தமிழில் விமர்சனம் கடமையாக மாறிவிட்டது!

  • கவிஞர் கோ. வசந்தகுமாரன்

இன்று எல்லோரும் எழுதத் தொடங்கிவிட்டார்கள். எழுதுவதற்கான தளங்கள் திறந்தே கிடக்கின்றன. ‘திறந்துவிடு சீசே’  என்பது அவர்களது படைப்புகளின் தாரக மந்திரமாக இருக்கிறது.

படைப்பாளிகள் பெருகிவிட்டார்கள். வாசகர்களின் எண்ணிக்கைதான் இளைத்துப்போய் விட்டது. ஆனாலும் படைக்கிறார்கள். இலக்கிய உலகத்திற்கு இது ஆரோக்கியமான சூழ்நிலை.

யார் வேண்டுமானாலும் எழுதலாம். நல்ல எழுத்துக்களைக் காலம் சலித்து எடுத்துக்கொள்ளும் என்கிற சமாதானத்தை ஏற்றக்கொள்ளும் பக்குவம் அடைந்திருக்கிறார்கள் விமர்சகர்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முக்கலைகளும் காலத்தின் தட்பவெப்ப நிலைக்கேற்ப புதிய பரிணாமங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டன.

தான் எழுதுவதுதான் எழுத்து என்கிற திமிரைத் தன்னம்பிக்கை என்று ஏற்றுக்கொள்வது உத்தமம். படைப்புலகு சிறக்க இந்த உத்தம குணம் அவசியம்.

எதற்காக எழுதுகிறாய் என்கிற கேள்வியை முன்வைத்தால் பதிலாக வருவதும் ஒரு படைப்பாகிவிடுகிற மாயம் நிகழ்கிறது. கேள்விகளால் நாம் அடைகிற ஆதாயம் இது.

பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடந்தாலும் இலக்கியவாதிகள் பரீட்சார்த்தமான படைப்புருவாக்கத்தில் ஈடுபடுகிறார்கள். கவிதைகள் விற்பதில்லை என்கிற குற்றச்சாட்டு பதிப்பகத்தார்களால் காலம் காலமாக முன்வைக்கப்படுகிறது.

ஆனாலும் கவிஞர்கள் கைக்காசை செலவழித்து புத்தகம் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். கவிதை எழுதுவதை ஒரு தவம் போல் கருதுகிற கவிஞர்களுக்கு வாசகன் கடவுளாகத் தெரிகிறான்.

கவியரங்குகளை பட்டிமன்ற மேடைகள் கபளீகரம் செய்துவிட்டன. எழுதிய கவிதைகளைத் தனக்குத்தானே வாசித்துக்கொண்டு மானசீகமாக தன்னைத் தானே பாராட்டிக்கொண்டு கவிஞன் ஒரு மயக்க நிலைக்கு ஆட்பட்டுவிடுகிறான்.

சிறுகதை எழுத்தாளர்கள் கவனம் ஈர்க்கிறார்கள். கொஞ்சம் சம்பாதிக்கிறார்கள்.
தமிழைத் தவறாக எழுதும்போக்கு எல்லோரிடமும் காணப்படுகிறது. ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதுபவர்களைக் காண்பது அரிதாக இருக்கிறது.

சாகித்ய விருது வாங்கிய படைப்பாளிகளும் தமிழைப் பிழையாகத்தான் எழுதுகிறார்கள். விமர்சகர்களும் அருகிப் போய்விட்டார்கள்.

விமர்சனத்தையும் படைப்பு ஸ்தானத்தில் வைத்து நாம் பார்ப்பதில்லை என்பதும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். சார்பு நிலை இல்லாத விமர்சகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

படைப்பில் நேர்மையும் உண்மையும் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில் அதைச் சுட்டும் கடமை விமர்சகனுக்கே உண்டு. படைப்பாளிகளுக்கும் வாசகனுக்கும் பாலமாகச் செயல்படுகிறவன் விமர்சகன்.

விமர்சனக் கடிவாளம் இல்லையெனில் சிந்தனைக் குதிரை தாறுமாறாக ஓடி இலக்கைவிட்டு விலகிச் சென்றுவிடக்கூடும்.

விமர்சனத்தை ஒரு கலையாகக் கையாளாமல் ஒரு கடமையாகக் கையாள்வதைத் தவிர்க்கிற விமர்சகனே இப்போது தேவைப்படுகிறான்.

Comments (0)
Add Comment