இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு ஆயத்தங்கள் துவங்கிவிட்டன.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் மோதிக் கொள்கின்றன.
அயோத்தி ராமர் கோவில் திறப்புக்குப் பிறகு மதவாதம் குறித்து பல்வேறு கேள்விகள் தொடர்ந்து பொதுவெளியில் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பொருளாதார நிலையிலும் நாம் ஆரோக்கியமான சமச்சீரான தன்மையுடன்தான் இருக்கின்றோமா?
அண்மையில் மத்திய நிதியமைச்சரால் இடைக்கால நிதி நிலை அறிக்கை வாசிக்கப்பட்டபின்பும் பொருளாதாரம் குறித்து நாம் நம்பிக்கை கொள்ள முடியவில்லை.
தேர்தலை எதிர்நோக்கி தேசிய அளவில் பல்வேறு விதமான திட்டங்கள் மத்திய அரசால் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக, அண்மையில் மத்திய பிரதேசத்தில் சுமார் 7 ஆயிரத்து 550 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைத்து இருக்கிறார் பிரதமர் மோடி.
அதேசமயம் தமிழ்நாட்டை பெரு வெள்ளம் பாதித்து அதை மத்திய நிதியமைச்சர் உள்ளிட்ட பலரும் வந்து பார்வையிட்டு, சேதத்தை மதிப்பிட்டுச் சென்று பிறகும் தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான வெள்ள நிவாரணத் தொகையும் இதுவரை கிடைக்காததற்கு என்ன காரணம்?
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.20 ஆயிரத்து 140 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர், “வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம்” என்று உறுதியளித்தும் வெள்ள நிவாரணத் தொகை இதுவரை தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதியுதவி அளித்தால், அதை தமிழக ஆளுங்கட்சியான திமுக தன்னுடைய தேர்தல் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளுமோ என்கிற சந்தேகம் கூட மத்திய அரசுக்கு இருக்கலாம்.
ஆனால், மத்திய அரசின் இந்தத் தொடர் புறக்கணிப்பால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்திற்காக மக்களை சந்திக்கும்போது, புறக்கணிப்பு தொடர்பான கேள்விகளை, சம்மந்தப்பட்டக் கட்சிகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
#அயோத்தி_ராமர்_கோவில் #மத்திய_நிதியமைச்சர் #இடைக்கால_நிதி_நிலை-அறிக்கை #பொருளாதாரம் #பிரதமர்_மோடி #மத்திய_அர #தமிழ்நாடு #வெள்ள_நிவாரணத்_தொகை #திருச்சி #திமுக #ayothi_ramar_temple #Economic_Survey #dmk #pmmodi #trichy