தமிழில் ஒரு சகாப்த கவியாக மலர்ந்த பிரமிள்!

தமிழின் ஒரு சகாப்த கவியாக மலர்ந்த பிரமிள் மற்ற தன் படைப்புகளுக்காக மட்டுமல்ல, தான் உருவாக்கிய நவீன கவிதையின் ஒரு பாதைக்காகவும் உரிய இடத்தை பெறவில்லை என்ற பழைய வாசகங்கள் மறைந்து விட்டன.

அப்படி கூறியதன் அடிப்படைக் காரணங்கள் நாம் எளிதில் புரிந்து கொள்ள கூடியவையே.

தமிழ் நவீன கவிதைப் பரப்பில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவற்கு சிலர் செய்த கைங்கர்யம் அது.

ஆனால், உயர்ந்து நிற்கும் சிகரத்தை ஒரு படுதாவைப் போட்டு மறைக்கவா முடியும்.?

இன்று இளைய கவிகளுக்கு ஆதர்ச கவியாக மாறியுள்ளார் எனில் காலம் இன்னும் அரை நூற்றாண்டுக்கு அவரை விடுத்து நகராது என்பது திண்ணம்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலான நம் கவிதை மரபினில் புதிய அடையாம் சுட்டிவிட தம் அகல் விளக்கின் ஒளியோடு தேடியபடி இருந்த சி.சு.செல்லாப்பாவிற்கு சிகரம் போல் கிடைத்தவர் தாம் பிரமிள்.

அவரின் எழுத்து பத்திரிகையில் பலர் கவிதைகள் முயற்சி செய்து கொண்டிருந்தாலும் உக்கிரத்துடன் ஆற்றலும் அக விழிப்பின் தோற்றங்களும் கொண்ட ஒரு சில கவிதைகளை எழுத்திலேயே பிரமிள் வெளிப்படுத்தினார்.

அதன் பின்னரே தன்சிகரப் படைப்புகளையும் விமர்சனங்களும் தமிழில் பலதரப்பட்ட படைப்பு களையும் அவர் படைத்தார் என்றாலும் பிரமிள் தன் பரிபூரணத்தை பெற்றிருப்பது கவிதைகளில் தாம் (அவர் எழுதிய நஷ் சத்திர வாசி நாடகம் தனி வகையறா சேர்ந்தது) அவரின் விமர்சனத்தின் நோக்கம் மனிதார்த்தங்களின் மையத்தையே உயர்த்திப் பிடித்தன.

கட்டுரைகளிலும் நேர்காணல்களிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விஷயத் தகவல்கள், அத்தகவல்களின் மீதுயரும் தர்க்கங்கள், அத்தர்க்கங்களினால் கொண்டு வரும் முடிவுக்கான அம்சங்கள் யாவும் பிரமிளின் தீர்க்கமான பார்வையை அறிய வைத்தன.

எதனுடனும் சமரசம் செய்து கொள்ளாத போக்கும் வளைந்து கொடுக்காத தன்மையும் அவரின் குணாம்சங்களாக அறியப்பட்டதனால் அவரை ஒதுக்கவும் முற்பட்டனர் எனினும் அவரை காத்து நின்றவர்களில் கால. சுப்பிரமணியம் முதன்மையானவர்.

மேலும் வெளி. ரங்கராஜன் அழகிய சிங்கர், வெ.மு பொதியவெற்பன் அ.அமிர்தராஜ் என பலர் நீளும்பட்டியலும் உண்டு. அவர்களைப் பின்னர் பார்ப்போம்.

பிரமிளின் மொழிபெயர்ப்பு மற்றும் விமர்சனக் கவிதைகள் தவிர்த்து அவரின் கவியுலகை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

ஆரம்ப கால படிமங்களடங் கியர் கவிதைகள், மானுட உணர்வுகள் சங்கமிக்கும் கவிதைகள், அறிவியல், மற்றும் ஆன்மீக தர்க்கங்கள் அடங்கிய கவிதைகள் என்றவாறு பிரித்து கொள்வது ஒரு புரிதலுக்காகத் தாம்.

(இவற்றையும் மீறி வாசல் என்ற தலைப்பில் நான்கு திசை கவிதைகள் ஜோதிடத்தின் அடிப்படையிலும் எழுந்துள்ளன என்பது தற்போதைய கணிப்பு) எழுத்தில் படைத்த கவிதைகளுக்கு மாற்றாக படிமங்களாலேயே கவிதை புனைதல் என்பது பிரமிள் உருவாக்கிய பெருங்கொடை.

“கவிதை தன்னை ஆழமான இடங்களுக்கு அழைத்துச் சென்றது தொடக்கக் கால படிமங்களே என நான் எண்ணுவதுண்டு” என்ற நேர் பேச்சுகவனிக்கத் தக்கது.

ககனப் பறவை நீட்டும் அலகு
கதிரோன் நிலத்தில் எறியும் பார்வை.
கடலுள் அமிழம் அமிர்த தாரை.
கடவுள் ஊன்றும் செங்கோல்.
(மின்னல்)

இது போன்ற கவிதைகளும் தர்க்கமும்
கேள்விகளுமான படைப்புகளே பிரமிளை படிமக் கவிஞர் என அழைக்கப்பெற வைத்தன.

கவிதை,
இறக்கத் துடிக்கும் வாலா,
உயிரோடு மீண்ட உடலா (பல்லி)

பிரமிள் உணர்த்தியவை நவீனக் கவிதையின் வடிவம், சொற் செட்டுகள் அதன் செயல்பாடுகள், அர்த்தமுள்ள கண்ணிகளின் இணைப்பு அதன் அழகு என்றவாறு கூறலாம்.

இவற்றை எழுத்தில் வெளிப்பட்ட கவிதைகளோடு இணைத்துப் பார்த்தால் புரியும்.

இதன் பாதிப்பில் பெரும்பாலோர் எழுதிய கவிதைகளில் மேற்கூறியவை நடந்தேறின.

இந்த வகையான கவிதை இயக்கத்தில் பிரமிளே தொடக்கப் புள்ளி. இவரின் ‘விடிவு’ கவிதை பலரால் எழுதப்பட்ட மூலப்பிரதியாக இருந்துள்ளது.

தமிழ் கவிதைப் பரப்பில் தர்க்கமுடைய போக்கில் வெளிப்படும் மானுட மேன்மை மற்றும் கவிதையின் பன்முகங்கள் மற்றும் பரிமாணங்கள் என அதன் முன் நிகழ்ந்திராத தோற்றுவாய் பிரமிளிடமிருந்தே தொடங்கின எனலாம்.

இறக்கத் துடிக்கும் வாலா உயிரோடு மீண்ட உடலா என்பதில் உள்ள ஜீவதத்திற்கும் இறப்புக்குமான தத்துவார்த்தமான கேள்வி கவிதையை மட்டுமே குறிக்கவில்லை.

வாழ்வில் நாம் கொண்டு வரும் எந்த செயல்பாட்டிற்குமான விளைவுகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். பார்ப்போம்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment