைத்தளங்களில் மோடி எழுதியபோது ’சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்வோம்’ என்று சொல்லியுள்ளார்.
பிரதமர் மோடி அவர்களே, அந்தத் திட்டத்துக்கு தடையாக இருப்பதே நீங்கள்தான் – சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால்தான் நிதி கிடைக்கவில்லை – அதனால்தான் திட்டப்பணிகள் தாமதமாகிறது’ என்று ஆவேசமாக குறிப்பிட்டார் ஸ்டாலின்.
ரோட்டில் போனால் ஓட்டு விழுமா?
மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னையில் நடந்த பிரதமர் மோடியின் ‘’ரோடு ஷோ’வை, ஈபிஎஸ் கிண்டல் அடித்தார். எனினும், அவர் தனது பேச்சில் பிரதமர் மோடியின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை.
’’இப்போது மத்தியில் இருந்து தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போகிறார்கள் – இதனால் என்ன பிரயோஜனம்?
மத்தியில் இருந்து இங்கு வருபவர்கள், ஏதாவது திட்டத்தைக் கொண்டுவந்து, அதன்மூலம் மக்கள் பயன் அடைந்திருந்தால், அது பிரயோஜனமாக இருக்கும் – ஆனால், அதைவிட்டுவிட்டு, விமானத்தில் இருந்து இறங்குகின்றனர் – ரோட்டில் செல்கின்றனர் – அத்துடன் கதை முடிந்து போய்விட்டது.
மக்கள் வாக்களித்து விடுவார்களா? தமிழக மக்கள் என்ன சாதரணமானவர்களா? என்று சரமாரியாக பாஜகவை நோக்கி வினாக்களை வீசினார், எடப்பாடி பழனிசாமி.
பேட்டி கொடுப்பதே வேலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும், எடப்பாடி பழனிசாமி, இந்தக் கூட்டத்தில் விளாசி தள்ளினார்.
’’புதிதாக ஒரு தலைவர் பாஜகவில் வந்திருக்கிறார் – அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும் – அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பேட்டிக் கொடுப்பார். விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு பேட்டி கொடுப்பார் – பேட்டிக் கொடுப்பதுதான் அவருடைய வேலை.
பேட்டிக் கொடுத்தே தலைவர் பதவியில் இருக்கப் பார்க்கிறார் – பொதுவாக கட்சித் தலைவர்கள் பல வழிகளில் மக்களைச் சந்திப்பார்கள்.
ஆனால், பாஜக தலைவர் அவ்வப்போது பேட்டிக் கொடுத்து மக்களை நம்ப வைத்து, வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார் – அது ஒன்றும் தமிழக மக்களிடத்தில் எடுபடாது’ என அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார், எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்ற, பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை பதிலடி
பாஜக மற்றும் மோடியை எடப்பாடி பழனிசாமி, கடுமையாக விமர்சனம் செய்ததால், அண்ணாமலை ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.
‘அடுத்தத் தேர்தலில் அதிமுக என்ற கட்சியே இருக்காது’ என்ற ரீதியில் அவர் கர்ஜித்துள்ளார், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அண்ணாமலை, ’’தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் பாஜக உள்ளே வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
எங்கெல்லாம் பாஜகவின் கை ஓங்குகிறதோ அங்கெல்லாம் இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து செயல்படுவார்கள் – ஆனால் அந்த இரண்டு கட்சிகளின் வாக்காளர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
2024-ம் ஆண்டில், இந்த இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி கரைந்து போகும் – காரணம், ஒரு கட்சியின் கூட்டணி பலமாக இருப்பதால் அது உடனே கரைய வாய்ப்பில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு திராவிடக் கட்சி கரைந்து போகும்’’ என்று அதிமுகவின் பெயரை குறிப்பிடாமல் அண்ணாமலை தெரிவித்தார்.
மோடி, தமிழகம் வரும் போதெல்லாம், எம்.ஜிஆர். மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அதிமுக மீதான அண்ணாமலையின் விமர்சனம், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– பி.எம்.எம்.