திரைமொழியும் மக்கள் மொழியும் உணர்ந்த கவிஞர்!

வாலி, காவியக் கவிஞரென்றும் வாலிபக் கவிஞரென்றும் போற்றப்படுபவர். தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களில் அதிகப் பாடல்கள் எழுதியவராகவும் அவரைச் சொல்லலாம்.

காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டதிலும் களத்திற்கேற்பத் தன்னைத் தயாரித்துக் கொண்டதிலும் சூழலுக்கேற்ப நடந்து கொண்டதிலும் அவருக்கு நிகர் அவர்தான்.

அவர் யாரைப் பின்பற்றி எழுத வந்தார் என்பது தவிர்க்கப்பட வேண்டிய கேள்வி. தனக்கு முன்னால் இருந்த அத்தனைப் படைப்பாளிகளையும் அவர் அறிந்து வைத்திருந்தார்.

புதுக்கவிதையின் பிதாமகன் என்று சொல்லப்படும் ந.பிச்சமூர்த்தியிடமே அவர் தன் முதல் கவிதையைக் காண்பித்திருக்கிறார்.

சினிமாவில் பெரிய நடிகர்களுக்குப் பாட்டெழுதும் பொழுது என்னென்ன மாதிரியெல்லாம் சிக்கல் வருமென்று யோசிக்க முடியாது.

பாட்டுக்கு யோசிப்பது பாதியென்றால், பாட்டுக்குப் பின்னால் வரக்கூடிய பாதிப்புக்கு யோசிப்பது மீதியாகிறது.

நல்ல எண்ணத்தில் எழுதினாலும், அதைப் பிழையாகப் புரிந்துகொண்டு தங்கள் இஷ்டம்போல் பாடலாசிரியனிடம் நடந்துகொள்வார்கள், இப்போதும்கூட.

அதேபோல இந்த சென்டிமென்ட் என்றொரு பிசாசு. அந்தப் பிசாசு பிடிக்காத சினிமாக்காரர்களை எண்ணிவிடலாம்.

“தா”வில் ஆரம்பித்தால் படம் ஜெயிக்கும். “பா”வில் ஆரம்பித்தால் படம் பட்டித்தொட்டிவரை பாயும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

இந்த நம்பிக்கை அவரவருடைய தனிப்பட்ட விஷயம். அதை யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ஆஸ்கார் மேடையிலும் அறிவித்த ஏ.ஆர்.ரகுமானுக்கேகூட அப்படியான நம்பிக்கைகளில் ஈடுபாடுள்ளதை வாலியே சொல்லியிருக்கிறார்.

மேலும், அவருடைய திரைப்பயணத்தையும் வாழ்வியல் சவால்களையும் அறிந்துகொள்ள இந்நூல் உதவும். ஆளுமைகள் வரிசை நூலில் நாற்பதாவது நூலாக இந்நூல் வருகிறது.

இந்நூலை எழுதியுள்ள கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர்.

தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர்.

இதுவரை பத்து கவிதைத்தொகுப்புகளும் பதினான்கு கட்டுரைத் தொகுப்புகளும் தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார்.

வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன.

திரைமொழியையும் மக்கள் மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.

நூல்: வாலிப வார்த்தைகள்
ஆசிரியர்: யுகபாரதி 
பதிப்பகம்: கிண்டில் பதிப்பகம்
பக்கங்கள்: 35
விலை: ரூ.49.00 

Comments (0)
Add Comment