வாக்குப் பதிவு எந்திரங்களும் மக்களின் அவநம்பிக்கையும்!

– முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி

தமிழில்: துரை. ரவிக்குமார், எம்.பி

*******

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) மீதான அவநம்பிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருகிறது. தேர்தல் முறைமீது மக்கள் நம்பிக்கை இழப்பதை நாம் அனுமதிக்க முடியாது.

ஆனால், தேர்தல் ஆணையமோ அதைக் கண்டுகொள்ள மறுத்து வருகிறது என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “மக்களிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது எனது கருத்து.

கடைசி முயற்சியாக, மக்களின் நம்பிக்கையைப் பெற 100 சதவிகிதம் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் எனக் கோரினாலும் தேர்தல் ஆணையம் அதைப் பரிசீலிக்க வேண்டும்.

கூடுதலாக சில மணிநேரம் அல்லது ஒரு நாள் கூட ஆகிவிட்டுப் போகட்டுமே. வாக்கெடுப்பின் முதல் நாளிலிருந்து வாக்கு எண்ணப்படும் வரை சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாடு காத்திருக்கிறது, அதில் இந்தக் காலம் ஒன்றும் அதிகமல்ல.

ஒரு நல்ல ஜனநாயகத்தில் நம்பகத்தன்மையும் நம்பிக்கையும் மிக முக்கியமானவை.

நான் மிகவும் எளிதான, இன்னொரு மாற்று வழியை முன்மொழிகிறேன்: கிரிக்கெட்டில் டிஆர்எஸ் (முடிவு மறுஆய்வு முறை) முறை இருப்பதைப்போல – அங்கே இரு அணிகளும் இரண்டு முறை மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்-

ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவருக்கு அடுத்ததாக வந்த இரண்டு வேட்பாளர்கள் – அவர்கள் தாங்கள் சந்தேகப்படும் இரண்டு ஒப்புகை சீட்டு பெட்டிகளைத் (VVPAT) தேர்வு செய்யட்டும்.

அதை எண்ணி வாக்குப்பதிவு எந்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கட்டும். இது அதிக அளவு சாம்பிள்களை எண்ணும் சிரமத்தைக் குறைக்கும்.

ஏனெனில் இப்போது தோராயமாக தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து எந்திரங்களை எண்ணுவதற்குப் பதிலாக இந்த முறையில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு நான்கு எந்திரங்களை எண்ணினாலே போதும்.

“வாக்கு சரிபார்ப்பு”க்கான மற்றொரு முறையையும் நான் பரிந்துரைக்கிறேன்: ஒப்புகை சீட்டு எந்திரத்தின் (VVPAT) திரையில் பச்சை மற்றும் சிவப்பு என இரண்டு பட்டன்களைப் பொருத்த வேண்டும்.

வாக்காளர் திருப்தியடைந்த பிறகு, பச்சை நிற பட்டனை அழுத்தினால், சீல் வைக்கப்பட்ட பெட்டியில் சென்று சீட்டு விழும். இல்லையெனில், அவர் சிவப்பு பொத்தானை அழுத்த வேண்டும்.

அப்போது அந்த வாக்குப்பதிவு எந்திரம் முழுமையாக சோதிக்கப்படும். தவறு ஏதும் நிரூபிக்கப்பட்டால், அந்த எந்திரம் மாற்றப்படுவது மட்டுமல்லாமல், தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப் பதிவு எந்திரங்களையும் சரிபார்க்க வேண்டும்.

இது அவ்வளவு எளிதாக சாத்தியமாகக்கூடியது அல்ல, ஆனால் இது தேர்தல்மீது பொது நம்பிக்கையை மீட்டெடுக்கும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) இந்தியாவை உலக அளவில் தேர்தல் நடத்துவதில் முன்னணி நாடாக மாற்றியுள்ளன. ஒப்புகை சீட்டு எந்திரங்களை (VVPAT) இணைத்த பிறகு, வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்பாக ஆக்கியுள்ளது. இங்கே நான் முன்மொழிந்திருக்கும் திருத்தங்கள் செய்யப்பட்டால் அது குறையே சொல்ல முடியாததாக மாறிவிடும்” என்றார்.

– 03.12.2023 அன்று தி டெலிகிராப் ஆங்கில நாளேட்டில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி.

Comments (0)
Add Comment