உயிரைக் கொடுத்துச் சேகரித்தேன்!

 – பிலிம் நியூஸ் ஆனந்தன்.

தமிழ்த் திரைத்துறைச் சார்ந்த எவருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை இந்தப் பெயர். சினிமா தொடர்பான எந்தப் புள்ளி விவரமானாலும் செய்திகளானாலும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர் ‘திக்கற்ற பார்வதி’ படத்திற்கு கதாசிரியர் ராஜாஜி என்பார்.

தென்னிந்திய பிலிம்சேம்பரின் முதல் தலைவர் காங்கிரஸ் சத்தியமூர்த்தி என்பார். தகவல் சுரங்கம். ‘திரைப்படத் தகவல் மைய’த்தை நிறுவி சினிமா ஆய்வாளர்களுக்கும், திரையாளர்களுக்கும் உதவி வருபவர்.

1954-லிருந்து தான் சேகரித்து வைத்திருந்த புள்ளி விவரக் குறிப்புகளையெல்லாம் எதிர்கால இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவும் வகையில் அரசிடம் ஒப்படைத்தார்.

கொடுத்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகும் நிலையில் – அவை எல்லாம் என்ன ஆயின? எப்படி இருக்கின்றன? யாருக்காவது பயன்படுகிறதா? என்பது குறித்தெல்லாம் இன்றுவரை எந்தவிதமான தகவலுமில்லை. அவரைச் சந்தித்தோம்.

“முதலில் எதைச் சொல்வதென்று தெரியவில்லை. நினைக்கும்போதெல்லாம். வேதனைதான் வாட்டி எடுக்கிறது. ஒன்றா இரண்டா 80 ஆண்டுகளாய் வெளியான தென்னிந்தியப் படங்களிலிருந்து 6000 ஸ்டில்கள், கட்டுக்கட்டாகப் பாட்டுப் புத்தகங்கள், கதைச் சுருக்கங்கள், அவார்டுகளும் குறிப்புகளும், வெற்றிவிழா ஷீல்டுகள் பழைய சினிமாப் பத்திரிகைகள், படமாகிய நாவல்கள், 50க்கும் மேற்பட்ட புள்ளிவிவர அட்டவணைகள், தயாரிப்புச் செலவு அட்டவணைகள், விதவிதமான பிலிம்கள், ரிலீஸாகாத படங்கள், பத்திரிகைச் செய்திகள், விழாக்களின் புகைப்படங்கள்.. என்று ஒரு பஸ் நிறைய ஏற்றுமளவுக்கு அப்படியே தூக்கிக் கொடுத்தேன். 1931- முதல் இன்றுவரை காலவரிசைப்படி சேகரித்தவை.

முதலில் எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். விடவில்லை. ஒருநாள் ரெய்டுமாதிரி வந்து பிடிவாதமாகக் கேட்டார்கள். நானே வைத்திருக்குமளவிற்கு போதுமான இடவசதியும் பொருளாதாரமும் அப்போது என்னிடம் இல்லை. அத்தோடு போய்ச் சேருமிடமும் அரசாங்கமாக இருப்பதால் சம்மதித்தேன் பெற்ற பிள்ளையை இழந்துவிட்டமாதிரி மனசு வலித்தது.

மூன்று நாட்கள் பித்துப் பிடித்தது போலிருந்தது. தூக்கம் வரவில்லை. நிரந்தரக் கண்காட்சி வைப்பதாகத் தான் சொன்னார்கள்: முதலில் ஒரு கட்டிடம் ஒதுக்கணும், ஏசி போடணும் அப்போதுதான் அதைச் செய்யமுடியும். அதையும் நான்தான் கிட்டேயிருந்து செய்யணும், அப்பத்தான் சரிவரும். மனசு வைத்தால் ஒரே நாளில் செய்து விடலாம். ஆனால் எதுவும் நடக்கிறமாதிரி தெரியவில்லை.

இந்த சேகரிப்புகளின் துணைக்கொண்டு ஒருவர் சினிமாப் பற்றி எத்தகையதொரு கட்டுரையையும். விவரத்தையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளலாம் என்பது மட்டும் உண்மை. என் சேகரிப்புகளை நிரந்தர கண்காட்சியாக்குவது குறித்து முதல்வரிடம் பேச முயன்றேன். முடியவில்லை. திரையாளர்களைப் பார்க்க முயன்று வாசலோடு திரும்ப நேரிட்டது. இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லை. அன்றுபோலவே இன்றும் உழைத்து வருகிறேன். சேகரித்து வருகிறேன்.

1968-ல் ஒரு அட்ரஸ் டைரி போட்டேன். வருடாவருடம் ஒரு புத்தகம் போடுகிறேன். நாற்பது ஐம்பது பக்கங்களில்.  வருடந்தவறாமல் கண்காட்சி நடத்துவேன். ஒரு நடிகரோ நடிகையோ, பத்திரிகையாளர்களோ ஒரு விசயத்தைக் கேட்டால் புள்ளி விவரத்தோடு அக்குவேறு ஆணிவேராக எடுத்துத் தருகிறேன்.

இன்னும் எவ்வளவோ செய்வேன். என் உழைப்புக்குத்தான் மரியாதையில்லை. அதுதான் வேதனை. குடும்பத்தில் இந்தச் சேகரிப்பிற்கு யாரும் உதவிக்கு வரமாட்டர்கள் நான் ஒண்டியாகத்தான் செய்வேன்.

இதற்காக இன்றும் மாதம் 500 ரூபாய் செலவிட்டு வருகிறேன் அன்றன்றுள்ள செய்திகளை, கட்டுரைகளைக் குறிப்பெடுத்து எழுதி முடித்துவிட்டுத்தான் தூங்கப் போகிறேன்.

இதை அப்படித்தான் செய்யமுடியும். ஒரு படத்திற்காகப் பல நாட்கள் அலைந்ததும் உண்டு. தியேட்டருக்குப் போனால் ‘டைட்டில்’ முடிந்திருந்தால் உள்ளே போகமாட்டேன், நடிக நடிகையர் பெயர் எழுதணுமே ஆகவே டைட்டில் போடுவதிலிருந்துதான் பார்ப்பேன். எல்லோரும் படம் பார்ப்பார்கள். நான் குறிப்பெழுதிக் கொண்டிருப்பேன்.

இப்படியெல்லாம் சேகரித்த, எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிசங்களும், 1954 முதற்கொண்டு என் உழைப்பும் யாருக்கும் உதவாமல் ஒரு அறைக்குள் முடங்கிக்கிடக்கிறதே என்பதை நினைத்தால்தான் “மேற்கொண்டு பேசமுடியாமல் இமைகளைச் சிமிட்டாமல் பார்த்துப் புன்னகைக்கிறார் பிலிம்நியூஸ் ஆனந்தன். அந்த எண்பது வயது கண்களிலிருந்து தழும்பி விழுகிறது ஒரு வரி:

“என் உசுரக் குடுத்துச் சேகரிச்சது சார்”

– நன்றி புதிய பார்வை | நவம்பர் 1, 2004 , 10

Comments (0)
Add Comment