பேச்சு என்பது ஒரு பெருங்கலை!

பேச்சுக்கலைப் பற்றி இதழியலாளர் உதய் பாடகலிங்கம் தன் முகநூல் பக்கத்தில் எழுதியவை.

*****

பேச்சு என்பது ஒரு பெருங்கலை. அது குறித்த தயக்கம் சிறுவயதில் தொற்றியதால் தான், என் கவனத்தை எழுதுவது நோக்கித் திருப்பினேன். நெடுங்காலம் கழித்து அது என் கையைப் பற்றியிருப்பதாக எண்ணுகிறேன்.

நண்பர் மோகன் ராசு எனது பெயரைப் பரிந்துரை செய்ததன் பேரில் திருவான்மியூர் நூலக வார விழாவில் கடந்த 19ஆம் தேதியன்று கலந்து கொண்டேன்.

குழந்தைகள், பெற்றோர்கள், வாசகர்கள் அடங்கிய மிகச்சிறிய கூட்டம் அது. ஆனாலும், நாம் பேசுவதைக் கேட்பதில் ஆர்வம் மிகுந்தவர்களாகத் தெரிந்தது. பேசி முடித்ததும், அது உறுதியானது.

எண்பதுகளில், தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் நூலகங்களைப் பயன்படுத்திய அளவுக்கு, இன்றைய தலைமுறை பயன்படுத்துகிறதா என்று தெரியவில்லை.

சில நேரங்களில், அது தேவையில்லை எனக் கருதுகிறார்களோ என்றும் நினைத்திருக்கிறேன்.

அதை மீறிப் புத்தகங்களைக் கையிலெடுக்கும் குழந்தைகளையும் பதின்ம வயதினரையும் பார்க்கையில் மகிழ்ச்சி பெருகுகிறது.

தற்போது நூலகத் துறையில் பல வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. போட்டித் தேர்வு எழுதுபவர்கள் தனியாகப் பயிற்சி மையங்களை நாடாமல், நூலகங்களுக்குச் சென்றே தேர்வு பெறும் அளவுக்கு நிலைமை கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது.

அது பல ’சுயம்பு’களை நிச்சயம் உருவாக்கும். அவர்களால் தான் இங்கு மாற்றங்களும் நிகழும்.

போலவே நாம் பூங்கா, கடற்கரை, இதர பொழுதுபோக்கு மால்கள் செல்வது போல நூலகங்களுக்கும் குடும்பத்துடன் செல்லலாம் என்ற கருத்தை அங்கு முன்வைத்தேன்.

‘நூலகச் சுற்றுலா’ என்று சொல்லிக்கொண்டு கன்னிமரா நூலகம், அண்ணா நூலகம் என்று வெவ்வேறு நூலகங்களுக்கு அழைத்துச் செல்லும்போது வேறு உலகம் குழந்தைகளுக்குத் தெரியும். அது எனது ஆசைகளில் ஒன்று.

கலைவிழாக்களுக்காக வேறு பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்குச் செல்லும்போது நாம் மனம் கொஞ்சம் திறக்குமே, அது போன்ற மாற்றம் நூலகங்களாலும் நிகழும்.

இது போன்ற கருத்துகளை அந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தினேன்.

அது என்னிலும் கூட ஏதேனும் சில திறப்புகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

விழாவில் கலந்துகொண்ட சகாக்களுக்கும், அவ்விழாவுக்கு என்னை அழைத்த நூலகர் சந்தானலட்சுமி அவர்களுக்கும் எனது வணக்கங்கள்..! நன்றிகள் பல..!

Comments (0)
Add Comment