நூடுல்ஸ் – காவல்துறை மீதான இன்னொரு விமர்சனம்!

ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அதன் தொடக்கக் காட்சியே போதுமானது. எடுத்துக்கொண்ட கதையை, அது முதல் பிரேமில் இருந்து சொல்கிறதா? இப்படித் தொடங்கும் கதை எப்படி முடிவடையும் என்று பல கேள்விகளை விதைப்பதாக அக்காட்சி அமைய வேண்டும்.

அது எவ்வளவு நேரம் நீள்கிறது என்பதைப் பொறுத்து, பார்வையாளர்கள் வெகு எளிதாக அப்படத்தோடு ஒன்றுவார்கள்.

படம் தொடங்கி பத்து, பதினைந்து, முப்பது நிமிடங்கள் கழித்து தியேட்டருக்குள் நுழைவது சாதாரணமாகிவிட்ட இக்காலத்தில், முதல் காட்சியே படத்தின் அடிநாதமாக இருக்க வேண்டுமென்று மெனக்கெடுவது ரொம்பவே ஆச்சர்யமானதொரு விஷயம்.

அப்படியொரு தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது மதன் தட்சிணாமூர்த்தி இயக்கியுள்ள ‘நூடுல்ஸ்’. சரி, படம் எப்படியிருக்கிறது?

பொசுக்கும் அதிகாரம்!

சரவணன் (ஹரிஷ் உத்தமன்), தனது மனைவி சக்தி (ஷீலா ராஜ்குமார்), மகள் (ஆலியா) உடன் ஒரு மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதர். அவர் ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.

சரவணன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர். அந்த காரணத்தை முன்வைத்து, சரவணன் சக்தியின் காதலுக்கு சக்தியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. பேத்தி பிறந்தபிறகும் கூட, அவர்கள் சமாதானம் ஆகவில்லை.

இந்த நிலையில், ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அவர்கள் வருவதாகச் சரவணனுக்குத் தகவல் கிடைக்கிறது. அது, சக்திக்கு ஆச்சர்யமான சம்பவமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் சரவணன். அதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறார்.

ஆனால், அவர்கள் வருவதற்குள் சரவணன் வீட்டில் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுகிறது. வீட்டு வாசலில் நின்ற மகளிடம் மொபைலை பறிக்க முயன்ற ஒரு நபரை, சக்தி தாக்குகிறார்.

அடிபட்ட அந்த நபர் வீட்டுக்குள் வந்து விழுந்துவிடுகிறார். அவரிடம் எந்தச் சலனமும் தென்படாதது, அவர் மரணமடைந்துவிட்டதாகக் கருத வைக்கிறது.

அதிகாலையில் சரவணன் மளிகைக் கடைக்குள் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்குள் இதெல்லாமே நிகழ்ந்து முடிகிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் சரவணன், தங்களுக்குத் தெரிந்த ஒரு வழக்கறிஞரை நாடுகிறார். அவர் பிரச்சனைக்குத் தீர்வு சொல்வதற்குள், வீட்டு வாசலில் போலீஸ் வந்து நிற்கிறது. அவர்களைப் பார்த்ததும், சரவணனும் சக்தியும் இன்னும் அதிகமாகப் பதற்றமடைகின்றனர். காரணம், முந்தைய நாள் இரவு நடந்த ஒரு சம்பவம்.

சனிக்கிழமைதோறும் தங்களது குடியிருப்பின் மொட்டைமாடியில், அங்கு வசிக்கும் குடும்பத்தினரோடு சேர்ந்து பாட்டு பாடி, நடனமாடி, விளையாடிக் களிப்பது அவர்களது வழக்கம்.

அன்றும் அது நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, இன்ஸ்பெக்டர் இளங்கோவும் (மதன் தட்சிணாமூர்த்தி) ஒரு கான்ஸ்டபிளும் படியேறிச் சென்று அவர்களை எச்சரிக்கின்றனர். அந்த பேச்சின் இடையே, மரியாதை இல்லாமல் பேச வேண்டாம் என்கிறார் சக்தி.

அதனைக் கேட்டு கோபமுறும் இளங்கோ, அவர்களனைவரையும் போலீஸ் ஸ்டேஷன் வருமாறு சொல்கிறார். ’முடியாது’ என்று மறுக்கும் சரவணன், ’யாராவது புகார் தெரிவித்தால் வருகிறோம்’ என்கிறார்.

’போலீஸ்காரங்கன்னாலே பயம் இல்லை’ என்று மருகிக் கொண்டிருக்கும் இளங்கோவை அந்தச் சம்பவம் இன்னும் ஆத்திரமடைய வைக்கிறது.

இவ்விரு சம்பவங்களும் ஒன்றிணையும்போது என்ன நிகழ்கிறது என்பதே ‘நூடுல்ஸ்’ படத்தின் மீதிக்கதை.

சாதாரண மனிதர்களை காவல் துறையின் அதிகாரம் பொசுக்கும் என்பதே இக்கதையின் அடிப்படை. அதற்கேற்ப, பின்பாதிக் காட்சிகள் விரிகின்றன.

அதேநேரத்தில், தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்கும் எந்தவொரு ரசிகரும் இப்படத்தின் கிளைமேக்ஸை எளிதாக யூகிக்க முடியும். அதற்கான ‘க்ளூ’வையும் சிறிய வசனமொன்றில் பொதித்து வைத்திருக்கிறார் இயக்குனர்.

சிறப்பான திரைமொழி!

இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி மிகநேர்த்தியான காட்சியனுபவத்தைத் திரையில் தந்திருக்கிறார். அதற்காக, இதுவொரு காட்சி விருந்தாக அமைந்திருக்கிறது எனும் முடிவுக்கு வர வேண்டாம்.

படத்தின் ஒவ்வொரு பிரேமும் இயல்பாக நாம் நேரில் காணும் வாழ்க்கையையே திரையில் பிரதிபலித்திருக்கிறது. அதை மிகச்சரியாகப் படம்பிடித்திருப்பதன் மூலம், ‘சபாஷ்’ சொல்ல வைத்திருக்கிறார் மதன்.

சாதாரண மனிதர்களுக்கும் உரிமைகள் உண்டு என்று போலீசாரை எதிர்த்து உரக்கப் பேசும் ஒரு குடும்பம், தாங்கள் எதிர்கொள்ளும் அசம்பாவிதத்தால் நிலைகுலைந்து அதிகாரத்தால் நசுங்கிப் போவதற்குச் சம்மதிப்பதுதான் திரைக்கதை ஓட்டத்தில் நிறைந்திருக்கிறது.

அதனைக் கதாபாத்திரங்களின் உணர்வுகள் வழியே இம்மி பிசகாமல் வெளிப்படுத்தியதில் வெற்றி கண்டிருக்கிறது ‘நூடுல்ஸ்’.

காட்சிகளில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சீரான அலை போன்ற சிறப்பான திரைமொழியைக் கொண்டிருக்கிறது.

க்ளோஸ் அப், மிட்ஷாட்களின் வழியே மொத்தக் கதையையும் சட்டென்று கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா. அது நமக்கு போரடித்துவிடக் கூடாது என்பதற்காக, காட்சிக்கோணங்கள் ஒரேமாதிரியாக அமைந்துவிடக் கூடது என்பதிலும் மெனக்கெட்டிருக்கிறார்.

சரத்குமாரின் படத்தொகுப்பு மிகச்சீராகத் திரையில் கதை சொல்லல் நிகழ வழி வகுத்திருக்கிறது.

ராபர்ட் சற்குணம் தந்திருக்கும் பின்னணி இசை, தொடக்கத்தில் குதூகலத்தை ஊட்டுகிறது; மெல்ல ‘த்ரில்’ ஊட்டி பின் பயத்தில் ஆழ்த்துகிறது. பின்பாதிக் காட்சிகளில் நகைச்சுவைக்குத் தாவியிருக்கிறது. அது நிச்சயம் பாராட்டுக்குரிய திறன் தான்.

மொத்தமாக ஒரு வீடு, மொட்டை மாடி, தெரு, மளிகைக்கடை ஆகியவற்றைச் சுற்றி நடக்கும் கதை என்றாலும், திரையில் எதுவும் துருத்தலாகத் தெரியக் கூடாது என்று பாடுபட்டிருக்கிறது ஆனந்தன் எட்வர்ட் கென்னடியின் கலை வடிவமைப்பு.

அதிகார அடக்குமுறையை எதிர்க்க இரண்டு நிமிடங்கள் போதும்; ஆனால், அதன் விளைவுகள் வாழ்நாள் முழுக்கத் தொடரும் என்பதைச் சொல்லும் வகையில் இப்படத்திற்கு ‘நூடுல்ஸ்’ எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நூடுல்ஸ் போல ஒரே இழையாகக் கதை நீள்வதாகவும் இயக்குனர் நினைத்து இப்படியொரு டைட்டிலை வைத்திருக்கலாம்.

இந்தப் படத்தில் மொத்தமாக ஒரு டஜன் பாத்திரங்களே இடம்பெற்றுள்ளன.

இதுநாள் வரை திரையில் வில்லத்தனம் காட்டிய ஹரிஷ் உத்தமனுக்கு இதில் நாயகன் வேடம். ஜிம் ட்ரெய்னர் எனும் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார். அவரது நடிப்புத் திறமை எத்தகையது என்பதை அறிய இப்படம் உதாரணமாக அமைந்திருக்கிறது.

சின்னச் சின்ன உணர்வு மாற்றங்களை வெளிக்காட்டி நம்மை அசத்துகிறது ஷீலா ராஜ்குமாரின் நடிப்பு. ’என்ன நடந்ததுன்னு சொல்லு’ என்று முன்பாதியில் ரசிகர்களைக் கத்த வைப்பதே அவரது நடிப்புக்கான வெற்றி.

யூடியூப் பிரபலமான ஆலியாவுக்கு இதில் தனியாகக் காட்சிகள் இல்லை. இதில் அவருக்கும் சோகத்தை வெளிக்காட்டும் வேடம் தான்.

பக்கத்துவீட்டுக்காரராக வரும் திருநாவுக்கரசு, அவரது மனைவி, மொட்டைமாடி வீட்டில் வசிக்கும் பெண்மணி, அவரது குழந்தைகள், உறவினர்களாக நடித்தவர்கள் என்று அனைவருமே காட்சிகளுக்கேற்ற ஏற்ற நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

வழக்கறிஞராக வரும் வசந்த் மாரிமுத்துவின் நடிப்பு சில நேரங்களில் கரை கடந்தாலும், நம்மை வசீகரிக்கிறது.

அதிகாரத்திற்கு எதிரான குரல்!

அதிகாரம் தனது மாயக்கரங்களால் எப்படிச் சாதாரண மனிதர்களை இறுக்குகிறது என்பதற்கு உதாரணமாகச் சில காட்சிகள் இப்படத்தில் உண்டு.

தன்னோடு பணியாற்றும் கான்ஸ்டபிளை சோபாவில் அமருமாறு இன்ஸ்பெக்டர் வலியுறுத்தியும், அப்பாத்திரம் அதனை ஏற்க மறுப்பது ஒரு உதாரணம். அதுவே, எதிரே இருக்கும் ஒரு சாதாரண குடும்பத்தின் குரலை இன்னும் கம்மச் செய்வதாகக் காட்டப்பட்டிருக்கும்.

அதேபோல, படியேற முடியாமல் கால் வலியால் அவதிப்படும் கான்ஸ்டபிள் அக்குடும்பத்தினரிடம் கடுமையாகப் பேசுவதாகக் காட்டப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் தாண்டி, தங்கள் மீது கொட்டப்படும் அழுத்தத்தைக் காவல் துறையினர் பொதுமக்களிடம் வெளிப்படுத்துவதாக ஒரு வசனமும் இதில் உண்டு.

மொட்டை மாடியில் சத்தம் போடுவதாகப் பக்கத்து தெருவில் வசிக்கும் ஒருவர் போனில் புகார் சொன்னதாக ஒரு தகவல் சொல்லப்பட்டிருக்கும். அப்படிப் புகார் தெரிவித்தவர், காவல் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் உறவினர் என்பதும் வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும்.

அதனாலேயே, இன்ஸ்பெக்டர் நிலையில் இருக்கும் ஒரு அதிகாரி நேரில் வந்திருப்பதும் சன்னமாக உணர்த்தப்பட்டிருக்கும். இது போன்ற சித்தரிப்புகளை அடிக்கோடிடாமல் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி.

இந்தப் படத்தைப் பார்க்கும் ஒரு மனிதர், இப்படிப் பல தகவல்களை அசைபோட முடியும்.

கடந்த ஆண்டு வெளியான ‘காவல்துறை உங்கள் நண்பன்’ போன்று இதுவும் காவல் துறையைக் கடுமையாக விமர்சிக்கும் இன்னொரு திரைப்படம். ஆனால், அந்தச் சாயல் துளியும் இல்லாமல் வேறொரு திசையில் இருந்து அதனைச் சொல்லியிருக்கிறது ‘நூடுல்ஸ்’.

கூடவே, குறைந்த பட்ஜெட்டில் மிகநேர்த்தியான காட்சியமைப்புடன் நம்மை இருக்கையோடு கட்டிப் போட முடியும் என்றும் இப்படம் நிரூபித்திருக்கிறது.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment