ரிசார்ட் பாலிடிக்ஸ் தொடங்கியது எப்படி?

இந்திய அரசியலில் இப்போது அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தை ‘ரிசார்ட் பாலிடிக்ஸ்’. தமிழக அரசியல் ஸ்டைலில் சொல்வதென்றால் ‘கூவத்தூர் பார்முலா’.

அதாவது தங்கள் ஆட்சிக்கு ஏதாவது ஆபத்து வந்தாலோ, அல்லது தங்கள் கட்சி உடையும் நிலையில் இருந்தாலோ, அதைக் காப்பாற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் எம்.பிக்களையோ அல்லது எம்.எல்.ஏக்களையோ ஏதாவது ஒரு ரிசார்ட்டுக்கு (சுற்றுலா விடுதிகள்) அழைத்துச் செல்வதுதான் இந்த ரிசார்ட் பாலிடிக்ஸ்.

அவ்வாறு அழைத்துச் செல்லும் மக்கள் பிரதிநிதிகளை பிரச்சினை தீரும் வரை அரசியல் கட்சிகள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.

கடந்த ஒரு வார காலமாக இந்த வார்த்தை மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதலாவதாக ஜார்கண்டில் அம்மாநில அரசு நம்பிக்கை வாக்கு கோரியிருந்த நேரத்தில், வாக்கெடுப்புக்கு முன்தினம் வரை ஆட்சியில் இருந்த ஜே.எம்.எம் கட்சி, தங்கள் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களை கர்நாடக மாநிலத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு கடத்திச் சென்றது.

இன்னொரு பக்கம் பீகாரில் நிதிஷ் குமார் அரசு நம்பிக்கை வாக்கு கோர உள்ள நிலையில், தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை தடுக்க, காங்கிரஸ் கட்சி அவர்களை ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

தேவிலால்

இந்த ரிசார்ட் பாலிடிக்ஸை இந்தியாவில் முதலில் தொடங்கி வைத்தது யார் தெரியுமா? இந்தியாவின் முன்னாள் பிரதமரான தேவிலால்தான். 1982-ம் ஆண்டுதான் இந்தியாவில் ரிசார்ட் பாலிடிக்ஸ் அறிமுகமான ஆண்டு.

1982-ம் ஆண்டில் ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

மொத்தமுள்ள 90 இடங்களில் தேவிலால் தலைமையிலான இந்திய தேசிய லோக் தாளம் – பாரதிய ஜனதா கூட்டணிக்கு 37 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 36 இடங்களும் கிடைத்தன. சிறு கட்சிகளும், சுயேச்சைகளும் மற்ற இடங்களை வென்றனர்.

இந்தச் சூழலில் 37 தொகுதிகளை வென்ற இந்திய தேசிய லோக் தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

ஆனால், ஹரியானா ஆளுநர் அதை ஏற்காமல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பஜன்லால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

அப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இதை தேவிலால் ஏற்கவில்லை. பதவியேற்ற பஜன்லால் அரசு நம்பிக்கை கோர இருந்த நிலையில், தங்கள் கூட்டணி எம்.எல்.ஏக்கள் மற்றும் சில சுயேச்சை உறுப்பினர்களை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அவர்களை அவர் ரிசார்ட்டில் அடைத்து வைத்தது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. அவர்களை மீட்க காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த நேரத்தில் லச்சன் சிங் என்ற சட்டமன்ற உறுப்பினர், அந்த ரிசார்ட்டின் மழைநீர் கால்வாய் வழியாக வெளியேறி பஜன்லாலிடம் வந்து அவருக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார். அப்போது அது நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து பஜன்லால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். 1982-ம் ஆண்டில் அமைந்த அந்த ஆட்சியை 1987-ம் ஆண்டுவரை தேவிலாலால் அகற்ற முடியவில்லை.

இந்திய அரசியலில் ரிசார்ட் பாலிடிக்ஸ் என்ற வார்த்தைக்கு அடித்தளமிட்ட முதல் சம்பவம் இது.

இதைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து தனது மாநில அரசைக் காப்பாற்ற, 80 எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டுக்கு அனுப்பி தங்கவைத்தார் அப்போதைய கர்நாடக முதல்வரான ராமகிருஷ்ண ஹெக்டே.

அந்த காலத்தில் ரிசார்ட் பாலிடிக்ஸை மக்கள் ஆச்சர்யமாக பார்த்தார்கள். அவர்களுக்கு அது புதுமையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பல மாநிலங்களில் அது நடைமுறையாகவே மாறிவிட்டது.

குறிப்பாக எந்த தேர்தலிலாவது தொங்கு சட்டசபை வந்தால் அங்குள்ள கட்சிகள் தங்கள் மக்கள் பிரதிநிதிகளை உடனடியாக ரிசார்ட்டில் அடைத்து வைப்பது ஜனநாயக நடைமுறையாகி விட்டது.

வாழ்க ஜனநாயகம்!

– திரிபுர சுந்தரி

Comments (0)
Add Comment