– அ. மார்க்ஸ் அழைப்பு
ஈழத்தின் தலித் உரிமைப் போராளியும், தலித் இலக்கிய முன்னோடியுமான கே.டானியல் அவர்கள் இறப்பதற்கு முன் இறுதியாக எழுதிய ‘சா நிழல்’ நூல் வரும் ஆகஸ்ட் 19 /20 தேதிகளில் சென்னையிலும் தஞ்சையிலும் வெளியிடப்பட உள்ளது.
டானியல் அவர்களின் மகன் வசந்தன் டானியல், மகள் தாரகா டானியல் இருவரும் கலந்து கொள்கின்றனர்.
தஞ்சையில் ராஜாகோரியில் இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கான அடக்கத் தலத்தில் அடக்கமாகியுள்ள டானியல் அவர்களின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு ஆக 20 மாலை அங்கு நினைவு அஞ்சலி ஒன்றும் நிகழ்கிறது.
டானியல் அவர்கள் சிகிச்சைக்காக இலங்கையில் இருந்து தஞ்சைக்கு வந்து எனது வீட்டில் தங்கி இருந்தபோது சிகிச்சைக்கு மத்தியில் அவர் மருத்துவமனையில் இறந்தார்.
அன்று இலங்கையில் இருந்த யுத்தச்சூழலில் சென்னைக்கு விமானப் போக்குவரத்து வசதி இல்லாதிருந்த நிலையில், அவரது அரசியல் மற்றும் இலக்கியத் தோழர்களும், பிள்ளைகளும் யாரும் இங்கு வர இயலாத நிலையில் தஞ்சையில் உள்ள இடதுசாரி இயக்கத் தோழர்கள் மற்றும் தலித் ஆதரவாளர்கள் பெரிய அளவில், எனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழறிஞர் வேல்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் உதவியுடன் அன்று மாலை தஞ்சை ராஜா கோரியில் உள்ள இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கான அடக்கத் தலத்தில் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் சமாதிக்கு அருகில் பெரிய அளவில் தோழர்களின் பங்கேற்புடன் அவரது அடக்கம் நிகழ்ந்தது.
சிகிச்சையின்போது டானியல் அவர்கள் அப்போது தஞ்சையில் இருந்த என் வீட்டில் இருந்து எழுதிய ‘சா நிழல்’ எனும் குறுநூல் முதன்முதலாக இப்போது அச்சில் வெளிவருகிறது. ‘சீரோ டிகிரி’ பதிப்பகம் அதை வெளியிடுகிறது.
ஆகஸ்ட் 19 மாலை சென்னையிலும் 20 மாலை தஞ்சையிலும் ‘சா நிழல்’ நூல் வெளியீடு நடக்க உள்ளது.
முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் டானியலை அறிந்தோர்கள், தலித் சிந்தனையாளர்கள் எனப் பலரும் இரு நிகழ்சிகளிலும் கலந்துகொள்கின்றனர்.
தலித் உரிமைப் போராளியும், தலித் எழுத்து என்பதற்கான இலக்கிய வடிவத்தை உருவாக்கிய ஆக முக்கிய முன்னோடியுமான டானியல் அவர்களின் நினைவு அஞ்சலிக் கூடங்களில் பங்குபெறுவோம்.