போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர் தி.ஜா!

– சு. வேணுகோபால்

“ஐம்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை வைத்துப் பார்க்கும்போது தி.ஜானகிராமனிடம் வெளிப்பட்ட கலையின் மகாசக்தியான உற்றுநோக்கல் திறன் வேறொருவரிடமும் வெளிப்படவில்லை.

சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் பாணியைக் கைக்கொண்டனர்.

கருத்துலகு மீதான விமர்சனம்தான் மார்க்சியம் என்ற சித்தாந்தத்தின் பொதுத்தன்மைகளை இவர்கள் புரிந்து கொண்டதிலிருந்து சமூகத்தைப் பார்த்தனர். இதனைப் பக்கபலமாகக் கொண்டு கதைகளை எழுதினர்.

சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் இருவரும் மார்க்சிய அழகியலை மட்டும் அன்று கைக்கொண்டு சமூகத்தைப் பார்த்தனர்.

ஜெயகாந்தன் அதிலிருந்து தனது உலகத்தை இன்னும் சற்று விரித்துக்கொண்டார். அந்த விரித்தலில் ஓர் இந்தியத்தன்மை இணைந்துவரத் தொடங்கியது. சுந்தர ராமசாமி அந்நியத் தன்மையை இழுத்து அணைத்தார்.”

“படைப்பில் வரும் பிரச்சனையில் அடியில் ஒளிந்திருக்கும் சூட்சுமங்களைத் தேடாமல் அப்பிரச்சனைக்குச் சமூகத்தின் மீது வைக்கிற நேரடி விமர்சனம்தான் என்று நினைக்கிறேன்.”

“உரையாடல் என்பது அம்மியரைக்கிற விஷயமல்ல. உள்ளத்தின் வெளிப்பாடு. இதனை தி. ஜா. அளவு யாரும் சாதிக்கவில்லை.”

“நவீனத்துவவாதிகளிடம் மேன்மைகளை வற்புறுத்தும் குணம் வற்றிவிட்டது. ஒருவகையான இறுகிய மனோநிலையையே அவர்களிடம் அதிகமும் தலை தூக்கிவிட்டது.

முரணான வாழ்க்கையை உச்சபட்சமாகச் சொல்லிவிட்டோம் எனச் சிலர் திருப்தி கொள்ளலாம். ஆனால் அதுவே கலைப்பரப்பின் முழுமையல்ல. அவர்களிடம் பரிபூரண எல்லைகள் கத்தரிக்கப்பட்டே சூனியத்தை நோக்கி இட்டுச் சென்றிருக்கின்றன படைப்புகள்.

சூனியம் ஒரு வித திகைப்பு. வாழ்வின் அர்த்தமற்ற பகுதிகளைச் சொல்லும் ஒரு சிறப்பு. அதுவே முழு வாழ்க்கையாகிவிடாது.

நவீன எழுத்தாளன் வேண்டுமானால் அதனை முழுமை என நம்பலாம். மண்ணில் நிற்கும் ஜனங்களும் அதனையே நம்பியாக வேண்டும் என எவரும் இலக்கிய விதி எழுத முடியாது.

நல்ல படைப்பாளி ஜனங்களின் ஜீவிதத்தைக் கண்டு அதில் பயணப்படுவான். மரபுகளில் நின்று புது மரபைப் படைப்பான்.”

“ஒன்றைச் சொல்லி ஒன்றைச் சொல்லாமல் விட்டுத் தாவுகிறார் தி. ஜா. அந்தப் பிச்சைக்காரக் கூட்டத்தில் இருப்பவர்களில் எத்தனை பேர் நெசவுத்தொழில் செய்தவரோ, உழவுத் தொழில் செய்தவரோ என கோலத்தை விலக்கிப் பார்க்கும்படி ஊகம் தொக்கி நிற்கிறது.

இந்த எண்ணம் வந்ததும் கதையின் கனபரிமாணம் கூடிவிடுகிறது. அரசு என்ன செய்து கொண்டிருந்தது, செய்து கொண்டிருக்கிறது, சமூகச் சிந்தனையாளர்கள் என்ன செய்து விட்டார்கள் என்ற கேள்வியை அக்கதை முன்வைக்கிறது.”

“மனிதர்களுக்குள் கள்ளத்தனமும் நல்லதனமும் முளைவிடுவது நம் நடத்தையின் பாற்பட்டதே.”

“நவீனத்துவம், உளவியல் போன்ற தத்துவத் துறைகளைக் கற்று இலக்கியத்திற்குத் தொழிற்படுத்த வேண்டும் என்ற கங்கணம் கட்டியவர் அல்ல தி. ஜா. அவ்வகையில் புதிய தத்துவப் போக்குகளை இயன்றளவு கற்றுக்கொண்டு வெற்றிகரமான கதைகளை எழுதியவர் என்று புதுமைப்பித்தனை மட்டுமே சொல்லமுடியும்.

பரிசோதனை முயற்சிகளில் தோல்வியுற்ற கலைஞர்கள் எண்ணிக்கையில் அதிகம். தி. ஜானகிராமன் மரபு கற்றுத் தரும் பாடத்தைச் சுயசிந்தனையோடு அணுகியவர்.

இசையிலிருந்தும், காவியங்களிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் மனித சாரத்தைத் திரட்டிக் கொண்டவர். எனவே இவரின் கதைகளில் மனத்தோய்வு நிரம்பி வழிகிறது. இதுவே இவர் கதைகளின் பலம்.”

“மூன்றாம் வகுப்பு மாணவனுக்குக் கணக்குப் பாடத்தைப் புரியவைக்க முடியாமல் திணறுகிறார் ஆசிரியர் திருமலை. எப்படி விளக்கிச் சொல்லியும் மெதுவாக விரித்துச் சொல்லியும் அவரால் அவன் மண்டையில் ஏற்ற முடியாமல் கொதிக்கிறார்.

அவன் அவர் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அதில் ஒரு முகச்சுளிப்பு தோன்றுகிறது மாணவனிடம். நிகழ்வு தாண்டி எங்கோ போய் நிற்கிறது. திருமலையின் முகம் அம்மை வடுவால் ஆன கோர முகம்.

(வாசகனுக்கும் அப்போதுதான் தெரியவருவது மாதிரி புதைத்து வைத்தபடி வந்திருக்கிறார்).

மாணவனின் சுளிப்பு, தன் மனைவி மணக்கோலத்தில் தன்னை முதன்முதல் கண்டபோது தோன்றிய முகச்சுளிப்பு போல இருக்கிறது. மாணவனின் கவனம் ஏனோ தன் அம்மை முகத்தில் ஒருமை கொண்டு கிடப்பதை உணர்கிறார்.

அவனுக்குக் கணக்கு மண்டையில் தற்போது ஏறாது. திருமலைக்கு அவமானம் கவ்வுகிறது. அவனை அடித்தால் – திட்டினால் மனம் சாந்தப்படலாம். வீடு தேடி வந்தபோது அவன் மாலைத் தூக்கம் போடுவது தெரியவருகிறது.

கோபம் வேறொன்றாக மாற்றமுறுகிறது. முதலிரவில் காமத்துய்ப்பிற்கு முன் புது மனைவியின் ஒவ்வாமையை அவள் முகத்தில் காண்கிறார். அருவருப்படைவது போல் தெரிகிறது. உறவிற்குப்பின் அவளிடம் அந்தச்சுளிப்பு மறைந்து போனதாக ஒரு வரி வருகிறது. எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு!

பழகப் பழக வரும் சகஜம் அல்ல அது. உடலின் பகிர்தலின் வழிவந்த சகஜம். மாணவனின் பார்வை சுயவதையை உண்டாக்குகிறது.

அவனிடம் வெளிப்படுத்த முடியாத கோபத்தை மனைவியை அவசரமாகப் புணர்ந்து நொறுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த ஆழ்மன வெடிப்பை மனிதனுள் புதைந்திருக்கும் மிருகமாகக் காண்கிறார்.”

“ஜானகிராமன் எப்போதும் கு.ப. ரா. போல பார்வையை ஒடுக்கிக் கொள்வதில்லை. இந்த பலகீனம் ஜானகிராமன் கதைகளில் இல்லை. அதன் சகல திசைகளில் பார்வைகளை செலுத்தியிருக்கிறார்.

கு.ப. ரா. உணர்வைச் சொல்வதிலேயே கவனம் கொள்ள, ஜானகிராமன் உணர்வை உண்டாக்கும் காரணிகள் அனைத்தையும் விவரணைப்படுத்தி வருகிறார்.

சிலசமயம் கதைக்குள் இன்னபிற தகவல்கள் வரும்போது அவை தகவல்களாக இல்லாமல் கதையின் சத்தான பகுதிகளாக உருக்கொண்டு விடுகின்றன.

அவைகள் சிறுகதைக்கு புஷ்டியைக் கொடுக்கின்றன. புதிய பரிமாணத்தை – வலுவை – நம்பகத் தன்மையை – காவியச்சாயலை வாரி அளிக்கின்றன.

கலையின் ஆற்றல் என்பது இதுதான். எவ்வளவு பெரிய மர்மத்தை ஒரு படைப்பு வெளிப்படுத்தினாலும் இந்த துணை உலக விவரணைகள் இல்லாதபோது கலைவெற்றி கூடுவதில்லை.

கு.ப. ரா. வின் ‘சிறிது வெளிச்சம்’ஒரு வித ஒடுக்கத்தால் அமைந்திருப்பதைப் பார்க்க முடியும் தி. ஜா. இதனை அநாயசமாகச் சாதித்திருக்கிறார்.”

“நாவல்களில் பாலியல் பிரச்சனைகளைக் கையில் எடுத்த ஜானகிராமன் சிறுகதைகளில் உன்னதங்களையும், கீழ்மைகளையும், கருணைகளையும், பரிவுகளையும் கசப்பையும் முன் வைத்திருக்கிறார்.

இவரின் கலைமேன்மை நாவல்களில் வெளிப்பட்டதைவிட சிறுகதைகளிலேயே மகத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. இது அறிப்படாமலே கிடக்கிறது.”

“தமிழ் மொழியில் தனிப்பெரும் வியக்தி தி. ஜானகிராமன். மனித அழகுகள் ஒவ்வொன்றாகப் பொருத்திச் சேர்த்து, அழகைப் பேரழகாக மாற்றிய பெரும் கலைஞர் தி. ஜா.

வார்த்தை அழகு, உச்சரிக்கும் அழகு, வெற்றிலைச் செல்லத்தோடு குழறிப் பேசும் அழகு, நிற்கும் அழகு, நிகு நிகு உடம்பழகு, பாட்டு அழகு, மனப்பரிமள வாசனை அழகு, காமம் விகசித்துச் சூரியனையே போகத்துக்கு அழைக்கும் அழகு என அனைத்து அழகுகளாலும் பெண்களைப் படைத்த ஐம்பொன் குயவர் அவர்.

பெண்களின் விகாசம் தாங்காமல், ஆண்களை தற்கொலை செய்ய வைத்த, நேசத்துக்குரிய தன்பால் துரோகி அவர். அதனாலேயே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பெண்களின் புழங்கு விழிகளை வானம் அளவு விஸ்தரித்த கலைஞர் அவர்.”

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment