பலரது வாழ்க்கையின் நிதர்சனம்!

முதல் தலைப்பான, “ஒப்புதல் வாக்குமூலம்” கவிதையில் இலயித்தவளை, புத்தகத்தின் கடைசி பக்கம் வரை, எவ்வித சலிப்பும் தட்டாமல், கவனமாய் ஒவ்வொன்றையும் உள்வாங்கச் செய்திருக்கிறது இந்த அனுபவங்களின் தொகுப்பு.

“இவன் எதிரே
இன்பமும் இருக்கிறது
துன்பமும் இருக்கிறது
இரண்டையும் இணைத்து
வாழ்ந்து பார்க்கத் தெரியவில்லை”
பலரது வாழ்க்கையின் நிதர்சனம் இதுதானே…
ஒவ்வொரு நாளும், நான்கு மணி நேரம் வாசிப்பிற்கு என ஒதுக்குவாராம். இவரது தந்தை, வாசிக்க ஒரு புத்தகப் பட்டியல் தந்திருக்கிறார். 10 புத்தகங்கள் கொண்ட அந்தப் பட்டியலில், நான் எத்தனை வாசித்திருக்கிறேன் என்று பார்த்ததில், ஒரே ஒரு புத்தகம் வாசித்திருக்கிறேன். மற்றவற்றை வாசிக்க எண்ணியுள்ளேன்.

வயதென்னம் இரயில் வண்டி கட்டுரையில், பாண்டியன் எக்ஸ்பிரஸில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, சென்ற அனுபவத்தையும், அதன்பால் கொண்ட தீராக் காதலையும் கவிதையாய் சொல்கிறார்.

“பார்ப்பதற்கு நிறைய காட்சிகள்
படிப்பதற்கு கொஞ்சம் புத்தகம்
பழகுவதற்கும் பேசுவதற்கும்
எதிரில் அன்பான மனிதர்கள்”
இவையெல்லாம் கிட்டினால், ஜன்னலோர இருக்கையிலேயே வசித்திட சம்மதம்.

இந்த இரசனையும், இது தரும் இன்பமும் அலாதியானது என்பதில், மாற்றுக் கருத்து எவருக்கேனும் இருந்திடுமோ?

பள்ளிக்குச் செல்கையில், பள்ளியின் சுற்றுச் சுவரில் எழுதப்பட்டிருக்கும் பைபிள் வாசகத்தை “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, என்னிடத்தில் வாருங்கள், இளைப்பாறுதல் தருவேன்”

வாசித்தபடி, தான் முதுகில் சுமந்து கொண்டிருந்த பாரமான புத்தகப் பையினை தொட்டுப் பார்த்த நிகழ்வை நினைவு கூர்கிறார்.

கவிஞனான பின்னர், மீண்டும் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராய் சென்ற சமயத்தில், தான் படித்த எட்டாம் வகுப்பு வகுப்பறையினுள் சென்று, தன் இருக்கையில் அமர்ந்து, காம்பஸ் கொண்டு மேசையில் பொறித்திருந்த NMK எழுத்துக்களை, தொட்டுப் பார்த்த அனுபவம், என்னுள் பள்ளி காலத்தை, பசுமையாய் நிழலாடச் செய்தது.

இதை, கவிஞரின் வார்த்தைகளில், “இனம் புரியா உணர்வு, தொலைத்த பால்யத்தின் மிச்சம், பதின் வயதுகளின் ஓர் துண்டு” எத்தனை அழகிய உவமைகள்.

தான் மேற்கொண்ட தொழில் முயற்சிகள், பெட்டிக்கடை வைத்தது, ஊதுபத்தி தயாரிப்பு, ஷாம்பூ தயாரித்தது, தங்க மீன்கள் (gold fish) வளர்த்து விற்பனை செய்தது, ஆயத்த ஆடைகள் வாங்கி விற்பனை செய்தது, புகைப்படக்க்கலை கற்றுக் கொண்டு புகைப்படம் எடுத்தது, பின்னாளில், பாலு மகேந்திரா அவர்களிடம், உதவி இயக்குனராய் பணியாற்றியது வரை குறிப்பிட்டுள்ளார்.

கவிஞராய் மட்டும் தெரிந்த திரு. நா. முத்துக்குமார் அவர்களின் பன்முகத் திறன் புலனாகிறது.

“ஒரு வியாபாரி கவிதை எழுதினால், அவனிடம் இருக்கும் காசு மட்டுமே காணாமல் போகும். கவிஞன் வியாபாரியானால், அவனிடம் இருக்கும் கவிதையே காணாமல் போய்விடும்” என்கிறார்.

இலக்கிய வட்டம் நாராயணன் அவர்கள்,
புத்தகக் கடையில், இலக்கிய இதழ்களான கணையாழி, காலச்சுவடு இதழ்களை வாங்கிப் படிப்போர், தன்னைப் போலவே இலக்கிய ஆர்வம் உடையவர்களாகத் தான் இருப்பார்கள் என்று, அவர்களை ஒன்றிணைத்து, “இலக்கிய வட்டம்” அமைப்பினை உருவாக்கினார். இதன் மூலம், பலரது அறிமுகம், திரு. நா.முத்துக்குமார் அவர்களுக்கு கிடைத்தது.

பச்சையப்பன் கல்லூரியில் படிக்க வேண்டும் என கொண்ட ஆவல், இயற்பியலை இனிமையாய் கற்பித்த சந்திரசேகர் மாஸ்டர், வகுப்புத் தோழன், டி.எஸ். ராஜராஜனுடன் சேர்ந்து, கவிதைகள் எழுதி, அவற்றை எந்த பத்திரிகைக்கு அனுப்பலாம் என பார்த்து அனுப்பிய அனுபவங்கள், என பச்சையப்பன் கல்லூரி நினைவுகளை பகிர்கிறார்.

சினிமாவில், இணை இயக்குனராக ஆகும் முயற்சியை, தன் முடிவை தந்தையிடம் சொன்னதும், அவர் தந்த, நடிகர் சிவக்குமார் அவர்களின், ” இது இராஜபாட்டை அல்ல” புத்தகம் துவங்கி, தன் கனவை நினைவாக்க, தான் உலக சினிமா பார்த்த அனுபவங்கள் வரை பகிர்கிறார். திரைப்பட சொசைட்டியின் திரையிடல்கள், அயல்நாட்டு தூதரகங்களில் வெளியிடப்படும் ஜப்பான், ரஷியா, போலந்து, ஈரான், ஜெர்மனி நாட்டு திரைப்படங்களை பார்த்த அனுபவத்தையும் பகிர்கிறார்.

தங்க மீன்கள் இயக்குனர் ராம் அவர்களுடனான, தன் அனுபவத்தை பகிர்கையில், தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியின் பேராசிரியர், பாலுச்சாமி என்ற பாரதிபுத்திரன் நடத்திய ‘வனம்’ அமைப்பின் கலந்துரையாடலில் கலந்து கொண்டு, கவிதை வாசிக்க, அனைவருக்கும் பிடித்ததாக கருத்து சொல்ல, ஒரே ஒரு இளைஞர் மட்டும், தனக்குப் பிடிக்கவில்லை என்று கருத்து சொல்ல,
“நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்
இரண்டு
அதைக் கிழிக்காமல் இருக்கிறேன்
மூன்று
உங்களிடம் படிக்கக் கொடுக்கிறேன்”
என்ற கவிதையை, ஆகச் சிறந்த கவிதையென பாராட்டுகிறார். மற்றவர்களுக்கோ, அக்கவிதை புரியவில்லை. கவிதையை பாராட்டியவர், கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருந்த ராமசுப்பு என்ற ‘இயக்குனர் ராம்’.

தன் வாழ்வின் பல்வேறு கட்டங்களில், தன் அனுபவங்களின் மூலம், எழுத்தால் வசீகரிக்கிறார், தன் கவிதைகளால் நம்மைக் கொள்ளை கொண்ட, திரு.நா.முத்துக்குமார் அவர்கள்.

புத்தகம் : வேடிக்கை பார்ப்பவன்
ஆசிரியர் : திரு. நா.முத்துக்குமார்
வெளியீடு : விகடன் பிரசுரம், சென்னை
பக்கங்கள் : 240
விலை : ₹238

Comments (0)
Add Comment