பக்தர்கள் ஆராதிக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், சென்னை மாநகர மக்களின் தாகம் தீர்க்கும் வீராணம் ஏரி, வனப்புமிக்க பிச்சாவரம் சதுப்பு நில காடுகள், பிரசித்தி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகம் என புகழ்பெற்ற இடங்களைக் கொண்ட தொகுதி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி.
கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தின் உள்ள குன்னம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 2009-ம் ஆண்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது சிதம்பரம்.
தமிழகத்தில் நீண்டகாலமாக தனித்தொகுதியாக இருக்கும் தொகுதிகளில் சிதம்பரமும் ஒன்று.
கடந்த கால வெற்றிகள்
காங்கிரஸ் கட்சி 5 முறை வென்றுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளர்கள் நான்கு முறை வாகை சூடியுள்ளனர்.
பாமக 3 முறையும், அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
1984, 89, 91 ஆகிய மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் வள்ளல் பெருமான் தொடர்ச்சியாக வென்று, ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார்.
அதேபோல் 1998, 99 மற்றும் 2004 ஆகிய தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று, பாமகவும் ‘ஹாட்ரிக்’ அடித்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், இந்த தொகுதியில் 5 முறை போட்டியிட்டு இரண்டு முறை வாகை சூடியுள்ளார்.
விவசாயமே, ஆணிவேர்
சிதம்பரம் தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். நெல், கரும்பு, முந்திரி, சோளம், பருத்தி, மிளகாய் ஆகிய பயிர்கள் அதிகளவில் விளைகின்றன.
சிமெண்ட் தொழிற்சாலைகளும், தனியார் கரும்பாலைகளும் உண்டு. இவற்றை தவிர வேறு பிரதான தொழிற்சாலைகள் எதுவும், இங்கே கிடையாது. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
தூர்ந்து கிடக்கும் வீராணம் ஏரியைத் தூர் வார வேண்டும், ஜெயங்கொண்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், புவனகிரியில் மலர்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்டவை, இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
வேட்பாளர்கள் யார்?
திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் திருமாவளவன் 6-வது முறையாக போட்டியிடுகிறார்.
சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சந்திரகாசனுக்கு, அதிமுக மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
பாஜக சார்பில், பெண் வேட்பாளர் கார்த்தியாயினி நிறுத்தப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூரைச் சேர்ந்த ஜான்சி ராணி, களம் இறக்கப்பட்டுள்ளார்.
செல்வாக்கு எப்படி?
மக்களவைத் தேர்தலில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வென்ற நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில், இங்கு திமுக கூட்டணியின் கை ஓங்கி இருந்ததைக் குறிப்பிட வேண்டும்.
குன்னம், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் திமுக வென்றது.
அதன் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காட்டுமன்னார்கோவில் தொகுதியிலும், மற்றொரு கூட்டணிக் கட்சியான மதிமுக அரியலூரிலும் ஜெயித்தன.
சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் அதிமுக வென்றது.
திமுக கூட்டணியில் உள்ள திமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளுக்கு வலுவான தளங்கள் உள்ளன.
பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு பெரும் வாக்கு வங்கி இந்தத் தொகுதியில் உள்ளது. அந்த கட்சி 3 முறை இந்தத் தொகுதியில் வென்றுள்ளது.
டிடிவி தினகரன் கட்சிக்கும் சில இடங்களில் ஓட்டுகள் உண்டு.
அதிமுக கூட்டணியில் தேமுதிக மட்டுமே உள்ளது. அந்தக் கட்சிக்கும் இங்கே பெரிய அளவில் ஓட்டுகள் இல்லை.
விசிக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளுமே சம பலத்தில் உள்ளது என்பதே கள நிலவரம்.
– பி.எம்.எம்.