ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 25 பேர் போட்டி!

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக  வரும் 19-ம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த மாதம்  20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி நிறைவடைந்தது. 1,403 வேட்பாளர்கள் சார்பில் 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

28-ம் தேதி நடந்த மனுக்கள் பரிசீலனையின்போது, 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மனுக்களை வாபஸ் பெறும் கடைசி நாளான சனிக்கிழமை 135 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

பின்னர்  தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

முழு விவரம் வருமாறு:

தொகுதி வாரியாக வேட்பாளர்கள்:

தொகுதி                  மொத்த வேட்பாளர்கள்

1. திருவள்ளூர்                – 14

2. வட சென்னை            – 35

3. தென் சென்னை       – 41

4. மத்திய சென்னை   – 31

5. ஸ்ரீபெரும்புதூர்         – 31

6. காஞ்சிபுரம்                – 11

7. அரக்கோணம்            – 26

8. வேலூர்                           – 31

9. கிருஷ்ணகிரி             – 27

10.தர்மபுரி                        – 24

11.திருவண்ணாமலை   – 31

12.ஆரணி                              – 29

13.விழுப்புரம்                      – 17

14.கள்ளக்குறிச்சி             – 21

15. சேலம்                               – 25

16. நாமக்கல்                        – 40

17. ஈரோடு                             – 31

18. திருப்பூர்                          – 13

19. நீலகிரி                             – 16

20. கோயம்புத்தூர்             – 37

21. பொள்ளாச்சி                 – 15

22. திண்டுக்கல்                   – 15

23. கரூர்                                   – 54

24. திருச்சி                              – 35

25. பெரம்பலூர்                    – 23

26.கடலூர்                               – 19

27.சிதம்பரம்                          – 14

28.மயிலாடுதுறை               – 17

29. நாகப்பட்டினம்               – 09

30. தஞ்சாவூர்                          – 12

31. சிவகங்கை                       – 20

32. மதுரை                                 – 21

33. தேனி                                    – 25

34. விருதுநகர்                         – 27

35. ராமநாதபுரம்                   – 25

36. தூத்துக்குடி                        – 28

37. தென்காசி                          – 15

38. திருநெல்வேலி                 – 23

39. கன்னியாகுமரி                – 22

விசிகவுக்கு பானை – துரைக்கு தீப்பெட்டி

சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், தனக்கு பானை சின்னம் ஒதுக்குமாறு, தேர்தல் அலுவலரிடம்  கோரி இருந்தார்.

பானை சின்னத்தை வேறு எந்த வேட்பாளரும் கேட்காததால் திருமாவளவனுக்கு பானை  சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதேபோன்று விழுப்புரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கக் கோரி இருந்தார்.

தேர்தல் ஆணையம் மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனால், தீப்பெட்டி அல்லது காஸ் சிலிண்டர் சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு துரை வைகோ கோரியிருந்தார். அதன்படி துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஓபிஎஸ்சுக்கு பலாப்பழம்

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

தனக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இரட்டை சின்னம் கிடைக்கவில்லை.

பின்னர் பலாப்பழம், திராட்சைப் பழம், வாளி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு ராமநாதபுரம் தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ். கோரியிருந்தார்.

ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட 5 சுயேச்சைகளும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள். அவர்களும், ஓபிஎஸ் கேட்ட 3 சின்னங்களை தங்களுக்கு ஒதுக்குமாறு கோரினர்.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்கினார். அதனடிப்படையில் ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது.

ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு வாளி சின்னமும், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு திராட்சை சின்னமும் ஒதுக்கப்பட்டன.

ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வத்துக்கு கரும்பு விவசாயி சின்னம், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வத்துக்கு கண்ணாடி டம்ளர் சின்னம், மலையாண்டி மகன் பன்னீர்செல்வத்துக்கு பட்டாணிச் சின்னம் ஒதுக்கப்பட்டன.

வேட்பாளர்கள் அனைவருக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதால், தமிழக தேர்தல் களத்தில்  அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.

– பி.எம்.எம்.

durai vaicoelection commissionfinal-candidates listmdmkopsthol thirumavalavanvckஓபிஎஸ்சிதம்பரம்துரை வைகோதொல்.திருமாவளவன்மதிமுகவிசிக
Comments (0)
Add Comment