தமிழுக்கு வளம்சேர்த்த பெருமகனார் இளங்குமரனார்!

ஐநூறுக்கு மேற்பட்ட நூல்களை வழங்கித் தமிழ்வாழ்வே தம்வாழ்வு என வாழ்ந்தவர் தமிழறிஞர் இரா.இளங்குமரனார்! இவரின் இயற்பெயர் கிருட்டிணன்.

எட்டாவது குழந்தையென்பதால் வைக்கப்பட்ட பெயர். தனித்தமிழ் இயக்க ஈடுபாடும் மறைமலையடிகளார், ஞா.தேவநேயப் பாவாணர் நூல்தொடர்பும் இவரைப் புலவர் இரா.இளங்குமரனார் ஆக்கின.

பதினாறு வயதில் திருமணம். மனைவியார் பெயர் செல்வம். கலைமணி, இளங்கோ, பாரதி, திலகவதி இவர்களின் மக்கள்.

தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தாம் பிறந்த நெல்லை மாவட்ட வாழவந்தாள் புரத்தில் பணியைத் தொடங்கினார்.

இறுதி நான்கு ஆண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பணி ஓய்விற்குப்பின் திருச்சிராப்பள்ளி காவிரியாற்றங்கரையில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துத் தமிழ்நெறி வாழ்வியல் பணிகளை ஒருங்கிணைத்தார்.

தமிழாசிரியர் பணியை 1951இல் கரிவலம் வந்த நல்லூரிலும் பின்பு தளவாய்ப் புரத்திலும் தொடர்ந்த இவர், நீண்டகாலம் பணியாற்றியது மதுரை மு.மு. மேல்நிலைப் பள்ளியில்!

இவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சென்னை தமிழ்மண் பதிப்பகம் பொருள்வாரித் தொகுப்புகளாக வெளியிட்டு, வாழ்ந்த காலத்திலேயே இவரைப்
பெருமைப்படுத்தியுள்ளது.

அறிஞர் சி.இலக்குவனாரோடு இணைந்து தமிழ் வளர்ச்சிக் களம் கண்டவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தில் சிறப்புத்
தொகுப்பாளராக இவரை இணைத்துக் கொண்டவர் மொழிப் பேரறிஞர் பாவாணர்.

பாவாணர் வரலாறு , பாவாணர் மடல்கள் (இரு தொகுதி), பாவாணர் வேர்ச் சொல்லாய்வுத் தொகுப்பான ‘தேவநேயம்’ (14 தொகுதி), தமிழ்ச் சொற்களுக்குப் பொருட் காரணம் தரும் அருமுயற்சிப் பெருந்தொகுப்பு ‘செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்’ (பத்துத் தொகுதி) – இப்படித் தனித்தன்மையான நூல்வரிசைகளை வழங்கியுள்ளவர் இரா.இளங்குமரனார்.

‘ஒரு நூல் படித்தே அறிஞராகி விடலாம் எனுமளவிற்குச் சிறந்த நூல்’ என்று இளங்குமரனார் வியந்து பேசும் நூல் ’புறத்திரட்டு’!

அழிந்துபோன நூல்களாகக் கருதப்பட்ட ‘காக்கைப் பாடினியம்’, ‘தமிழக ஒழுகு’ முதலிய பல நூல்கள் இவர் பதிப்பால் உயிர்பெற்றுள்ளன.

சுவடிகள் அச்சேறிய வரலாற்றை விளக்கும் இவரின் ‘சுவடிக்கலை’ எனும் பெருநூல் தருவதோ பெருவியப்பு!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முதுமுனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

எலும்பு முறிவாலும் நெஞ்சகச் சிக்கலாலும் கோவை மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டிருந்த அறிஞர் இளங்குமரனார், மதுரை திருநகர் இராமன்தெரு இல்லத்தில் 25.7.2021 அன்று காலமானார்.

புலமையால் பொழுதளந்து தமிழுக்கு வளம்சேர்த்த பெருமகனாரின் நினைவிற்கு வலிமை சேர்ப்போம்.

  • நன்றி: முகநூல் பதிவு
Comments (0)
Add Comment