வைகோ மகன் களம் காணும் திருச்சி!

மலைக்கோட்டையில் வெற்றிமாலை யாருக்கு ?

காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது திருச்சி. மலைக்கோட்டை மாநகரம் எனும் அடைமொழியும் இதற்கு உண்டு. தமிழகத்தின் மையப்பகுதி.

மாநிலத்தின் தென் முனையில் இருந்து, சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, மக்கள் வருவது பெருத்த சிரமமாகவே உள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு வருவதற்கு ஏதுவாக நடுநாயகாக உள்ள திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் விரும்பினார்.

1983-ம் ஆண்டு திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை, எம்.ஜி.ஆர். அறிவித்தார். சென்னையை விட்டு வெளியே வருவதற்கு விருப்பம் இல்லாத, பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இதனை எதிர்த்தனர்.

இதனால், திருச்சியைத் தலைநகராக்கும் திட்டத்தைப் புரட்சித்தலைவர், கைவிட வேண்டியதாகிவிட்டது. அன்று மட்டும் திருச்சி தலைநகரம் ஆகி இருந்தால், பிரமாண்ட வளர்ச்சி கண்டிருக்கும்.

எம்.ஜி.ஆர். கனவு நிறைவேறாததால், வெறும் மக்களவைத் தொகுதியாகவே நீடிக்கிறது திருச்சி.

தலைவர்கள் வென்ற தொகுதி

திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன.

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம், மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வென்ற தொகுதி.

காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் நான்கு முறை இங்கு எம்.பி.யாக இருந்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வென்ற, ஸ்ரீரங்கம், சட்டமன்ற தொகுதி, இந்த மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது.

பெருமளவு நகர் புறப்பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் ’பாரத மிகுமின் நிறுவனம்’ உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

தொழிலாளர்கள் கணிசமாக உள்ள தொகுதி என்பதால் நீண்டகாலமாகவே இடதுசாரி கட்சிகள் இங்குப் போட்டியிட்டு வென்றுள்ளன.

வேட்பாளர்கள் யார், யார்?:

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் திருச்சி மண்டலத்தை தன் கைக்குள் வைத்திருந்தவர் எஸ்.திருநாவுக்கரசர்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அவரின், அரசியல் பயணத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் ஜெயலலிதா அணியில் இருந்தவர், அவருடன் கருத்து வேறுபாடு உருவானதால், சாத்தூர் ராமச்சந்திரன், உள்ளிட்டோருடன் இணைந்து ‘நால்வர் அணி’ எனும் பெயரில் தனி அணியாக செயல்பட்டார்.

ஒரு கட்டத்தில் தனிக்கட்சி தொடங்கினார். பிறகு பாஜகவுக்கு சென்று மத்திய அமைச்சர் பதவி வகித்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார்.

கடந்த முறை திருச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட, திருநாவுக்கரசர் 4,59,286 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்த முறையும் தனக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என மலைபோல், நம்பியிருந்தார், திருநாவுக்கரசர்.

ஆனால், திருச்சி மக்களவைத் தொகுதி, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். அரசியலுக்குப் புதியவரான துரை, முதன் முறையாக தேர்தல் களத்துக்கு வந்துள்ளார்.

அதிமுக சார்பில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ப.கருப்பையா போட்டியிடுகிறார். இவர் மணல் ஒப்பந்ததாரர் கரிகாலனின் சகோதரர்.

பாஜக, தனது கூட்டணிக் கட்சியான அமமுகவுக்கு, இந்தத் தொகுதியை ஒதுக்கியுள்ளது.

அமமுக சார்பில் மாநகராட்சி கவுன்சிலர் ப.செந்தில்நாதன் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராஜேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும், அதுதொடர்பான சட்டப் போராட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்தவர்.

மலைக்கோட்டை யாருக்கு?

அரசியலில் திருச்சி மாநகரம், திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் திருச்சியில் இருந்து, தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.

அதிமுக, மதிமுக, அமமுக ஆகிய மூன்று கட்சி வேட்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது.

கடந்தத் தேர்தலில் தனித்து நின்று, அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார்.

இப்போது அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் மாநராட்சி கவுன்சிலர்.

”இந்த முறை பாஜக, பாமக மற்றும் சில கட்சிகள் ஆதரவு இருப்பதால், எங்கள் வேட்பாளர் செந்தில்நாதன் வெல்வார்” என அமமுகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற எம்.பி தேர்தலில் அதிமுக கூட்டணியில் ப.குமார் 4 லட்சத்து 58 ஆயிரத்து 478 வாக்குகள் வாங்கி வென்றார். அந்த தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது.

இப்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. ”ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும். எனவே நாங்களே வெல்வோம்” என இரட்டை விரலை காட்டுகிறார்கள், அதிமுகவினர்.

கடந்த மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திருநாவுக்கரசர் 6 லட்சத்து 21 ஆயிரத்து 285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இப்போதைய தேர்தலில் அதே கூட்டணி நீடிக்கிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், திமுக அணியில் இணைந்துள்ளது.

கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் மநீம வேட்பாளர் வி.ஆனந்தராஜா 42,134 வாக்குகளும் பெற்றிருந்தார்.

”துரைக்கு, வைகோ மகன் என்பது கூடுதல் தகுதி உள்ளது. கடந்தத் தேர்தலில் பெற்ற அதே வாக்குகளை பெற்றாலேயே துரை வைகோ, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து விடுவார்” என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள், மதிமுகவினர்.

மலைக்கோட்டை மாநகரம், அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அனைத்து கட்சிகளுக்கும் உள்ள நிலையில், திருச்சி யாருக்கு திருப்புமுனையைத் தரும் என்பது ஜூன் மாதம் 4-ம் தேதி தெரியவந்துவிடும்.

– பி.எம்.எம்.

s thirunavukarasarTrichy ConstituencyTrichy Lok Sabha Constituencyஎஸ்.திருநாவுக்கரசர்திமுகதிருச்சி தொகுதிதிருச்சி மக்களவைத் தொகுதிதுரை வைகோ
Comments (0)
Add Comment