தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மனுத்தாக்கல் முடிவடைந்தது. 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூரில் 73, வடசென்னையில் 67, தென்சென்னையில் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. .
சென்னை, கோவையில் தகராறு
வட சென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ மீது உள்ள கொலை முயற்சி வழக்கு குறித்து, மனுவில் குறிப்பிடாததால், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியது.
அந்தத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பிரமாண பத்திரம் பெற்ற நோட்டரி பப்ளிக்கின் உரிமம் ஏற்கனவே காலாவதி ஆகிவிட்டது என்று பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வலியுறுத்தினார்.
உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டதால், அவர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டன. கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு தாக்கலில் விதிமீறல் உள்ளதாக கூறி, நாம் தமிழர், அதிமுக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
அவரது மனு ஏற்கப்பட்டது. அவர் தாக்கல் செய்த இன்னொரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தேனி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரனின் பிரமாண பத்திரத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய இயலாததால், அதை ஆய்வு செய்த பிறகே ஏற்க வேண்டும் என எதிர்தரப்பினர் கூறினர்.
இதனால் அவரது மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. 3 மணி நேரம், இது தொடர்பாக விவாதம் நடந்தது. பின்னர் தினகரன் மனு ஏற்கப்பட்டது.
முன்னாள் எம்பி மனு தள்ளுபடி
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதே பெயரில் உள்ள 4 பேர் என 5 சுயேச்சைகளின் மனுக்களும் ஏற்கப்பட்டன.
நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மனுக்களை ஏற்க எதிர்தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இரண்டு வேட்பாளர்களும், தங்கள் மீதான வழக்குகளை மறைத்துவிட்டதாக புகார் கூறப்பட்டது. எனினும் அவர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டன.
நெல்லையில் காங்கிரஸ் முன்னாள் எம்பி ராமசுப்புவும், அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து, போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
664 மனுக்கள் நிராகரிப்பு
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 1,749 மனுக்களில், 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டு, 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கரூரில் அதிகபட்சமாக 56 மனுக்கள், தென்சென்னையில் 53 மனுக்கள், வடசென்னையில் 49 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 14 மனுக்கள் ஏற்கப்பட்டன.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள். நாளையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர்களுக்கான சின்னங்களும் நாளை ஒதுக்கப்படும்.
– பி.எம்.எம்.