நூல் அறிமுகம்:
இந்தியாவின் தற்கால பொருளாதாரக் கொள்கைகள் குறித்து அலசுகிறது பொருள்தனைப் போற்றுவோம் என்ற இந்த நூல்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களை மனதில் வைத்து, வருமான வரித்துறை அதிகாரியான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியால் எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல்.
பொருளாதாரம் என்றாலே பத்தடி தள்ளி நிற்பேன். ஏனென்றால் அதற்கும் எனக்கும் அறவே சரிப்பட்டு வராது.
பொருளாதாரம் குறித்து அடிப்படைத் தகவல்களையாவது ஓரளவு புரிந்துகொள்ள வேண்டும் என்று முயற்சித்து தோல்வியடைந்த கதை எல்லாம் என்னிடம் உண்டு.
சில பொருளாதார புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து புரிந்தும் புரியாமலும் படித்து முடிப்பது அல்லது படிக்க விருப்பமில்லாமல் விட்டுவிடுவது என்ற நிலைதான் என்னிடம் இருந்தது. இப்போது அந்த நிலையை நான் முறியடித்து இருக்கிறேன்.
அரசியல் பேசும் பலர் பொருளாதாரம் குறித்து பேசுவதில்லை. ஆனால் அரசியல் பேசுவதற்கு முன்பு பொருளாதாரம் வணிகம் சார்ந்த பல விஷயங்களை தெரிந்து கொள்வது கட்டாயம் ஆகிறது.
பொருளாதாரம் தவிர்த்துவிட்டு பேசும் அரசியல் எல்லாம் பெரும்பாலும் வெட்டிப் பேச்சாகத் தான் இருக்கும்.
தி இந்து இதழில் தொடர் கட்டுரையாக வெளிவந்த தொகுப்பே இந்த நூல். பொருளாதாரத்தை எந்த அளவிற்கு எளிமைப்படுத்தி நமக்கு புரிய வைக்க முடியுமோ அந்த அளவிற்கு எளிமையான முறையில் ஆசிரியர் விலக்கி இருக்கிறார்.
பல இடங்களில் பொருளாதார கலைச்சொற்கள் குறித்து முழுமையாக தெரியாமல் நாம் திண்டாடி இருப்போம். அதற்கான விளக்கங்களை நடைமுறை பொருளாதாரத்தோடு தொடர்புப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது.
பொருளாதார கோட்பாடுகள், சூத்திரம், விதிகள், புள்ளிவிபரங்கள் என்று நம்மை அச்சுறுத்தாமல், இவை எதுவுமே இன்றி பொருளாதாரத்தை கற்பிக்க ஆசிரியர் முயன்றிருக்கிறார். அதாவது இலக்கணமே இல்லாமல் ஆங்கிலம் கற்றுக் கொள்வதைப் போன்று.
சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் நடைமுறையில் நம் கையில் புழங்கும் நாம் அன்றாட வாழ்வில் பணத்துடன் வைத்துள்ள தொடர்புடன் பொருளாதாரத்தை இணைத்து வெளிப்படுத்தி இருப்பது தான் புத்தகத்தின் சிறப்பு. அதாவது கசப்பு டானிக்குடன் சர்க்கரை சேர்த்து மருந்து ஊட்டுவது போல.
தேவை விதி, சந்தை போக்கு, விலை நிர்ணயம், மூலதன கோட்பாடுகள், உழைப்பு, கூலி, ஓவர்ஹெட் செலவுகள், பிரேக் ஈவன் பாயிண்ட், பங்குச் சந்தைகள் என்று பலவற்றை இந்நூல் தொட்டுச் செல்கிறது.
ஒரு பாடத்தின் அடிப்படைகளை இவ்வளவு எளிய முறையில் பட்டியலிடுவது சற்று கடினமான காரியம் தான்
பொருளாதாரம் குறித்தான அனைத்து தகவல்களையும் முழுமையாக பதிவு செய்யவில்லை.
அனைத்துமே மேலோட்டமான தகவல்கள் தான். ஆனால் நம் வீட்டு பொருளாதாரம் ஆரம்பித்து உலகப் பொருளாதாரம் வரை அனைத்துமே அடங்கியுள்ளது.
பொருளாதாரம் குறித்து ஆரம்பத்தில் இருந்து வாசித்து தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இந்த நூலில் இருந்து தொடங்கலாம். எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் புத்தகம் நகர்வதுதான் வியப்பு.
பொருளாதாரம் குறித்தான இதழ்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும். பின் எளிமையான தகவல்களை உள்வாங்கிக் கொண்டு பின் பொருளாதாரத் துறை சார்ந்த புத்தகங்களை கொஞ்சம் கொஞ்சமாக கை வைத்து நகர்ந்தால் எளிமையாக பொருளாதாரத்தை புரிந்து கொள்ள முடியும்.
புத்தகம்: பொருள்தனைப் போற்று
ஆசிரியர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
பக்கங்கள்: 127
விலை: Rs.295/-