நூல் விமர்சனம்:
‘எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்’ நூலின் தலைப்பு மிக நன்று. எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நினைவூட்டியது.
அமிட் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் க. திருவாசகம் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். வருமான வரி கூடுதல் ஆணையர் சே.ரெங்கராஜன் வாழ்த்துரை வழங்கி உள்ளார்.
நூலாசிரியர் எழுத்தாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் பன்முக ஆற்றலாளர். முகநூல் நண்பர். புகைப்படக் கலைஞர்.
மதுரையைச் சுற்றியுள்ள இடங்களை படங்கள், எழுத்து, அஞ்சல் அட்டைகளாக வெளியிட்டுள்ளார். வெற்றிமுகம் என்ற நூலின் மூலம் பரவலாக அறியப்பட்டவரின் நூல் இது.
நூலின் தொடக்கத்தில் உள்ள கவிதையிலிருந்து சில வரிகள்.
நீங்கள் யார்? என்பதை
உங்கள் எண்ணங்கள் காட்டிவிடும்,
உங்கள் எண்ணங்கள் என்ன? என்பதை
உங்கள் செயல்கள் விளக்கிவிடும்!
மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்றனர். நல்லதையே எண்ண வேண்டும், எண்ணம் நல்லது என்றால் செயலும் நல்லதாக இருக்கும். தீய எண்ணங்கள் வேண்டாம், எதிர்மறை சிந்தனை வேண்டாம்.
எதிலும் உடன்பாட்டுச் சிந்தனை வேண்டும். உடன்பட்டு சிந்திக்க வேண்டுமென்று நூலில் விளக்கி உள்ளார்.
நூலாசிரியர் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர். சுற்றுலாத் துறை சார்பாக நடக்கும் விழாக்கள் என்றால் தவறாமல் வந்திருந்து படமெடுத்து முகநூலில் பதிவு செய்வார். கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி வருகிறார்.
இன்றைய இளைய சமுதாயம் அவசியம் படிக்க வேண்டிய நூல். “எண்ணங்கள் அற்ற வாழ்க்கை சாத்தியமற்றது”. உண்மை தான். எல்லோருக்கும் எண்ணம் உண்டு. எண்ணமே இல்லாதவர்கள் மனநலம் குன்றியவர்கள். அவர்களது வாழ்க்கை பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
“வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், எண்ணங்களுக்கும் சுவாசம் போன்று முக்கியத்துவம் அளித்து வாழ வேண்டும். இயற்கை அளிக்கின்ற வாசத்தை சுவாசிக்கும் பொழுது மனிதர்களின் வாழ்க்கை இனிமையாகின்றது”.
எண்ணங்களை வலியுறுத்துவது மட்டுமன்றி இயற்கை வாசத்தை, நேசத்தை வலியுறுத்துவது சிறப்பு.
“ஆனந்தமான வாழ்க்கைக்கு எண்ணம்” கட்டுரையின் தலைப்புகளே வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் விதமாக வைத்துள்ளார்.
நினைவு நல்லது வேண்டும் என்ற மகாகவியின் வைர வரிகளை வழிமொழிந்து கட்டுரைகள் வடித்து உள்ளார்.
பல சாதனையாளர்களை பொருத்தமான இடங்களில் மேற்கோள் காட்டி உள்ளார்.
“ஆரோக்கிய எண்ணங்களைக் கொண்டவர்கள் என்றுமே வாழ்க்கையில் தோல்வியைத் தழுவியதில்லை”.
உண்மை தான். நல்ல எண்ணம் என்றும் தோற்காது. வெற்றி என்பது உறுதி என்பதை அறுதியிட்டு எழுதி உள்ளார்.
நல்ல எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையாக மாறி உங்களை அடையாளப்படுத்தும் என்கிறார்.
ஆம், நம் செயல்களை வைத்தே நம்மை யார் என்றும், நல்லவரா! கெட்டவரா! என்பதை முடிவு செய்கிறார்கள். நல்லவர் என்று முடிவெடுத்தால் நட்பு கொள்வார்கள், அன்பை வழங்குவார்கள்.
ஒருவன் வாழ்க்கையில் நல்ல எண்ணம் வேண்டும் என்றால், நல்ல செயல் வேண்டும் என்பதை நூல் முழுவதும் பல்வேறு கோணங்களில் படம்பிடித்துக் காட்டியுள்ளார், பாராட்டுக்கள்.
பெற்றோர்கள், குழந்தைகளிடமும் மகிழ்ச்சியை, நல்ல சிந்தனையை விதைக்க வேண்டும் என்று வாழ்வியல் கருத்துக்களை எழுதி உள்ளார்.
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை விளக்கமாக எழுதி உள்ளார். எல்லோரிடமும் அன்பு செலுத்திட பயிற்றுவிக்க வலியுறுத்தி உள்ளார்.
‘வெற்றிக்கு திறவுகோல் திறன்களே’. திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பேச்சுத்திறன், பழகும் திறன், தொழில் திறன் என திறன் வகைகளை விளக்கி உள்ளார்.
தோல்வி கண்டு துவண்டு விட வேண்டாமென்று ஊக்கம் தந்து உள்ளார். நல்ல கவிதையோடு, ‘தோல்வியை நேசியுங்கள்’ கட்டுரையை முடித்துள்ளார்.
தோல்வியைக் கண்டு கலங்காதே மனிதனே!
அது உன்னைப் பட்டை தீட்டும் அனுபவம் தானே!
இன்றைய இளைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்.
எண்ணம் நன்றாக இருந்தால் உடல்நலமும் நன்றாக இருக்கும், நோயை அண்ட விடாது என்ற அறிவியல் உண்மையையும் உணர்த்தி உள்ளார்.
மனத்தை மலரச் செய்வோம் என்கிறோம். மலர்களைப் போல மனங்களும் மலர வேண்டும் என்கிறார். மலர்ந்த முகத்தால் சாதனைகள் நிகழ்த்தலாம் என்பது உண்மைதான்.
குழங்தைகளின் எண்ணங்களை சிதைக்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று எழுதி உள்ளார்.
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திட வழிசொல்லி உள்ளார். எண்ணத்தை எல்லோரும் செம்மையாக்குவோம்.
எண்ணமது செம்மையானால் எல்லாம் செம்மையாகும் என்பதை உணர்த்திடும் நூல். நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
நன்றி : முகநூல் பதிவு
*****
நூல் : எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்
நூல் ஆசிரியர் : நிக்கோலஸ் பிரான்சிஸ்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
பிரான்சிஸ் பதிப்பகம்,
பக்கங்கள் : 121
விலை : ரூ.150/-