மத்திய அமைச்சரை எதிர்த்து ‘மாஜி’அமைச்சர் !

நீலகிரி தொகுதி நிலவரம்!

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ’குளு குளு’ ஊட்டி, நீலகிரி மக்களவை தொகுதியின் அழகான அடையாளம்.

மலைப்பிரதேசம் மட்டுமின்றி, சமவெளியும் கலந்த தொகுதியாக உள்ளது நீலகிரி. நீலகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகம். 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 3 முறை திமுகவும், இரண்டு முறை அதிமுகவும் வென்றுள்ளன. இரு முறை பாஜக வாகை சூடியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆர்.பிரபு 5 முறை வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் (தனி) ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி, நீலகிரி.

சுற்றுலாவே பிரதானம்

நீலகிரி மாவட்டத்தில், மலைப்பகுதியை எடுத்துக்கொண்டால், தேயிலைத் தோட்டங்கள் அதிகம். மலை காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியின் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் விவசாயத்தைச் சார்ந்தே உள்ளது.

சுற்றுலாத் தொழில். ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே சோறு போடும். தேயிலை தொழிற்சாலைகளை தவிர வேறு தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இங்கே இருந்த ஒரே ஒரு பொதுத்துறை நிறுவனமான ‘இந்துஸ்தான் போட்டோ பிலிம்’ தொழிற்சாலையும் மூடப்பட்டுவிட்டது.

பிழைப்புக்காக, இளைஞர்களில் முக்கால் வாசி பேர் வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்து விட்டார்கள். சமவெளிப்பகுதியிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மேட்டுப்பாளையம், பவானிசாகரில் போதிய நீர்ப்பாசன வசதிகள் இல்லை.

அத்திக்கடவு – அவிநாசி குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வராத நிலையில், குடிநீர்த் தட்டுப்பாடு மக்களை வதைக்கிறது. சாயப்பட்டறை கழிவுகளின் பாதிப்புகள் அதிகம். அவிநாசி தொகுதியில் நெசவுத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

வேட்பாளர்கள் யார் ? யார்?

தனித் தொகுதியான இங்கு பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் களம் இறங்கியுள்ளார். திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், நிறுத்தப்பட்டுள்ளார்.

மூன்று பேருமே பலமான பின்னணி கொண்டவர்கள் என்பதால், நீலகிரி நட்சத்திர அந்தஸ்து பெற்று, விஐபி தொகுதியாக மாறியுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜெயக்குமார் நிற்கிறார்.

திமுக வேட்பாளர் ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாஜக வேட்பாளர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டத்தையும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் சேலம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

செல்வாக்கு எப்படி?

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் ஆ.ராசா வென்றாலும், இதனை தொடர்ந்து நடந்த சட்டசபைத் தேர்தலில், அதிமுகவின் ஆதிக்கமே அதிகம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் ஆர்.கணேஷ், குன்னூரில் திமுகவின் கா.ராமச்சந்திரன் வென்றனர்.

கூடலூரில் அதிமுகவின் பொன்.ஜெயசீலன், மேட்டுப்பாளையத்தில் அதிமுகவின் ஏ.கே.செல்வராஜ், அவினாசியில் அதிமுகவின் தனபால், பவானிசாகரில் அதிமுகவின் பண்ணாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். அதாவது 6 சட்டசபை தொகுதிகளில் 4 ல் அதிமுக வென்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் இந்த வெற்றி எதிரொலிக்குமா என்பது தெரியவில்லை. பாஜக, திமுக, அதிமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது என்பதே கள நிலவரம்.

– பி.எம்.எம்.

#நீலகிரி_மக்களவைத்_தொகுதி #காங்கிரஸ் #திமுக #அதிமுக #பாஜக #எல்_முருகன் #ஆ_ராசா #லோகேஷ்_தமிழ்செல்வன் #ஜெயக்குமார் #நாம்_தமிழர்_கட்சி #மக்களவைத்_தேர்தல் #Lok_Sabha_election_2024 #nilgiri_constituency #a_rasa #lokesh_tamilselvan #jayakumar #l_murugan #congress #dmk #admk #bjp

a rasajayakumarl muruganlokesh tamilselvannilgiri constituencyஅதிமுகஆ.ராசாஎல்.முருகன்காங்கிரஸ்திமுகநீலகிரி மக்களவைத் தொகுதிபாஜகலோகேஷ் தமிழ்செல்வன்ஜெயக்குமார்
Comments (0)
Add Comment