டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து 50 சதவீதமாக உள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்,
ஒன்றிய அரசுப் பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், 2025ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம், உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு ஏழரை லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்,
2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பெறப்பட்ட அனைத்து கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும், மாநில அரசுகளுடன் ஆலோசித்து தேசியக் கல்விக் கொள்கை திருத்தியமைக்கப்படும்.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் பட்டியலின மாணவர்களுக்காக உண்டு, உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும், கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க ரோஹித் வெமுலா பெயரில் சட்டம் கொண்டு வரப்படும்,
வேளாண் விலை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்எஸ் சுவாமிநாதனின் பரிந்துரை அமல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமில்லாமல், பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு வணிகர்களுக்கு ஏற்ற புதிய ஜிஎஸ்டி முறை கொண்டு வரப்படும், விவசாயி இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யப்படும், நூறுநாள் வேலைத்திட்ட ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்,
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் ‘மகாலட்சுமி’ திட்டம் செயல்படுத்தப்படும், 2009-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்விச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12-ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி பாடத்திட்டத்தில் சமூகநீதி குறித்த பாடங்கள் சேர்க்கப்படும், ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும், ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்,
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அதோடு, மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான பென்சன் ஆயிரம் ரூபாயாக ஆக அதிகரிக்கப்படும், மீனவர்களுக்கு டீசலுக்கான பழைய மானியம் தொடரும், அரசு தேர்வுகள், அரசு பதவிகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் ரத்து செய்யப்படும், திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்தலில் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான பாகுபாடுகள் களையப்படும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும், 10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும், பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும்.
பாஜகவில் சேர்ந்து குற்ற வழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள், பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும், செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மீண்டும் கொண்டுவரப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இது தவிர கட்சி தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்திறன் மற்றும் வாக்குச்சீட்டின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்யப்படும்.
இவிஎம்மில் வாக்களித்ததை விவிபாட் இயந்திரத்தில் சரிபார்க்கும் முறை கொண்டுவரப்படும், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிடும் அனைத்து சட்டங்களும் விதிகளும் ரத்து செய்யப்படும், அங்கன்வாடி பணியிடங்களை இரட்டிப்பாகி 14 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ராணுவ சேர்க்கைக்கான அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும், 10 ஆண்டுகளில் பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்கள் திரும்ப பெறப்படும்,
ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி, மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும், மீனவ மக்களுக்கென தனி வங்கி, மீன்பிடிப்பதற்கென தனி துறைமுகங்கள் கொண்டுவரப்படும், ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு 25 லட்சமாக அதிகரிக்கப்படும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும், 21 வயதுக்கு கீழ் உள்ள திறமையுள்ள வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிம் ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது.
#காங்கிரஸ் #மல்லிகார்ஜுன_கார்கே #சோனியா_காந்தி #ராகுல்_காந்தி #கே_சி_வேணுகோபால் #ப_சிதம்பரம் #Congress_Manifesto #NEET #காங்கிரஸ்_தேர்தல்_அறிக்கை #congress_releases_parliament_election_manifesto