காங்கிரஸ் போட்டி வேட்பாளராக முன்னாள் எம்.பி. திடீர் மனு!

திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம், திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி, ‘நெல்லை எனக்குத் தொல்லை’ எனச் சொல்வது வழக்கம்.

அந்த நெல்லை, இப்போது காங்கிரஸ் கட்சிக்குத் தொல்லையாக உருவெடுத்துள்ளது.

நெல்லை மக்களவைத் தொகுதியில் கடந்த முறை திமுக வேட்பாளர் ஞானதிரவியம் போட்டியிட்டு ஜெயித்தார். இந்த முறை அந்தத் தொகுதியை, கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்குத் தாரை வார்த்துவிட்டது திமுக.

நெல்லையில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் எம்.பி.க்கள் தனுஷ்கோடி அதித்தன், ராமசுப்பு உள்ளிட்ட அரை டஜன் பேர் ஆயத்தமாக இருந்தனர்.

ஆனால் கன்னியாகுமரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் என்பவரை, காங்கிரஸ் மேலிடம் வேட்பாளராக அறிவித்துள்ளது.

அடுத்த ஊர்க்காரரை வேட்பாளராக நிறுத்தி இருப்பது, நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ராபர்ட் புரூஸ் மனு தாக்கல் செய்தார்.

அவர் மனு தாக்கல் செய்து விட்டுச்சென்ற பின், முன்னாள் எம்.பி. ராமசுப்பு அங்கு வந்தார். அவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமசுப்பு, “காங்கிரஸ் கட்சி சார்பில் நான் நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறேன்” எனச் சொல்லி விட்டு நகர்ந்தார்.

தூத்துக்குடியிலும் இது போன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் அவருக்கு எதிராக அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரர் ராஜா, நேற்று மனு தாக்கல் செய்தார். இவர் ‘நாம் இந்தியர்’ என்ற கட்சியின் நிறுவனர் ஆவார்.

சின்னத்தை மறந்த ஜி.கே. வாசன்

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா.வுக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு, அந்தக் கட்சியின் வேட்பாளராக வேணுகோபால் போட்டியிடுகிறார். அவரது சின்னம் சைக்கிள்.

அவரை ஆதரித்து மாங்காட்டில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார்.

”நமது வேட்பாளர் வேணுகோபாலுக்கு கைச் சின்னத்தில் வாக்களியுங்கள்” என வாசன் உரத்த குரலில் சொல்ல, கட்சி நிர்வாகிகள் அதிர்ந்து போனார்கள்.

காங்கிரசின் சின்னமான கை சின்னத்துக்கு வாசன் ஓட்டு கேட்டதை நிர்வாகிகள் சுட்டிக்காட்ட, அதன் பின்னரே அவர் சுதாரித்தார்.

தன் கையில் வைத்திருந்த சின்ன சைக்கிளை தூக்கிக்காட்டி, ”சைக்கிள் சின்னத்தில் வாக்களியுங்கள்” எனச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பணமாலை அணிந்து வந்த வேட்பாளர்

மத்திய சென்னை தொகுதியில் தர்மபுரியைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர், சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர் சந்தன வீரப்பனின் மருமகன் ஆவார். பணமாலை அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

’’லஞ்சத்தை ஒழிப்பதற்காக நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் – ஊழல், பணத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது – எனவே மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பணமாலை அணிந்து வந்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

’ரத்தம் கக்கி சாவீங்க..’

மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்யும் கூட்டம், அங்குள்ள செல்லூர் பகுதியில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, கட்சிக்காரர்கள் தங்களுக்குள் உரத்தக் குரலில் பேசிக்கொண்டதால், செல்லூர் ராஜு ’டென்ஷன்’ ஆனார்.

”நீங்க யாரும் சிரமப்பட்டு உட்கார்ந்து இருக்க வேண்டாம் – எந்திருச்சு போறவங்க தாராளமா போகலாம் – உங்களுக்கு 5 நிமிடம் ‘டைம்’ தர்ரேன் – இங்கே இருந்தா சலசலன்னு பேசக்கூடாது – இடையில் எந்திரிக்கக் கூடாது – அப்படி உள்ளவங்க மட்டும் உட்காரலாம் – இல்லைன்னா ரத்தம் கக்கி சாவீங்க” என கொந்தளிக்க, கட்சிக்காரர்கள் ஆடிப்போனார்கள்.

தேர்தல் முடியும் வரை இன்னும் என்னென்ன கூத்துக்கள் அரங்கேறப் போகின்றனவோ?!

– பி.எம்.எம்.

agni azhvarcongressdanushkodi athithandmkgk vasangnanathiraviyamkanimozhikarunanithinellairamasubbusellur rajuஅக்னி ஆழ்வார்கருணாநிதிகனிமொழிகாங்கிரஸ்செல்லூர் ராஜுஞானதிரவியம்தனுஷ்கோடி அதித்தன்திமுகதிருநெல்வேலிநெல்லைமக்களவைத் தொகுதிராமசுப்புஜிகே வாசன்
Comments (0)
Add Comment