குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என நீளும் ‘நீர்வழிப் படூஉம்’!

இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் டெல்லியில் வெளியிடப்பட்டது.

தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தேவிபாரதி அவர்களின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் குறித்து எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் பகிர்கிற வார்த்தைகள் இவை.

குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என்று செல்கிறது ‘நீர்வழிப் படூஉம்’ நாவல். இந்நாவலின் மனிதர்கள் அவர்களின் அத்தனைத் தவறுகளுக்கும் மன்னிக்கப்படுகிறார்கள்; அவர்களின் அத்தனைக் குறைகளோடும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்;

வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் வாழ்வில் தங்களுக்கான ஆசுவாசத்தை நிபந்தனையற்ற மன்னிப்பின் வழியாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பின் வழியாகவும் தேடிக்கொள்கிறார்கள். நீர்வழிப் படூஉம் புணைபோல் இந்நாவல் அன்பின் வழி சேர்கிறது.

குடிநாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவைச் சித்தரிக்கிறது இந்நாவல்.

தமிழின் சிறந்த நாவல் வரிசையில் நிலைகொள்ளும். இந்நாவல் தன்னறம் நூல்வெளி வாயிலாக இவ்வாண்டு வெளியானது.

நொய்யல்கரை மனிதர்களின் வாழ்வுப்புலத்தையும், அவர்தம் உளவியல் சலனங்களையும் அங்குள்ள சமூகப் பின்னணியில் நிறுவி ஆராயும் புனைவுப்போக்கு தேவிபாரதியை தமிழின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக இடங்கொள்ளச் செய்கிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக இவரது இலக்கிய மனம் படைத்துக் கொண்டிருக்கிறது. இவருடைய நாவல்கள் இவருக்குரிய இலக்கிய இடத்தை பறைசாற்றவல்லன.

அவைகளிலுள்ள வடிவ ஓர்மையும் செறிவான வட்டார மொழிநடையும் புனைவுப்படைப்புகளை ஆழமுறச் செய்கின்றன.

“ஒரு படைப்பாளியாக தேவிபாரதியின் இடம் என்பது சென்ற காலத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் மனிதர்களில் மீட்பில்லாது அழிபவர்களின் துயரத்தைச் சொன்னார் என்பதுதான்.

அதன் வழியாக வரலாற்றில் எளியமனிதர்களின் இடமென்ன என்னும் ஆழமான வினாவை எழுப்புகிறார்.” என தமிழ்.விக்கி இவரைப்பற்றி குறிப்பிடுகிறது.

இதனிடையே தேவிபாரதி அவர்கள் எழுதிய -நீர்வழிப் படூஉம் – நாவல், நமது நாட்டின் மிக உயர்வான படைப்பிலக்கிய அங்கீகாரமாகக் கருதப்படும் சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எழுதுவது ஒரு சமூகச் செயல்பாடு என்ற இலக்கணத்தை தேவிபாரதி அவர்கள் தெளிவாக உணர்ந்திருந்ததால் எழுதுவதையே தனது அன்றாடச் சிந்தனையாகவும் செயல்பாடாகவும் கொண்டிருந்தார்.

எனவே, எழுத்தாளனின் சமூகச் செயல்பாட்டிற்கான அங்கீகாரம் தான் விருது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர் பிறந்த வளர்ந்த ஊரில் ஆசிரியராக வேலை பார்த்தாலும் வசித்தாலும் அடிக்கடி சந்தித்து உரையாட வாய்ப்பு அமைவதில்லை. எப்பொழுதாவது நம்முடைய மூத்த ஆசிரியர் கனகராஜ், தேவிபாரதியை சந்திக்கலாமா? என்று கேட்பார்.

கடந்த 10 ஆண்டுகளில் இருவரும் அவருடைய வீட்டிற்குச் சென்று நான்கைந்து முறை அவரைப் பார்த்துப் பேசி இருப்போம்.

கடந்த ஆண்டு தைப்பொங்கல் நாளில் இருவரும் தேவிபாரதி அவர்கள் கலைஞர் பொற்கிழி விருது பெற்றதற்காக சந்தித்துப் பேசினோம்.

திரு உதயச்சந்திரன் அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது (2008) ஈரோட்டில் கொங்கு மண்டல மரபுக் கலை விழாவை தேவிபாரதி மற்றும் அவருடைய நெருக்கமான நண்பர் ஓவியர் கதிர்வேல் இருவரும் சிறப்பாக நடத்தினார்கள்.

அப்போது மரபுக் கலைஞர்களை தேடிப் பிடித்து ஈரோடு நகரில் மேடை ஏற்றினோம்.

உடுக்கைப் பாட்டுக் கலைஞர்கள், சலங்கை ஆட்டக் கலைஞர்கள் போன்றவர்களை தேடிக் கண்டுபிடித்தோம். இருவரோடும் ஐந்து நாட்கள் ஈரோட்டில் விடுதியில் தங்கி இவ்விழாவுக்காக சில பணிகளைச் செய்தேன்.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளகோவிலில் அவர் வசித்த பொழுது சாலை விபத்தினால் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

நானும் காங்கேயம் ஆசிரியர் கனகராஜ் மற்றும் சௌந்தரராசன் மூவரும் நலம் விசாரிக்க சென்றோம்.

எழுத்துப் பணியை அவரால் தொடர்ந்து செய்ய முடியுமா என்று ஐயப்படும் அளவிற்கு அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது.

“தோழர் நீங்கள் முழு உடல் நலம் பெற்று நொய்யல் நாவலை எழுதி முடிக்க வேண்டும்” என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கூறிவிட்டு வந்தோம்.

கடந்த ஏப்ரல் 23 அன்று பள்ளிக் குழந்தைகளோடு வெங்கரையாம்பாளையத்தில் உலக புத்தக நாளை கொண்டாடினோம்.

அவர் எழுதிய நொய்யல் நாவலை (630 பக்க நூல்) குழந்தைகளால் அன்றுதான் பார்க்க முடிந்தது. நம்முடைய ஊரில் எழுத்தாளர் இருக்கிறார் என்பதும் குழந்தைகளுக்குத் தெரிய வந்தது.

கடந்த வாரம் தற்செயலாக தேவிபாரதி அவர்கள் இல்லத்திற்கு வந்தார். சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் எழுதிய நொய்யல் நாவலுக்காக கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்ட போதும் பள்ளியில் வந்து சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

அவருடைய பேரன்பை பெருமகிழ்வோடு ஏற்று அவருடைய இலக்கிய சாதனைக்கு எனது வாழ்த்துக்களை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

– சு.மூர்த்தி

*****

நீர்வழிப் படூஉம்
ஆசிரியர்: தேவிபாரதி
நற்றிணை பதிப்பகம்
திருவல்லிக்கேணி, சென்னை-5.
விலை: ரூ. 250/-
தொடர்புக்கு: 044 – 2848 1725

Comments (0)
Add Comment