தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள்!

கடந்த 2022-ல் செல்வன் அன்புவின் தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள் புத்தகம் வெளியானது. 

செல்வன் அன்புவின் முகநூல் பதிவுகள் ஏற்கனவே பரிட்சையம் ஆனவர்களுக்கு அவரது எழுத்தின் சுவாரஸ்யம் தெரியும். அதே அளவு சுவாரஸ்யத்தை துளி கூடக் குறையாமல் இந்தப் புத்தகத்திலும் கொடுத்துள்ளார்.

இன்டர்நெட் எல்லாம் இல்லாத அந்த 90 காலகட்டங்களில் திரைப்படங்களும், திரையிசைப் பாடல்களும் தான் மிகப்பெரிய பொழுதுபோக்கு. எனவே அவை மனதுக்கு நெருக்கமானதாக அமைந்தன.

அதிலும் குறிப்பாக அந்தப் படத்தில் நடித்த நடிகர் யார், இயக்குனர் யார், பாடகர் யார் என எல்லா விபரங்களையும் அறிந்து வைத்திருந்தோம்.

சினிமா செய்திகளை எல்லாம் பத்திரிகைகளில் ஆர்வமாக தேடித்தேடிப்படிப்போம். அந்த உணர்வை இந்தப்புத்தகம் கொடுத்தது.

70, 80, 90-களில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த பல இயக்குனர்களை இன்று தமிழ்த் திரை மட்டுமல்ல தமிழ்ச் சமூகமே மறந்து விட்டது. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை தான்.

ஆனால், அவ்வாறு மறந்து போன, மறக்கப்பட்ட அற்புதமான திரைக்கவியங்களைத் தந்த இயக்குநர்கள் பற்றிய நமக்குத் தெரியாத பல சுவாரஸ்யமான தகவல்களை சொல்கிறது இந்த நூல்.

தெரிந்த தகவல்களும் கூட மறந்து போன நிலையில் இன்று மீண்டும் படிக்கும் போது “அட ஆமால்ல” என பழைய நாஸ்டாலஜியாவை மனதுக்குள் கிளறிவிடுகிறது.

இந்த தகவல்களையெல்லாம் எப்படி சேகரித்தார் என்ற வியப்பு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தது முதல் இறுதி வரை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

நடிகர்களாக பெரிய திரையிலும் சின்னத் திரையிலும் நமக்குப் பார்த்துப் பிடித்துப்போன மௌளி, யூகி சேது, ரா சங்கரன், எல் ராஜா, கொச்சின் ஹனீபா, பிரதாப் போத்தன் போன்ற பலரின் இயக்குனர் அடையாளங்களை அழகாகவும் சுருக்கமாகவும் விபரித்திருக்கிறார்.

தமிழ் சினிமா மீது ஆர்வம் உள்ள இன்றைய தலைமுறை கூட படித்து தெரிந்து கொள்ள ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

மறக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முக்கிய பல முகங்களை அழகாக ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது இந்தப் புத்தகம்.

******

நூல்: தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள்
ஆசிரியர்: செல்வன் அன்பு
பதிப்பகம்: வாசகசாலை
விலை: ரூ.161/-

Comments (0)
Add Comment