– ஓவியா புதிய குரல்
தலைவர் பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துக்கள் அவர் வாழ்ந்த காலத்தைத் தாண்டி நின்றவை என்பதை நாமறிவோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலம் பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கிவிட்டது போன்ற தோற்றமளிக்கிற இன்றைய நிலையில் கூட பெரியாரின் கருத்துக்கள் புரட்சிகரமானவையாகவே திகழ்கின்றன.
1930 களிலேயே அன்றைய பெண்கள் யாரும் சிந்திக்காத அளவிற்கு உலகின் பெண்ணியச் சிந்தனையாளர்களில் முதன்மையானவராக பெரியார் பரிணமிக்கிறார். திருமணம், காதல், கற்பு: கர்ப்பத் தடை என்று ஒவ்வொரு பொருள் மீதும் அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்துதான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்
எமை அகத்தும் புறத்தும் திருத்துதற்கே எம்பெருமான்
சொன்னதெல்லாம் இமயமலை இல்லையென்று
சொன்னது போல் எண்ணினோம்
பின் தெளிந்தோம்
புரட்சிக் கவிஞரின் வார்த்தைகள் இன்றுவரை பொருந்தியே நிற்கின்றன.
திருமணம் கிரிமினல் குற்றமாக்கப் படவேண்டும். இப்படியொரு கருத்தை பெரியார் தெரிவித்தபோது அவருடன் இருந்தவர்களே அதிர்ந்துதான் போயிருப்பார்கள்.
அவரின் நண்பரொருவர் அவரிடம் கேட்டார், “நீங்கள் பேசுவதெல்லாம் நடக்கிற காரியமா” என்று, பெரியார் அவரிடம் திருப்பிக் கேட்கிறார், “ஏன் நடக்காதுஞ் இதே நாட்டில் எல்லோரும் இரண்டு கல்யாணம், மூன்று கல்யாணம் செய்து கொண்டிருக்கவில்லையாஞ்? பலதார தடைச் சட்டம் வந்தவுடன் எல்லோரும் கேட்டுக் கொண்டார்களா இல்லையாஞ் அப்படி இருக்கும் போது கல்யாணம் தப்புன்னு சட்டம் போட்டால் ஏன் ஏற்க மாட்டார்கள்” என்று.
சிந்தித்து பார்க்கும்போது இந்தத் தர்க்கம் எவ்வளவு பெரிய உண்மை என்று தெரியும். எனில் இப்படியொரு சட்டம் ஏன் வரவில்லை என்றால் இந்த நாட்டில் பொது வாழ்க்கையிலிருப்பவர்களும் சட்டமியற்றக் கூடிய இடத்திலிருப்பவர்களும் இதனை மனதார சரி என்று ஒப்பவில்லை. அவர்கள் இது சாத்தியம் என்று நம்பவில்லை. ஆனால் நாளுக்கு நாள் பெருகி வரும் விவாகரத்துக்கள் இளைஞர்கள் மனதில் திருமணம் பற்றிய பல கேள்விகளை எழுப்பத் தவறவில்லை.
அதிலும் தன்னம்பிக்கையுடன் படித்து வளரும் பெண்கள் திருமணம் தங்களுக்கான அமைப்பு அல்ல என்று உறுதியாக எண்ணத் தலைப்பட்டு விட்டார்கள். அண்மையில் ‘டைவர்ஸ் மொமெண்ட்” என்ற வார்த்தைகளுடன் ஒரு பெண் தனக்குக் கிடைத்த விவாகரத்தைக் கொண்டாடுவது போன்று ஒரு முகநூல் பதிவினை இட்டபோது பலரும் அதிர்ந்து போயினர். பிரிவு இயற்கையான துன்பத்தைத் தருமல்லவா என்று பொதுவாக அன்பின் வழி நின்று கூட பலரும் கேள்விகள் எழுப்பினர். ஆனால் திருமணம் சிறை என்றும் திருமண இரத்து விடுதலை என்றும் பெண் சிந்திக்க தொடங்கி விட்டாள் என்பதற்கான அறிகுறி அல்லவா அது?
வீட்டிற்கொரு அடுப்படி ஒழிய வேண்டும்
பெண்ணின் உழைப்பு மட்டுமல்ல பெண்ணின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் அடுப்படியில் அமிழ்ந்து அழிவதா என்று கேட்டவர் பெரியார். இன்று படித்த பெண்கள் அடுப்படி வேலையை எதிர்ப்புடனும் வெறுப்புடனும் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக நகரங்களில் உணவு விடுதிகள் வீட்டிற்கே வந்து உணவினை சர்க்கும் ஸ்விகி போன்ற நிறுவனங்கள் இந்த உணர்வின் இலாபத்தை அறுவடை செய்து வருகின்றனர். எனினும் இது ஒரு தற்காலிக தப்பித்தல் அல்ல பொறுப்பு துறத்தலாக இருக்கிறதேயல்லாமல் பெண்தான் அடுப்படிக்குரியவள் என்கின்ற சிந்தனைக்கு ஒரு முழுமையான சமுதாய மாற்றாக இன்னும் பரிணமிக்கவில்லை. பெண் வீட்டுக்குள் செய்யும் பணிகள் சமுதாயத்தில் அவளது பிறவிக் கடமையாகப் பார்க்கப்படுவதால் அவற்றிற்கு பணமதிப்பு அளிக்கப்படவில்லை.
இன்று இந்திய நீதிமன்றங்கள் இந்தக் கேள்விக்கு பதில் காண இயலாமல் திகைக்கின்றன. நேஷனல் இன்ஷயுன்சு கம்பெனி க்ஷி தீபிகா என்கின்ற வழக்கில் விபத்துக்கான காப்பீட்டு தொகையை தீர்மானிக்கும்போது வீட்டிலிருந்த அவரது தாயாரின் உழைப்புக்கு மதிப்பு கணக்கிடப் பட வேண்டும் என்கின்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.
இன்று தமிழ்நாடு உள்ளிட்ட சில அரசுகள் குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் என்கின்ற அளவில் உதவித் தொகை அளிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றன. இவையெல்லாம் நவீன சமுதாயம் அவர்கள் உழைப்பு மதிப்பில்லா உபரியாக இருப்பது சரியல்ல என்பதை உணரத் தலைப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும் இவையெல்லாம் இப்பிரச்சனைக்கான நியாயமான தர்க்கவியல் தீர்வுகளல்ல என்பதை நாம் உணர வேண்டும்.
சமுதாயம் அவர்கள் உழைப்பு மதிப்பில்லா உபரியாக இருப்பது சரியல்ல என்பதை உணரத் தலைப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும் இவையெல்லாம் இப்பிரச்சினைக்கான நியாயமான தர்க்கவியல் தீர்வுகளல்ல என்பதை நாம் உணர வேண்டும். பெரியார் கூறியது போல் சமுதாயக் கூடங்கள், குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, பொது சமையற் கூடம் இது போன்ற சேவைகளை வழங்குமாறு வளர்த்தெடுக்கப் பட வேண்டும்.
சமையலை ஆண் செய்வதா பெண் செய்வதா என்று பட்டிமன்றம் நடத்துவதை விட்டு விட்டு வேலைகள் என்பவற்றை எத்தனை சதவீதம் பொதுவெளிக்கான வேலைகளாக மாற்றலாம் எஞ்சி தவிர்க்க இயலாமல் வீட்டுக்குள் நடைபெற வேண்டிய வேலைகளை அன்பு நட்பு வாய்ப்பு இவற்றின அடிப்படையில் எப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்று தானே சிந்திந்து மூடிவெடுக்கக் கூடிய தோழர்களாக மனித சமுதாயம் மாதற வேண்டும். அதுவே பெரியாரின் கனவாகும்.
குழந்தை பெறுதல்
பதினாறு பெறும் பெண் இன்று யாமில்லை. உடம்பு எனும் பொறி களைத்து சோர்ந்து தானாக செயலிழக்கும் வரை பிள்ளைகள் பெற்றுக் கொடுத்த பெண் காலாவதியாகி விட்டாள். இந்த மனித இனம் தழைக்கப்பட வேண்டும் என்கின்ற ஒரு விசயத்தை முன்வைத்து அதற்காக மனித இனத்தின் சரிபாதியான பெண்ணினத்தை வருத்தி துன்புமுறச் செய்து பிள்ளை பெற வைப்பது சரியல்ல, இந்தச் சிந்தனையும் அமைப்பும் ஒழிக்கப் பட வேண்டும். இதனைப் பெரியார் அளவிற்கு ஆழமாகச் சிந்தித்து உரைத்தவர் வேறு எவருமிலர் அன்று மட்டுமல்ல இன்று வரை என்று துணிந்து கூறலாம்.
பிள்ளை பெறுவதால் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து பெரியார் அளவுக்கு வேறு எவரும் பேசி நாம் அறிந்ததில்லை பெண்களில் எவரும் கூட அந்த அளவுக்கு பேசியது இல்லை. இன்றைய பெண் தனது அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விடுதலையடைய முயற்சிக்கும் போது பிள்ளை பெறுவது என்பது எவ்வளவு இடையூறாக இருக்கிறது என்பதனை பெரியார் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
பொதுவாக ஏடறிந்த காலம் முதல், ‘எழுத்து’ என்பதை பெண்ணை தாய்மையோடு இணைத்து புனிதப்படுத்துகிற வேலையைத்தான் செய்து வந்திருக்கிறது. எனது இத்தனை ஆண்டுகால வாசிப்பில் ஒரு வேலைக்காரியின் சுயசரிதை என்றொரு நாவல் ஒன்றுதான் ஒரு பெண் தனக்கேற்பட்ட கர்ப்பம் மற்றும் கர்ப்ப கலைப்பு குறித்து எவ்வித புனிதப்படுத்தல் மயக்கங்களுக்கும் ஆட்படாமல் எழுதப்பட்டது. அந்த நாவல் அந்தப் பெண்ணே எழுதியது. அதில் மட்டும் தான் வறுமை நிலையில் உள்ள ஒரு பெண் தனக்கு நிகழக்கூடிய கா்ப்பும் மற்றும் மகப்பேறு பற்றி புனையப்பட்ட எவ்வித மிகைக்கூற்றும் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். எத்தகைய வலி மிகுந்த அனுபங்கள்.
பொதுவாக எழுத்துலகம் என்பது ஆண்களின் ஆட்சியிலிருக்கிறது. மகப்பேறு பற்றி எழுதி இருப்பது அத்தனை பெரும் ஆண்கள். பிற்காலத்தில் பெண்கள் எழுதத் தொடங்கிய பிறகு அவர்கள் பெண்களின் உணர்வை எழுதும் போது ஆண்கள் சொல்லிக் கொடுத்தபடியே தான் பெரிதும் எழுதினார்கள், சுயமாக அவர்கள் தங்கள் உணர்வுகளை எழுத வருவதற்கு நவீன காலம் ஒரு பெரிய அவகாசத்தை எடுத்துக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் பெரியார் பெண்களின் வேதனைகள் குறித்து விவரித்து உண்மையை மிகப் பெரிய விஷயம் பெண்களை கூட அதை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக மறுக்கின்ற மனநிலையில் கூட இருக்கிறார்கள் இன்று வரையிலும் கூட
பிள்ளை பெறுவது பற்றி பெரியார் எழுதியிருப்பது பலரை முட்டுச் சந்தில் நிறுத்தி விடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. மனித இன விரோத சிந்தனையாக அதனைப் பார்க்கிறார்கள். விலங்குகளிடையே திருமணம் இல்லை தாய்மை மீதான புனிதம் இல்லை இனப்பெருக்கம் செய்தாக வேண்டும் என்கின்ற சிந்தனையும் இல்லை. ஆனால் அவை இனப்பெருக்கம் செய்து கொண்டுதானிகுக்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் இனப்பெருக்கம் செய்வதற்கான மனித சமுதாயத்தின் பாதியான பெண்ணினத்தை அதற்கென்றே திட்டமிட்டு ஒடுக்கி பிள்ளை பெற வைத்துக் கொண்டிருக்கிறான். அதனால்தான் பெரியார் கேட்டார், “இந்த மனித இனம் விருத்தியாகா விட்டால் பெண்ணுக்கென்ன நட்டம்?” என்று ஒருபடி மேலே போய் இன்னொரு கேள்வி கேட்கிறார், “இந்தக் கேள்வியைக் கேட்பவருக்குதான் என்ன நட்டம்?” என்று கேட்கிறார். அதாவது மனித இனம் விருத்தியாக வேண்டாமா என்று கேட்பவரைப் பார்த்து கேட்கிறார். உண்மையில் ஆண் நிகழ்கால தனது வாழ்க்கையில் அவனது சுகத்துக்காகவே பெண்ணை அடிமை செய்து கொண்டு அதற்குக் காரணம் கூறுகையில் மனித இன விருத்தி என்கின்ற ஒரு செயற்கைக் காரணியை முன் வைக்கிறான் என்பதுதான் பெரியார் சுட்டிக் காட்டும் விசயமாகும். ஆழ்ந்து சிந்தித்தாலே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.
இப்பிரச்சினை குறித்துத் தொடர்ச்சியான தேடலும் சிந்தனையும் பெரியாருக்கிருந்த காரணத்தினாலேயே 1972 களில் சாத்தியமான அறிவியல் சாதனையான சோதனைக் குழாய் குழந்தை பற்றி 1930 களிலேயே பெரியாரால் சித்திக்க முடிந்திருக்கிறது. அறிவியல் உலகத்தில் அக்காலகட்டத்தில் தாவரங்கள் அளவிலேயே மரபணு பற்றிய அறிவு வளர்ந்திருந்தது. ஓர் அறிவியல் சிந்தனையாக மனிதருள்ளும் இத்தகைய கண்டுபிடிப்புகள் நிகழக் கூடும் என்று அறிவியலறிஞர்கள் சிந்தித்திருக்கலாம். ஆனால் அதனை ஒரு சமுதாய வாழ்வியல் முறையாக பொருத்தி சிந்தித்த ஒரே மனிதர் பெரியார் மட்டுமே. அதாவது 1930 களில்.
இன்று சோதனைக் குழாய் குழந்தை வாடகைத் தாய் முறை போன்ற புதிய மகப்பேறு முறைகள் வளரத் தொடங்கி இருக்கின்றன. இவற்றை சிந்தனை அளவிலும் செயற்பாட்டு அளவிலும் பொருளாதார அளவிலும் மேலும் மேலும் எளிமைப்படுத்தி அனைவரும் கைக்கொள்ளும் வண்ணம் வளர்த்தெடுக்க வேண்டும். பிள்ளை பெறுவது பற்றி பெரியார் சொல்லியிருப்பதை தனித்தும் தட்டையாகவும் வாசிக்காமல் பொதுவாக மனித வாழ்க்கை பற்றிய அவரது எண்ணங்கள் சிந்தனையுடனும் அதில் ஆண் எதையெல்லாம் அனுபவித்து எப்படி வாழ விரும்புவானோ அவையனைத்திற்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்கின்ற அவரது முழுமை பெற்ற சமத்துவ சிந்தனையுடனும் இணைத்து வாசித்து புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒரு கட்டுரை அதனை முழுமையாக வழங்கி விட முடியாது. இதனைப் போல் தொடர் கட்டுரைகள், கதைகள் இனியும் வரும் வரவேண்டும்.
– மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 11-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட மலரிலிருந்து ஒரு பகுதி.