இயக்குநர் மாரி செல்வராஜ்
“ஒரு நிகழ்ச்சியை மூன்று விதமாகப் பார்க்கலாம். வெறும் நிகழ்வாக அதன் போக்கில் பார்ப்பது ஒன்று.
நம் விருப்பு வெருப்புகளை அதன் மேல் சாயம் ஏற்றிப் பார்ப்பது இரண்டு.
அதை ஓர் அனுபவமாகப் பார்ப்பது மூன்றாவது.
ஆனால், என்ன நிகழ்ந்ததோ அதை மட்டும் பார்ப்பது மிகவும் கஷ்டம்; மேலும், உள்ளதை உள்ளபடியே பார்க்கும் திறமை உள்ளவர்கள் சொற்பம்.
நூற்றுக்குத் தொண்ணூறு பேர், தங்களுக்கு பிடித்ததையும் பிடிக்காததையும், சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளில் சாயம் ஏற்றி, இதில் இப்படி இப்படிப் பிழைகள் இருக்கின்றன;
இன்னின்ன விதத்தில் இது நன்றாக இருக்கிறது என்று கருத்தைப் பூசி பிடித்ததை நிகழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள்; பிடிக்காததை ஆட்கள் மேல் ஏற்றி விமர்சிப்பார்கள்.
இது உலகத்துக்காக தன்னை வெளிக்காட்டிக்கொள்வது. இது மனமும் மூளையும் இழுக்கும் இழுப்பு. உள்ளத்தின் வெளிப்பாடு அல்ல.
இன்னொரு வகையில் நிகழ்ச்சிகளை அனுபவமாக உணர்வது. அனுபவமாக உணர்பவர்கள் அதில் சாயம் ஏற்றுவதில்லை. ஏனெனில் அனுபவம் என்பது உண்மை.
நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலேயே இவ்வளவு குழப்பம் இருக்கும்போது என்ன நிகழ்ந்ததோ அதை எடுத்துச் சொல்வது அவ்வளவு எளிதல்ல.
அதிலும் இதைப் படிப்பவர் விமர்சனம் செய்வார்களே என்று, சொல்பவர் அனேகமாகச் சில விஷயங்களைத் தவிர்ப்பார்கள்.”
– இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி, வம்சி வெளியீடாக வந்திருக்கும் ‘மறக்கவே நினைக்கிறேன்’ நூலிலிருந்து ஒரு பகுதி.