யாரும் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்!

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே 1952-ல் எழுதிய ‘The Old Man and the Sea’ என்ற குறுநாவலின் தமிழாக்கம் தான் ‘கிழவனும் கடலும்’ என்ற நூல்.

கியூபாவில் உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒரு மீனவக் கிழவன் சாந்தயகன் பற்றிய கதை தான் இந்த நூல்.

இந்த நூலுக்காக ஹெமிங்வேவுக்கு புகழ்பெற்ற புலிட்சர் விருது கொடுக்கப்பட்டது. இவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மிகவும் எளிமையான ஒரு கதை. கியூபாவில் உள்ள வயதான மீனவன் சாந்தயகன். அவர் தனது சிறிய படகில் தினமும் மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். சிறிது காலம் முன்பு வரை ஒரு சிறுவன் அவருடன் மீன்பிடிக்க வந்து கொண்டு இருந்தான்.

ஆனால், சில காலமாக அந்தச் சிறுவன் வேறு ஒரு படகில் மீன் பிடிக்கச் செல்லத் தொடங்குகிறான். அன்று முதல் சாந்தயகன் தனியாக தான் மீன்பிடிக்கச் சென்று வருகிறார்.

கடந்த 84 நாட்களாக அவருக்கு மீன் எதுவும் கிடைக்காமல் இருக்கும் நிலையில், அவரை அதிர்ஷ்டம் இல்லாதவர் என்றும், திறமை இல்லாதவர் என்றும் அந்த ஊரு மக்கள் சொல்லத் தொடங்கி இருந்தனர்.

85 ஆவது நாள் எப்படியாவது மீன் பிடித்து வர வேண்டும் என்று அவர் கடலுக்குள் செல்கிறார். பெரிய மீனாக பிடிக்க வேண்டும் என்று அவர் கடலில் மிக ஆழமான பகுதிக்குச் சென்று தூண்டில் வீசுகிறார்.

அதிகாலையில் கிளம்பி வந்து விரித்த தூண்டிலில், நண்பகலில் ஒரு ராட்சஸ மீன் ஒன்று சிக்கிக் கொள்கிறது. மார்லின் எனப்படும் அந்த ராட்சஸ மீன் அந்த கிழவனின் படகைக் காட்டிலும் இரண்டு மடங்கு நீளம் உள்ளது.

தூண்டிலில் மாட்டிய அந்த மீனில் இழுப்பில் தூண்டிலுடன் சேர்த்து படகும் கிழவனும் இழுத்து செல்லப்படுகிறார்கள்.

இந்த மீனை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று கிழவனும், தூண்டிலில் இருந்து தப்பிவிட வேண்டும் என்று மீனும் இரண்டு நாட்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் பல முறை காயம் பட்டும், இறுதியில் மூன்றாவது நாள் அவர் அந்த மீனை தன் ஈட்டி மூலம் குத்தி கொன்றுவிடுகிறார்.

இப்போது இத்தனை பெரிய மீனை தன் படகில் கொண்டு செல்ல முடியாது என்பதால், அவர் அந்த மீனை தன் படகின் பக்கவாட்டில் கட்டி இழுத்துக்கொண்டு போக முடிவு செய்கிறார்.

ஈட்டியில் குத்தியதால் உண்டான இரத்த கசிவு பல சுறா மீன்களை படகு நோக்கி வரவழைக்கிறது. படகின் பக்கவாட்டில் உள்ள மீனை உண்ண பல சுறா மீன்கள் வருகின்றன. ஐந்து முறை சுறாக்களுடன் கிழவன் கடுமையாக போராடுகிறார்.

ஆனாலும் இறுதியில் மீனின் தலையை தவிர மற்ற எல்லாவற்றையும் சுறாக்கள் தின்றுவிடுகின்றன. தான் தோற்றுவிட்டோம் என்று நினைத்து அவர் கரையேறி தன் குடிசைக்கு சென்றுவிடுகிறார்.

தான் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்ற நினைப்புடன் தூங்கிவிடுகிறார். அடுத்த நாள் காலை அந்த மீனவ கிராமமே கிழவனின் படகில் கட்டப்பட்டு இருந்த மீனை கண்டு ஆச்சர்யம் அடைகிறார்கள்.

கிட்டத்தட்ட 18 அடிக்கு மேல் இருக்கும் அந்த ராட்சஸ மீன் மார்லினை கண்டு அந்த கிராமமே கிழவனின் மேல் மரியாதை கொள்கிறது.

வாசிப்புக்கு மிகவும் எளிமையாக தெரியும் இந்த கதை நமக்கு சொல்லிக் கொடுக்கும் வாழ்க்கை பாடங்கள் மிக முக்கியமானவை.

கதை முக்காலும் கிழவனையும், மீனையும் சுற்றியே நகர்கிறது. வசனங்கள் கூட கிழவன் தனக்குத் தானே பேசுவது போல தான் இருக்கும். இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை,

1. தைரியமாக வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும் – பயணம் தான் நமக்கு பல விஷயங்களை கற்று கொடுக்கும்.

84 நாள் நாட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், விடாமல் 85 ஆவது நாளும் கடலுக்குள் பயணம் செல்லும் கிழவனுக்கு அன்று மார்லின் கிடைக்கிறது.

2. நம் வாழ்க்கையில் எப்போதும் யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கடினமான நாட்களை நாம் தனியாக போராடி வெல்ல வேண்டும். நமக்கு துணை கிடைத்தால் நல்லது.

கிடைக்கவில்லை என்றால் துவண்டு விடாமல் தொடர்ந்து தனியாக போராடி வெற்றி பெற வேண்டும்.

இந்தக் கதையில் பல இடங்களில் கிழவன் தனக்கு துணையாக அந்த சிறுவன் இந்த நேரத்தில் இருந்தால் பெரும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார்.

ஆனால் அவரே அடுத்த நொடி, இல்லாத ஒன்றை பற்றி இப்போது யோசித்து என்ன பயன். இது என் கடமை. நான் தான் போராடி முடிக்க வேண்டும் என்ற வெறி கொண்டு அந்த மீனுடன் போராடுகிறார்.

வாழ்க்கை எப்போதுமே போராட்டமானது தான். யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம் வாழ்க்கை போராட்டத்தை நாம் நடத்தியே ஆகவேண்டும்.

3. நம் கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டும். அதன் பலனை எதிர்பார்க்காமல் நம் கடமையை செய்துகொண்டே இருந்தால் நாம் எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைக்கும்.

தன் மதிப்பை காப்பாற்ற வேண்டும் என்றோ, மற்றவரிடம் தன்னை நிரூபிக்க வேண்டும் என்றோ அந்த கிழவன் அந்த மீனுடன் போராடவில்லை. அதை தன் கடமையாக நினைத்து போராடினான்.

சுறாக்களிடம் தோற்றதாக அவன் நினைத்தாலும், அவன் கடமையை சரியாக செய்ததால் அவனின் மதிப்பு அந்த கிராம மக்களிடத்தில் உயர்ந்தது.

ஒரு அருமையான சுயமுன்னேற்ற கதை. சுயமுன்னேற்ற கருத்துக்களை அறிவுரை போல இல்லாமல் இப்படி ஒரு எளிய கதையின் மூலம் சொல்லுவதால், ஒவ்வொருவருக்கும் கதையில் இருந்தும் அவரவர் வாழ்க்கை தேவைக்கு ஏற்ப கருத்துக்களை எடுத்துக்கொள்ள முடியும்.

நூல்: கடலும் கிழவனும்
ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில்: ச.து.சு. யோகியார்
பக்கங்கள்: 100
பதிப்பு: ரிதம் வெளியீடு

விலை: ரூ. 95/-

Comments (0)
Add Comment