எதையும் கடந்து போகும் அனுபவம் தேவை!

– சொல்லாததும் உண்மை நூலில் நடிகர் பிரகாஷ்ராஜ்

திரையில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். நிஜத்தில் நிதர்சனமான மனிதராய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது பிரகாஷ்ராஜ் எழுதிய சொல்லாததும் உண்மை நூலின் மூலம் தெளிவாகிறது.

உண்மையைச் சொல்வதற்காக அவர் பெற்றதைவிட இழந்தது அதிகம். அதற்காக அவர் வருத்தப்படவில்லை என்பது ஆச்சர்யம்.

“வெற்றியின்போது எனக்குத் திமிர் வராது. ஆனா, தோல்வியின்போது ஆறேழு மடங்கு திமிருடன்தான் அலைவேன். பேசவேமாட்டேன். அமைதியா இருப்பேன். அந்த அமைதியிலும் ஒரு திமிர் அழுத்தமா உட்கார்ந்திருக்கும். திரும்பவும் வருவேன்!”ன்னு சொல்ற திமிர் அது. எல்லாருக்குள்ளேயும் திமிர் வேணும்.

உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான வாழ்க்கை. வலிக்கும். உசுரை எடுக்கும். ஆனா அதுதான் சரி!

பொய் வானவில் போல
கணநேர அழகு…?
உண்மை வானம் போல
காலந்தோறும் அழகு…’

என எழுதியுள்ள பிரகாஷ்ராஜ் பொய்யை உண்மையாக்கவும், உண்மையை பொய் என்று நிரூபிக்கவும் துணியாத மனிதர். தன்னை கண்ணாடி முன் நிறுத்திக் காட்டியிருக்கிறார்.

தனது நூல் குறித்து விளக்கமளித்துள்ள பிரகாஷ்ராஜ், “என்வாழ்வில் நான் நேருக்கு நேர் சந்தித்த உண்மைகளை அரிதாரம் பூசாமல் பேசியிருக்கேன்.

சில உண்மைகள் கரண்ட் கம்பியில் கைவச்ச மாதிரி என்னையே சுளீர்னு திருப்பி அடிச்சிருக்கு. சில உண்மைகள், ஓவியன் கையில் கிடைத்த தூரிகை மாதிரி அற்புதமாகப் பதிவாகி இருக்கு.

இரண்டும் வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவங்கள்தான்” எனக் கூறியுள்ளார்.

இந்நூலுக்கு எழுத்தாக்கம் செய்துள்ள த.செ. ஞானவேல், “தேடலும் தேடல் நிமித்தமான வாழ்வை அனுபவித்து வாழ்பவரின் அனுபங்களைக் கேட்டறிவது மிகச்சிறந்த ஒரு நாவலைப் படிக்கிற பரவசத்தை அளித்தது.

பிரகாஷ்ராஜ் எந்த ஊரில் இருந்தாலும் பேருந்து, ரயில், விமானம் என பயணித்து அவரின் புதிய புதிய முகவரியில் சந்திப்பேன். தன் அனுபவங்களின் மூலம் என் வாழ்வை புதுப்பித்துக் கொண்டே இருந்தார்.

10 ஆண்டு காலம் கடந்த பிறகும் ஜீவன் குறையாமல் மிளிர்கின்றன. அவர் பகிர்ந்து கொண்ட உண்மைகள், வாசகர்களுக்கு அவை வலியை ஏற்றுக்கொள்ளவும், வாழ்வைக் கொண்டாடவும் புதுப்பித்துக் கொள்ளவும் கற்றுத் தருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

நூல்: சொல்லாததும் உண்மை
ஆசிரியர் : பிரகாஷ்ராஜ்
பதிப்பகம்: விகடன் பிரசுரம், 2007
பக்கங்கள்: 255
விலை: ரூ-225/-

Comments (0)
Add Comment