தமிழக நாட்டுப்புறத்தை அடையாளப்படுத்தக் கூடிய கலைகளில் ஒன்றான வில்லிசைக் கலைஞர்.
திரையுலகில் தனி இடத்தை வகித்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூலம் திரைப்படம் வாயிலாக வில்லிசையைப் பரவலாகக் கொண்டு போனவர்.
வில்லிசையைத் தொலைக்காட்சியில் பிரபலப்படுத்தி 76 வயதிலும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அலைந்து வில்லுப்பாட்டு வாழ வைத்துக் கொண்டிருக்கும் கலைஞரான சுப்பு ஆறுமுகத்தை, சென்னை அசோக் நகரில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தோம்.
நெல்லைப் பேச்சு வழக்கில் கிராமிய மணத்துடன் ஒருவித அந்நியோன்யம் இழையோட பேசிசுகிறார்.
குடும்பத்தின் மீது ஒட்டுதல்; செய்கிற வேலையில் ஒரு திட்டமிட்ட ஒழுங்கு; உச்சரிப்பில் தெளிவு என்றிருக்கிற இவருடைய வாழ்க்கையைப் பற்றிய இவரது மனைவி மகாலட்சுமி எழுதியுள்ள புத்தகம் ‘உண்மையுள்ள கவிஞன்’.
“என்னுடைய வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் அப்படியே அதில் இருக்கும். கணவனுடைய வரலாற்றை மனைவி எழுதுவது புதிதாக சிலருக்குத் தோன்றும்.
ஒவ்வொரு கணவருடைய வரலாற்றையும் அவருடைய மனைவி தான் எழுத வேண்டும். ஆனால் கணவன் வரலாறு எழுதுகிறபடி நடந்து கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்.”
இவருடைய மூத்த மகள் சுப்புலட்சுமி ஒரு தனியார் பள்ளி முதல்வராக இருக்கிறார். அடுத்த மகன் காந்தி எம்.ஃபில் படித்து முடித்த நிலையில் சுப்பு ஆறுமுகத்துடன் வில்லிசையில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்த மகள் பாரதி திருமகன் ‘சுப்பு ஆறுமுகத்தின் பாடல்களில் தேசப்பற்று’ என்கிற தலைப்பில் ஆய்வு பண்ணிக் கொண்டிருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆறுமுகத்தின் சொந்தக் கிராமப் பின்னணி குறித்த பேச்சில் இருந்து துவங்குகிறது நேர்காணல்.
“எங்க அப்பா சுப்பையா பிள்ளை. அம்மா சுப்பம்மாள். என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு அண்ணன். இரண்டு அக்காக்கள். கடைசியாக நான்.
என்னுடைய அண்ணாச்சியும் நன்றாகப் பாடுவார். எனக்கு வீட்டில் வைத்த பெயர் ஆறுமுகம்.
என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற சாத்திரம் புதுக்குளம். கயத்தாறு அருகிலுள்ள செழுமையான கிராமம். நல்ல நீர் பாசனம்; பச்சைப்பசேல் என்றிருக்கும் ஊர்.
விவசாய வேலையைப் பார்த்துக் கொண்டே பாட்டு எழுதுவார் அப்பா. எதைப் பற்றியும் உடனுக்குடன் பாட்டு எழுதி விடுவார். தாள சந்தத்துடன் அவர் பாடுகிற பாடலைச் சிறுவயதில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.
பக்கத்திலிருந்த தச்சநல்லூரில் ஐந்து அம்மன் கோவில்கள். அந்த ஐந்து கோவில்களிலும் கொடை விழா நடந்து, வில்லுப்பாட்டு நடக்கும். எல்லாவற்றுக்கும் போவேன்.
அப்போது பிரபலமாக இருந்த வில்லிசைக் கலைஞர்கள் யார்?
தோவாளை சுந்தரம் பிள்ளை என்று பலபேர் இருந்தார்கள்.
வில்லிசையில் நல்ல பெயர். இதை விட முக்கியமாக முறுக்குக் காரி என்று அழைக்கப்பட்ட பெண்மணி வில்லுப் பாட்டு பாடுவார் பாருங்க. அவ்வளவு அருமையாக இருக்கும்.
சாயந்திரம் வரை முறுக்கு விற்பார். அதற்குப் பிறகு கோவிலில் பாடுவார். சுதி சுத்தமாக இருக்கும் அவருடைய பாட்டு.
அவராகவே பாட்டை இட்டுக் கட்டிப் பாடுவார். அவ்வளவு கூட்டம் சேரும். காதில் பாம்படம் தொங்க, ஒரு கையைச் சாய்த்து வைத்துக் கொண்டு அற்புதமாக வில்லிசைப்பதைப் பார்த்திருக்கிறேன்.
எங்க ஊரில் படித்துவிட்டு பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படிக்கிற வரைக்கும் எனக்குள் ஊறிப்போய் இருந்தது இந்த இசை.
பள்ளியில் நன்னூல் சூத்திரத்தை, வெண்பா எழுதுவதை கற்றுக் கொண்டேன்.
ஆசிரியருடன் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் குளிக்கப் போகும்போது கூட பாடல், இலக்கணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு போவோம்.
அப்படி ஒரு ஈடுபாடு. தமிழ்ச் சங்கத் தேர்வெழுதி அதில் முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்திருந்தேன்.
முதலில் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ என்றால் எனக்கு உயிர். அதில் எனக்கு மயக்கம். பாரதி ஒருவன்தான் கண்ணனைக் குழந்தையாக, வேலைக்காரனாக, காதலியாகப் பலவிதங்களில் பாடியவன்.
அதில் எனக்கு லயிப்பு இருந்ததால், அதே மாதிரி ‘குமரன் பாட்டு’ என்று எழுதினேன்.
கடவுளை எல்லாமுமாகப் பார்த்து எழுதுவது என்பது கத்தியில் நடப்பது மாதிரி. கவனமாக எழுத வேண்டும். குறுக்குத் துறையிலிருந்து எழுதினேன்.
‘பொன்னி’ பத்திரிகையின் ஆசிரியரான முருகு சுப்பிரமணியத்திற்கு அனுப்பியிருந்தேன்.
அதில் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் சில கவிஞர்களின் கவிதைகளை வெளியிடுவார்கள்.
அந்த சங்கப் பலகையில் வந்த மாதிரி உணரப்படும். நான் மதிப்புரைக்கு அனுப்பி இருந்த குமரன் பாட்டிலிருந்து ஒரு பாடலை வெளியிட்டிருந்தார்கள். ஏகப்பட்ட பாராட்டுகள்.
இதற்கிடையில் சிறு வெளியீடாக வந்த குமரன் பாட்டு மூவாயிரம் பிரதிகள் வரை விற்பனையானது.
இந்தச் சந்தர்ப்பத்தில் திருநெல்வேலியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் கலைவாணர் என்.எஸ்.கே. அதில் சுதந்திரம் கிடைத்ததை திருநெல்வேலி எதிர்கொண்ட விதம் பற்றிய ஒரு பாட்டைத் தயார் பண்ணியிருந்தேன்.
சுதந்திரத்திற்கு முன்பு காந்தி பெயரைச் சொன்னாலே எதிர்த்து பேசுகிற கூட்டம் இருந்தது.
“சுதந்திரமா, கிடைக்காதுவேய் கொடுக்க மாட்டான்வேய்” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ‘மகாத்மா காந்திக்கு ஜே’ போட்டால் கண்டித்தவர்கள் சுதந்திரம் கிடைத்ததும் எப்படி மாறினார்கள் என்பதைப் பாடலாகப் பாடினேன்.
சுதந்திரத்திற்கு முன்பு காந்தி என்று சொன்னால் அடிக்க வந்த அதே தடி, பிறகு கொடியுடன் கொடிக் கம்பமாக மாற்றி விட்டார்கள் என்று பாடியது கலைவாணருக்குப் பிடித்திருந்தது. மனம் விட்டுப் பாராட்டினார்.
“மகாத்மா காந்தி கதையை வில்லுப்பாட்டாகப் பாட ஆள் தேடிக்கிட்டு இருக்கேன். பெரிய பெரிய கொம்பன் எல்லாம் இருக்காங்க மெட்ராசிலே. ஆனா எனக்கு திருநெல்வேலித் தமிழில் பாடுறவன் வேணும்” என்று என்னை அவருடைய காரில் ஏறச் சொன்னார்.
நேர என்னுடைய வீட்டுக்குப் போனது கார். இறங்கியதும் ஊரில் பெரும் பரபரப்பு. என்.எஸ்.கே. வந்திருக்கிறார் என்றால் கூட்டம் கூடாதா? கூடிய கூட்டத்தில் எங்களுடைய வீட்டுச் சுவரே இடிந்து போய் விட்டது.
இருட்டு நேரம். அரிக்கன் விளக்கைத் தூக்கிப் பிடித்து அவருடைய முகத்தைக் காட்டினார் “கிருஷ்ணா… நல்லா இருக்கியா?” என்று என்னுடைய அம்மா நெருக்கமாகக் கூப்பிட்ட விதம் அவருக்குப் பிடித்துவிட்டது.
உடனே அவருடைய காலில் விழுந்து கும்பிட்டு, “நீ கூப்புடுகிறப்போ என்னைப் பெத்த இசக்கியம்மா கூப்பிடுற மாதிரியே இருக்கு…” என்றார்.
விடாமல் “இப்போ… என்னுடைய தம்பி… ஆறுமுகத்தை என்னோட கூட்டிட்டுப் போறேன்” என்று சொன்னார். ஆனால் அம்மா சம்மதிக்கவில்லை. மறுத்தார்.
பிடிவாதமாகத் திருப்பிச் சொன்னதும், “என்னப்பா… மெட்ராஸ்னு சொல்றீயே, அது மதுரைக்கு வடக்கே இருக்கா” என்று கேட்டார்.
பதிலுக்கு எங்கம்மா பாணியிலேயே சொன்னால் கலைவாணர்.
“திருநெல்வேலிக்குத் தெற்கே இருக்கிற நானே அங்கே போயிருக்கேனேமா…”
கடைசியில் எங்கம்மா சம்மதிச்சு ஒரு வாரத்தில் அனுப்புவதாகச் சொன்னார். அதன்படி ஒரு வாரத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.
– மணா எழுதிய “ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்” நூலிலிருந்து…