என் வாழ்க்கை ஒரு நீண்ட யாத்திரை!

தமிழ்ப் பதிப்புலகில் பேராளுமைமிக்க பழம்பெரும் படைப்பாளிகளின் தொகுப்பு மற்றும் விமர்சன நூல்களும் வெளிவரும் காலமாக இருக்கிறது.

மணிக்கொடி எழுத்தாளரான கும்பகோணத்தில் வாழ்ந்த எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகளின் பிரம்மாண்டமான தொகுப்பைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது.

அதனை காவிரிக்கரையில் பிறந்த கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்பிரமணியன், பழந்தமிழ் மற்றும் நவீனத் தமிழில் செழுமைமிக்க கல்யாணராமன் இருவரும் தொடர் முயற்சியும் கடும் உழைப்பையும் செலுத்தி செம்மையான நூலாகத் தொகுத்துள்ளனர்.

இந்தத் தொகுப்பு நூல் தமிழ் வாழும் காலமெல்லாம் நிற்கக்கூடிய இலக்கிய தகுதியைப் பெற்றிருக்கிறது.

பதினாறாம் வயதில் சிட்டுக்குருவி என்ற முதல் சிறுகதை மணிக்கொடியில் வெளியானபோது எம்.வி.வெங்கட்ராம் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தார்.

பிறகு அவர் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதித் தீர்த்தார். இருநூறுக்கும் அதிகமான நூல்களை எழுதிய எம்.வி.வெங்கட்ராமுக்கு 1993 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

“விமர்சகர்களைப் பற்றி நான் என்றும் கவலைப்பட்டதில்லை. என்னைத் தேடிக் கண்டுபிடித்து வரும் ரசிகர்கள்தான் எனக்கு முக்கியம். ஒரு லட்சம் பேர் கை தட்டியதால் என் இலக்கியப் பணி வளரவில்லை.

உண்மையாகப் படித்து ரசித்த சில ரசிகர்களால் மட்டுமே என் படைப்புகள் வலுப்பெற்றன” என்று சொன்ன எம்.வி.வி., எழுத முடிந்த காலத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 8 மணி நேரம் என 30 பக்கங்களுக்குக் குறையாமல் எழுதினார்.

தொடர்ந்து பல ஆண்டுகள் எழுதி வந்ததால் ரைட்டர்ஸ் கிராம்ப் வந்து கையெழுத்துகூட போட இயலாத நிலைக்கு ஆளானார் என்று ஏற்கெனவே ஒரு நாளிதழில் எழுதிய கட்டுரையில் ரவிசுப்பிரமணியன் பதிவு செய்துள்ளார்.

1175 பக்கங்களைக் கொண்ட எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள் தொகுப்பு நூலைப் பற்றிய அனுபவங்களை தொகுப்பாசிரியர்கள் இருவரும் எழுதியுள்ளனர்.

“என் எழுத்தில் உங்களைக் கண்டுபிடியுங்கள்” என்ற எம்விவியின் வார்த்தைகளுடன் தொடங்கும் ரவிசுப்பிரமணியனின் ‘சில தீற்றல்கள்’ என்ற முன்னுரையில், அவருடன் பழகிய நினைவுகளை ஒரு கதையைப் போல உரையாடல்களுடன் பதிவு செய்துள்ளார்.

பழக ஆரம்பித்த முதலிரண்டு ஆண்டுகளுக்குப் பின் மாதம் ஒரு தடவையாவது எம்விவியை குறைந்தது ஒரு பத்து நிமிசமாவது போய்ப் பார்த்துவிட்டு வருவேன் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த அனுபவப் பதிவில் எம்விவியின் எளிய நகைச்சுவையும் எதார்த்தமான கிண்டலும் வெளிப்படுகிறது. ஓர் இடத்தில் எம்விவியை ‘நீங்க நல்லவரா கெட்டவரா ?’என்று கேட்கிறார்.

அதற்கு அவர், “உலகம் சொல்ற ஒழுக்கப்படி சுத்த அயோக்கியன்” என்று பதிலளித்துள்ளார்.

நீ படிக்கணும். உனக்கான அபிப்ராயத்தை நீ உருவாக்கிக்கணும். தப்பா இருந்தாக்கூட பரவாயில்லை. அது ஒரு தாட் பிராசஸ் இல்லையா. அதுக்காகத்தான் எழுதுறோம் என்று ரவிசுப்பிரமணியனுடன் பேசும்போது எம்விவி குறிப்பிட்டிருக்கிறார்.

இதைப் படிக்கும்போது காலத்தில் பின்னோக்கி சென்று அவர் வாழ்ந்த கும்பகோணத்துத் தெருக்கள் கண்முன் நிழலாடுகின்றன.

எம்விவி படைப்புகள் குறித்த தனித்துவமான பார்வையை முன்வைத்திருக்கிறார் தொகுப்பாசிரியர் கல்யாணராமன். 35 பக்கங்கள் எழுதியிருக்கிறார்.

“அப்போது நான் தி.ஜானகிராமன் பைத்தியம். அப்போதென்ன அப்போது? இப்போதும்தான், ஏன்? எப்போதும்தான். பின், அந்த அப்போது எதற்கு? இங்கே அது 30 ஆண்டுகளைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுகிறது” என்று தொடங்குகிறார்.

பின்னர் எம்விவியை படிக்கத் தொடங்கிய கல்யாணராமன்தான் தொகுப்பாசிரியர்களில் ஒருவராக ரவிசுப்பிரமணியனுடன் சேர்ந்து எந்தத் தொகுப்பிலும் வராத அவரது 33 சிறுகதைகளைத் தொல்பொருள் ஆய்வாளர்களைப் போலத் தேடிக் கண்டடைந்துள்ளனர்.

பல்வேறு நூலகங்களில் பல நாட்கள் தேடியலைந்து பல பத்திரிகைகளின் பக்கங்களிலிருந்து தேடித் தொகுத்துள்ளார்கள். தமிழுலகம் பாராட்டப்படவேண்டிய முயற்சி.

சித்தக் கடலுக்குள் நீள் பயணம் போன ஒரு பெருங்கலைஞராக இயன்றவரையில் அதைப் பகிர்ந்தும் கொண்டவராகவே எம்விவியை எடைபோடலாம்.
கண்டதையும் காணாததையும் ஒன்றாக்கும் பேரிருளையும், கேட்டதையும் கேளாததையும் ஒன்றாக்கும் நிசப்தத்தையும் எம்விவி சிறுகதைகளாக்கினார் என்று சுட்டுகிறார் கல்யாணராமன்.

“சூல்கொண்டவன் வயிற்றிலேயே குழந்தையை வைத்திருக்க முடியுமா? என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை. எழுதுகிறேன். எழுதாதபோதும் எழுதுவது பற்றியே சிந்திக்கிறேன்”என்ற எம்.வி. வெங்கட்ராமின் வார்த்தைகள் காதில் விழுகின்றன.

உடல் தளரும் காலம் வரையில் படைப்பூக்கத்துடன் அவர் வாழ்ந்திருக்கிறார். சாகித்ய அகாடமி விருது பெற்ற நிகழ்வில் பேசும்போது, தன் வாழ்க்கையை நீண்ட யாத்திரை என்று சொல்லியுள்ளார்.

எம்விவி என அழைக்கப்படும் எம்.வி.வெங்கட்ராம் என்ற படைப்பாளுமைக்குச் செய்கிற மிகப்பெரிய மரியாதையாக இந்த தொகுப்பு வந்திருக்கிறது.

நூலின் பின் பக்கங்களில் எம்விவியின் சாகித்ய அகாடமி விருது பெற்றபோது பேசிய உரை, அவரது கையெழுத்து மற்றும் அவர் சிறுகதை வெளிவந்த இதழின் அட்டைப்படம் என ஓர் எழுத்தாளரின் வரலாற்று ஆவணமாக வெளிவந்திருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.

“இன்னும்கூட எங்களுடைய தேடலுக்குக் கிடைக்காதிருக்கும் எம்விவியின் சிறுகதைகள், பல்வேறு பழைய பத்திரிகைகளில் ஒருவேளை சிதறிக்கிடக்கலாம் என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம்” என்று இரு தொகுப்பாசிரியர்களும் பதிப்புரையில் தெரிவித்துள்ளனர்.

ஏதோவொரு திசையில் ஏதொவொரு வாசகன் அந்த சிறுகதைகளை தேடக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)
தொகுப்பாசிரியர்கள்: ரவிசுப்பிரமணியன், கல்யாணராமன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி,சாலை,
நாகர்கோவில் – 629 001

விலை ரூ. 1250

– பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment