ஒரு வெற்றிப் படத்தில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள் அனைத்தையும் நிறைத்து இன்னொரு படத்தை உருவாக்கிவிடலாம். ஆனால், அது வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு எவராலும் பதில் சொல்லிவிட முடியாது. அதுதான் சினிமா வர்த்தகத்தில் நிகழும் மாயாஜாலம்.
அது தெரிந்தும், அந்த விடை தெரியாத கேள்வியை நோக்கி எல்லோரையும் தள்ளுவதுதான் அதன் வேலையாக இருந்து வருகிறது. அதேநேரத்தில், ஒன்றில் இருந்து இன்னொன்று வெளிப்பட உதவும்போது அச்சிந்தனை பயனுள்ளதாகிறது.
அந்த எண்ணத்தை என்னுள் ஏற்படுத்திய படங்களில் ஒன்று ‘கும்கி’. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் இருவரது முதல் படம் அது.
இருவருக்கும் அழுத்தமான அறிமுகத்தைத் தந்து, அவர்களுக்கு ரசிகர்களிடையே பெரிய ஆதரவை உருவாக்கிய படமது. அதனாலேயே, ’இன்னொரு கும்கி வருமா’ என்ற எதிர்பார்ப்பை இன்று வரை தக்க வைத்திருக்கிறது.
மைனாவின் சாயல்!
அதற்குத் தகுந்த பயிற்சிகள் மனிதர்கள் மூலமாக அவற்றுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.
வழக்கமாகத் தினசரிச் செய்திகளிலும் தொலைக்காட்சிகளிலும் மட்டுமே கேள்விப்பட்ட ‘கும்கி’ என்ற பெயர் ஒரு படத்திற்கு வைக்கப்படும்போது ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்கள்?
கும்கி யானையின் தினசரி வாழ்க்கையும், அதனை வழி நடத்தும் பாகனின் குணாதிசயங்களும் எவ்வாறு இருக்கும் என்ற ஆசை அவர்களை இயல்பாகத் தொற்றும்.
அதற்கேற்ற கதையமைப்பையும் காட்சிகளையும் படத்தில் இணைத்திருந்தார் இயக்குனர் பிரபு சாலமன்.
மிக முக்கியமாக, நாயகனின் இயல்பான குணங்கள் கதையின் முடிச்சு விடுபடும்போது எந்தளவுக்கு மாறியிருக்கின்றன என்பதையும் காட்டியிருந்தது.
அந்த வகையில், விக்ரம் பிரபுவுக்கு நாயக சாகசங்கள் நிறைந்த படமாகவும் அமைந்திருந்தது.
பிரபு சாலமன் இயக்கத்தில் அதற்கு முன்னர் வெளியான ‘மைனா’வின் சாயலை அப்பட்டமாகக் கொண்டிருந்தது ‘கும்கி’. விக்ரம் பிரபுவுடன் திரியும் தம்பி ராமையாவின் பாத்திரம் அதற்கொரு உதாரணம்.
அது மட்டுமல்லாமல் நாயகன், நாயகி திரையில் காட்டப்பட்டிருந்த விதமும் காட்சியாக்கமும் அந்த எண்ணத்திற்குக் காரணமாயின. ஆனால், கும்கியின் திரைக்கதை போக்கு அதனை மறக்கடித்தது.
புகழுச்சியில் ஏறிய இமான்!
ஒரு இசையமைப்பாளராகத் தனது முதல் படமான ‘தமிழன்’னிலேயே சிறந்த பாடல்களைத் தந்திருந்தார் இமான்.
சுந்தர்.சியோடு அவர் இணைந்த ‘கிரி’ மிகப்பெரிய கவனிப்பைப் பெற்றது. ‘விசில்’ படத்தின் விசிட்டிங் கார்டாக ‘அழகிய அசுரா’ அமைந்தது.
தொடர்ந்து தலைநகரம், வாத்தியார், ரெண்டு உட்படப் பல படங்களுக்கு இசையமைத்தாலும், இமானுக்குத் தனித்துவமான அடையாளத்தைத் தந்தது தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’. பிறகும் கூட நான் அவனில்லை,
மருதமலை, வீராப்பு, மாசிலாமணி, கச்சேரி ஆரம்பம் என்று பல ஹிட் ஆல்பங்களை தந்தாலும் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது ‘மைனா’வின் பாடல்கள் தான். அது பட்டிதொட்டியெங்கும் இமானைக் கொண்டுபோய் சேர்த்தது.
அந்த வகையில், ஒரு நன்றிக்கடனாக ‘கும்கி’யில் இசை சாம்ராஜ்யமே நடத்தியிருந்தார் இமான்.
’சொய்.. சொய்..’ பாடல் துள்ளாட்டம் போட வைத்தது என்றால் ‘ஒண்ணும் புரியலை’, ‘அய்யய்யய்யோ ஆனந்தமே’, ‘சொல்லிட்டாளே அவ காதலை’, ‘நீ எப்போ புள்ள’ என்று மீதமுள்ள பாடல்கள் ‘மெலடி’ மெட்டுகளாய் காதில் கரைந்தன.
வெறுமனே பாடல்களுக்காக மட்டுமே படம் பார்க்க வரலாம் என்று நினைக்கும் அளவுக்கு இதில் இமானின் பங்களிப்பு இருந்தது.
இதன் தொடர்ச்சியாக தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா, ரம்மி படங்களில் இமானின் பாடல்கள் சிலாகிப்பைப் பெற்றன.
இளையராஜாவின் சாயல் அவரது இசையில் தெரிந்ததாக, அவரது பங்களிப்பு மீது விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இவையனைத்தும் ஒன்று சேர்ந்து, அவர் மீது புகழ் வெளிச்சத்தைப் பாய்ச்சின. அந்த வகையில், ‘கும்கி 2’ பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் நிலைத்திருக்க, அவரது இசையின் வீச்சும் ஒரு காரணமாக விளங்குகிறது.
மீண்டும் ஒரு மறுமலர்ச்சி!
‘கும்கி’யில் நாயகியாக நடித்த லட்சுமி மேனன் பாண்டிய நாடு, சுந்தரபாண்டியன், வேதாளம் உட்படச் சில படங்களில் நடித்துவிட்டு காணாமல்போனார். தற்போது ‘சந்திரமுகி 2’ வழியே மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
கயல், தொடரி, செம்பி தந்த பிரபு சாலமன் இடைப்பட்ட காலத்தில் ‘காடன்’ என்றொரு படத்தைத் தந்தார்.
‘பான் இந்தியா’ படமாக உருமாறும் நோக்கில் எடுக்கப்பட்ட படம், திரைக்கதையில் ஜீவனைத் தவறவிட்ட காரணத்தால் வரவேற்பை இழந்தது.
இயற்கை சார்ந்த அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை மையமாகக் கொண்ட திரைக்கதைகளை வடிவமைப்பது எனும் பிரபு சாலமனின் ஆர்வம் மட்டும் இன்னும் அப்படியே உள்ளது.
தற்போது ‘கும்கி 2’ உருவாக்கத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார் எனும் தகவல் அதையே உணர்த்துகிறது.
கும்கிக்குப் பிறகு இவன் வேறமாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்காரதுரை என்று விக்ரம் பிரபுவின் படங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட கதைகளைக் கொண்டிருந்தன. அவை வெற்றியும் பெற்றன.
ஆனால், இது என்ன மாயம், வாஹா, வீர சிவாஜி, சத்ரியன், நெருப்புடா படங்களின் தோல்வி அதனை மறக்கடித்தது.
ஆனாலும் 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை, அசுரகுரு, புலிக்குத்தி பாண்டி என்று வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் விக்ரம் பிரபு.
‘டாணாக்காரன்’ அவரது திரை வாழ்வில் முக்கியமான படமாய் அமைந்தது. தற்போது ‘இறுதிச்சுற்று’ படத்தில் அவர் ஏற்ற பாத்திரம் ரசிகர்களின் கவனிப்பைப் பெற்றது.
வழக்கமான ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி படங்களை ஏற்காமல் வேறுபட்ட படங்களில் மட்டுமே நடிப்பதில் நிச்சயம் ‘ரிஸ்க்’ உண்டு.
ஆனால் விக்ரம் பிரபுவின் தோற்றம் அப்படிப்பட்ட பாத்திரங்களுக்கே பொருத்தமாக இருக்கிறதோ என்ற எண்ணமும் அடிக்கடி தோன்றுகிறது.
அது உண்மை எனில், அதனால் உருவாகும் கவன ஈர்ப்பு என்பது பெருவாரியாக இளைய தலைமுறை சார்ந்ததாகவே இருக்கும். அது பல விதங்களில் அவருக்குப் பயன் தரும்.
அந்த வகையில், விக்ரம் பிரபுவின் அடுத்த படம் அவரது திரை வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்குவதாக, இன்னொரு ‘கும்கி’யாக அமைய வேண்டும்.
கும்கி வெளியாகி இன்றோடு பதினொரு ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பதுவே அப்படத்தை முன்னிறுத்திப் பலவற்றை மீளாக்கம் செய்ய வழி வகுத்துள்ளது.
ஒரு வெற்றியின் சாயலில் இன்னொரு வெற்றியைப் பெற, அதே படத்தின் தாக்கத்தில் இன்னொன்று வெளியாகக் காரணமாவது இன்னும் நல்ல விஷயம். நிகழுமா அந்த அற்புதம்?
– உதய் பாடகலிங்கம்