எழுத்தாளனுக்குப் பின்னுள்ள வாழ்வின் அவலங்கள்!

சுந்தர ராமசாமியின் ஜி. நாகராஜன் குறித்த நினைவோடை பதிவுகளில் அவருடைய மனக்கொந்தளிப்புகளை சகிப்புத்தன்மையை நியாயமான குற்றச்சாட்டுக்களை ஆச்சரியங்களை தவிப்புகளைப் படித்தேன் என்று எழுதியிருக்கிறார் எழுத்தாளர் எஸ். செந்தில்குமார்.

வேலாயுதம் என்பவருக்கு ஜி.என். தெருப்பொறுக்கி, நமக்கு ‘நாளை மற்றொரு நாளே’, ‘குறத்தி முடுக்கு’ எழுதிய படைப்பாளி. சு.ரா. ஓரிடத்தில் கூட நாகராஜனின் சொந்த வாழ்க்கைக் குறித்து தரம் தாழ்த்தி பேசவில்லை.

பொய்யான பிரம்மிப்புகளை அவர் மேல் போர்த்தவில்லை. மதுரை விடுதிகளில் நடந்த சம்பவங்களும் நாகர்கோவில் சு.ரா. வீட்டிலும் ஜவுளி கடை வாசலில் நடந்த சம்பவமும் அதிர்ச்சியளிக்கின்றன.

நாகராஜனின் புனைவுலகத்தைவிட அவர் குறித்த யதார்த்தம் விசித்திரமாகவுள்ளது. நாகராஜன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டதுதான் மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று தோன்றுகிறது.

கையில் காசில்லாமல் வடசேரி துண்டை வாங்கிக்கொண்டு காசு கொடுத்துவிடட்டுமா ராமசாமி என்று கேட்கும் அவருடைய மனசுதான் கதையுலகத்தைக் கட்டமைத்திருக்கிறது என்று தோன்றுகிறது.

எழுத்தாளனுக்குப் பின்னாலுள்ள வாழ்வின் அவலங்கள் கொடூரம் என்றால் அதனைவிட கொடூரம் அதனைத் தெரிந்துகொண்ட பின் படைப்புகளை வாசிப்பதுதான்.

Comments (0)
Add Comment