நடிப்பாற்றலால் அம்மாவையே வியக்க வைத்த நடிகர் திலகம்!

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1967-ல் வெளிவந்த படம் திருவருட்செல்வர்.  இதன் படப்பிடிப்பு சாரதா ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ’திருநாவுக்கரசர்’ என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து, மேக்கப் கூட கலைக்காமல் தனது வீடு அமைந்திருக்கும் ’அன்னை இல்லம்’ நோக்கி கார் செல்கிறது. தி.நகரில் உள்ள போக் ரோட்டில் கார் நுழைந்தபோது, நடிகர் திலகம் தனது ஓட்டுநரிடம், வீடு வரை ஹாரன் அடிக்காமல் போய், உள்ளே செல்லாமல் வெளியே காரை நிறுத்து என்று சொல்கிறார்.

ஓட்டுநரும் அவ்வாறே செய்கிறார். எஜமானின் கார் வருவதைக் கண்டு அன்னை இல்ல காவலாளி கேட்டைத் திறக்கிறார்.

கார் வீட்டிற்குள் வராமல் வெளியே நிற்பதைக் கண்டு காரின் அருகே ஓடி வருகிறார் காவலாளி.

காரில் இருந்த நடிகர் திலகம் கீழே இறங்கி வாயில் விரலை வைத்து உஷ் என்று காவலாளிக்கு சைகை செய்து விட்டு, ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து போகிறார்.

வாசலை அடைந்ததும் குரலை மாற்றி “அம்மா தாயே ” என்று குரல் கொடுக்கிறார்.
குரல் கேட்டு வருகிறார் சிவாஜியின் தாயார் ராஜாமணி அம்மையார்.

அம்மாவைக் கண்டதும், “தாயே நான் ஒரு சிவபக்தன். கைலாயமலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். வழியில் கிடைத்ததை சாப்பிடுவேன். ஒரு வாய் சோறு கிடைக்குமா” என்று கேட்கிறார்.

பக்திப் பரவசத்தில் வந்திருப்பது தன் மகன் என்று அறியாமல், மரியாதையுடன் அழைத்துச் சென்று உணவு பரிமாறி வணங்குகிறார்.

சாமியார், சாப்பிடும் விதத்தை பார்த்து, நம்ம கணேசன் சாப்பிடுவதைப் போல் இருக்கிறதே என்று எண்ணி கூர்ந்து கவனிக்கிறார் ராஜாமணி அம்மையார்.

எத்தனையோ முகபாவங்களை காட்டுபவர், அம்மாவின் முகம் மாறுதலைக் கண்டு சத்தம் போட்டுச் சிரிக்கிறார்.

அந்தச் சிரிப்பு சத்தம் கேட்டு சாப்பிடுவது தன் மகன் கணேசன் என்றுணர்ந்து பிரமிக்கிறார் ராஜாமணி அம்மையார்.

தன் நடிப்புத் திறமையாலும், பொருத்தமான வேடத் திறமையாலும் பெற்ற தாயின் கண்களாலேயே அறிய முடியாத அளவிற்கு தன்னை மாற்றியே நடித்தவர் நடிகர் திலகம் எனும் மகாகலைஞன்.

நன்றி: சிவாஜி ரசிகர்கள் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment