அடர் காடுகளில் வசிக்கும் ஆனைமலைக் காடர்கள்!

ஆனைமலையில் எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக வாழும் காடர்களின் விசித்திர வாழ்க்கையை நேரில் பார்க்கவே நான் அங்கு சென்றேன்.

மேற்படி காடர்களைக் காண வேண்டுமானால், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்குப் போகும் வழியில், ஆயர்பாடி என்னும் இடத்தில் இறங்க வேண்டும்.

பிறகு எஸ்டேட்டு வழியாகச் சிறிது தூரம் சென்று, வெளிச்சமே புகமுடியாத பயங்கரமான இருண்ட காட்டில், ஒற்றையடிப் பாதையின் வழியாகச் சுமார் நான்கு மைல் தூரம் வரையில் நடக்க வேண்டும். அவ்விதம் சென்ற பின் ‘கவர்க்கல் காட்டை’ அடைவோம்.

அடர்ந்த காடுகளில் வசிப்பதாலேயே இவர்களுக்குக் காடர்கள் என்று பெயர் வந்தது. அட்டைகள், கருங்குரங்குகள் கொடிய மிருகங்களின் கர்ஜனை, வண்டுகளின் ரீங்காரம் இவற்றைத் தவிர, மற்ற எதையும் அங்கு நாம் காதால் கேட்கவோ, கண்ணால் காணவோ இயலாது. அடர்ந்த காட்டுக்குள் செல்லச் செல்ல, நாம் ஏன் இங்கு வந்தோம் என்ற பீதி என் உள்ளத்திலே ஏற்பட்டது.

மனைவி, குழந்தைகளின் சிந்தனை ஒரு பக்கம் எழுந்தது. இந்தக் காட்டில் தான் நமது இந்த உலக வாழ்வு முடியப் போகிறதோ என்ற எண்ணமும் என்னை வாட்டத் தொடங்கியது.

காட்டில் எனக்கு வழி காட்டி வந்தவர் அடிக்கடி என் மேலிருக்கும் அட்டைகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்ததால், நிலையான சிந்தனையுடனும் கூர்ந்த பார்வையுடனும் நடந்து செல்ல முடியவில்லை.

ஒற்றையடிப் பாதையில் போகும் போது வழியில் ஓடி வந்த ஒரு காடன், எங்களைக் கண்டதும், “ஐயா, இந்தப் பக்கம் போக வேண்டாம். யானைக் கூட்டங்கள் அதிகமாக இருக்கின்றன” என்றான்.

இவ்விதம் காட்டு ஜாதியார் ஏதாகிலும் கூறினால், அதை நான் பொன் மொழியாகக் கருதுவது வழக்கம். எனக்கு வழிகாட்டியாக வந்த யசோதரன் உடனே வேறு வழியாக என்னை அழைத்துச் சென்றார்.

நல்ல வழிகாட்டி எனக்குக் கிடைத்ததால், கொடிய விலங்குகள் வாழும் காட்டில் ஆயுதமில்லாமல் செல்ல முடிந்தது. சில இடங்களில் மலை செங்குத்தாக இருந்தது.

சில இடங்களில் பெரிய ஓடைகளின் குறுக்கே, காட்டு மரங்களின் மேல் நடந்து ஓடையைத் தாண்டி செல்ல வேண்டியதாக இருந்தது.

இவ்வளவு சிரமத்துடன் சென்றாலும், காட்டு ஜாதி மக்கள் எங்களைக் கண்டதும் ஓடி ஒளிந்துகொள்ளுவார்கள்.

காடர்களின் குடிசைகள் அருகிலிருக்கின்றன என்பதை வாழைத் தோட்டங்களே நமக்கு முதலில் தெரிவிக்கும். “காடர்கள் பட்டி” என்று அவர்கள் வசிக்குமிடங்களைச் சொல்லுகிறார்கள்.

இவர்களின் குடிசைகள் மற்றவர்களின் கண்களுக்கு எட்டாத தூரத்திலும், ஓடைக்கு அருகிலும், மலைச் சரிவிலும் இருக்கின்றன. குடிசைகள் முழுவதும் மூங்கிலால் நிர்மாணிக்கப்பட்டவை. கூரை, சுவர், கதவு முதலியவைகள் யாவும் மூங்கில்களால் செய்யப்பட்டவையே.

மூங்கில் சுவருக்கு மேல், மண்ணையும், இலையையும் கலந்து பூசுகின்றனர். குடிசைக்குள்ளும், வெளியிலும் படுப்பதற்காகப் பெரிய திண்ணைகள் கட்டியிருக்கின்றனர்.

சமையல் செய்வதற்கும், குளிர் காய்வதற்கும், கட்டைகள் எரிப்பதற்கும் தனித்தனி இடங்களுண்டு.

மழைக் காலங்களில் கொடிய விலங்குகளுக்குப் பயந்து, ஒரு பெரிய பந்தல் அமைத்து, அதன் மத்தியில், பட்டியிலுள்ள குழந்தைகளும், பிறகு பெண்களும், அதைச் சுற்றிலும் ஆடவர்களும் படுத்துக் கொள்ளுகின்றனர்.

அப்பந்தலைச் சுற்றிப் பெரிய பெரிய கட்டைகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. நெருப்பு அணையாமலிருக்கவும், விலங்குகளுக்காகவும் இரவு முழுவதும், கையில் அம்புடன் ஒரு காடன் காவல் காக்கிறான்.

பகலில் மட்டும் பெண்களில் யாராவது ஒருத்தி பார்த்துக் கொள்ளுகிறாள். இவர்களின் குடிசைகளைச் சுற்றிலும் எரிந்த சாம்பல் குவியல்கள் அதிகம் உண்டு.

இவர்களின் வீட்டில் மண் பாண்டங்களும், மூங்கிற் சாமான்களும் தான் அதிகமாக இருக்கின்றன. இரண்டு கஐ நீளம் உள்ள அகன்ற மூங்கிற் குழாயில் தண்ணீரை நிறைத்து வைத்திருக்கின்றனர்.

தேனுக்காகவும் காட்டுக் கிழங்குசுளுக்காகவும், விவசாயத்தைக் கருதியும் இவர்கள் ஓரிடத்தில் நிலைத்திருப்பதில்லை.

அடிக்கடி குடிசைகளைப் பிரிப்பதற்கு ஏற்றாற்போல் அமைத்திருக்கின்றனர்.

ஆண்களுக்கு, வேகமாக ஓடவும், மரம் ஏறவும் தகுந்தாற்போல் அவர்களுடைய  கால்கள்  சிறுத்திருக்கின்றன.

இயற்கையிவேயே பயந்த சுபாவமுள்ளவர்கள். பார்வைக்குக் குள்ளமாகவும், அகன்ற மூக்கும், சுருட்டை மயிரும், கறுத்த நிறமும், உடல் கட்டும் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

சாதாரண நாட்களிலும், நல்ல நாட்களிலும், வேஷ்டியும், தலைப்பாகையும் அணிந்து, மேலே ஒரு துண்டைப் போர்வையாகப் போர்த்தி மார்புக்கு நேராக முடிபோடுகிறார்கள்.

ஆண்களும், பெண்களும் தலையில் மூங்கிற் சீப்பைச் செருகி வைத்திருக்கிறார்கள். ஆண்களுக்குக் கத்தி, கோடரி, மண்வெட்டி, ஈட்டி, அரிவாள், பாறைக்கோல் முதலியவைகள் தான் முக்கியமான ஆயுதங்கள்.

பெண்கள் குள்ளமாக இருக்கிறார்கள். நான்கு, ஐந்து அடி உயரமுள்ளவர்களும் உண்டு.

எட்டு கெஜம் நூல் புடவையை மட்டும் அணிந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல உழைப்பாளிகள்.

இவர்கள் வெள்ளிக் கம்மலும், மூக்குத்தியும், கையில் பித்தளைக் காப்பும் அணிந்திருக்கின்றனர்.

பெண்ணும் ஆணும் ஒரு விதப் பொடியை வைத்துத் தங்கள் பற்களைக் கறையாக்கிக் கொள்ளுகின்றனர். தலையை வாரிக் கொண்டை போட்டு, காட்டுப் பூக்களுடன், ஒரு மூங்கில் சீப்பும் செருகிச் சுத்தமாகக் காட்சி அளிக்கின்றனர்.

பெண்களும் ஆண்களுடன் தேன் எடுத்தல், வேட்டையாடல் முதலிய பணிகளுக்கு  உதவி செய்யப் போவதால், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கணவருடன் பணி செய்யும் போது முதுகில் வைத்து முந்தானைத் துணியால் கட்டித் தூக்கிக் கொள்ளுகின்றனர்.

காடர்களைப் போலவே ஜப்பானியர், பல்கேரியர், பெடூயினர், இந்தோ சீனாவிலுள்ள ‘அன்னாம்’ ஜாதியினர், போர்னியோ மக்கள் முதலியோர் தங்கள் குழந்தைகளை முதுகில் கட்டித் தூக்குகின்றனர்.

ஆடவர்கள் வாசிக்கும் வாத்தியங்களெல்லாம் மூங்கிலாலும், ஓலையாலுமே செய்யப்பட்டவை.

இன்றும் இவர்கள் இரவில் விளக்கு வைப்பதில்லை. அதற்குப் பதிலாக வெட்டி விட்ட குங்கிலிய மரத்தின் பாலை, பிசின் போல் எடுத்துக் காயவைத்து கெட்டியானதும், அதை விளக்காக எரிக்கின்றனர். அதை எரிப்பதற்கும் பண்டைக் காலத்திலும் சரி, இன்றும் சரி, சிலர் மட்டும், கல்லையோ மூங்கிலையோ உறைத்து நெருப்பை உண்டாக்குகிறார்கள்.

காடர்கள் தங்கள் பெயர்களின் கடைசியில் ஒரு பட்டம் போல், ‘ஆளி’ என்று சேர்த்துக் கொள்ளுகின்றனர். எனக்கு விலாசம் கொடுத்தவனின் பெயர், ‘தங்கவேலு ஆளி காடர்’ என்பதாகும்.

காடர்கள் தைரியசாலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், நிலத்தில் வேலை செய்கிறவர்களாகவும் பார்த்துத்தான் திருமணத்துக்குப் பெண்களைத் தேர்ந்தெடுப்பார்கள். 

திருமணத்துக்கு என்று தனி வயதில்லை. திருமணத்துக்கு வளர்பிறையில், ஒரு வெள்ளிக் கிழமையாகப் பார்த்து, நாளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

திருமணத்தன்று அவர்கள் தாலி கட்டுதல், தாம்பூலம் மாற்றுதல், தலைப்பாகை சுட்டுதல் முதலிய சடங்குகள் பஞ்சாயத்தாரின் முன்னிலையில் நடைபெற வேண்டும்.

திருமணமான பின்னும் மனைவியுடன், தன் பகுதியைக் கொடுத்து, ஒரே குடிசையில் பெற்றோர்களுடன் தான் வாழவேண்டும். 

அவர்களிடையே நடைபெறும் திருமணச் சடங்குகள் மிகவும் விசித்திரமானவை.

தம்பதிகளுக்குள் சச்சரவுகள் ஏற்பட்டால், பஞ்சாயத்தாரின் முன்னிலையில், நியாயம் பேசி, சமாதானப் படுத்தப் பார்ப்பார்கள்.

இருவரும் ஒத்துவராவிட்டால் பஞ்சாயத்தாரின் மூலம் விவாகரத்து செய்து பெண்ணைத் தாயகம் அனுப்புவார்கள்.

காடர்கள் சாதாரணமாய் மலேரியாக் காய்ச்சல், வயிற்றுவலி, வீக்கம் முதலிய வியாதிகளால் கஷ்டப்படுகிறார்கள்.

இவ்வியாதிகளுக்கு ஆஸ்பத்திரி தூரத்தில் இருப்பதால், தங்களிடம் இருக்கும் மருந்துகளையும், மூலிகைகளையும், கஷாயங்களையும் செய்து                          சாப்பிடுகிறார்கள்.

சிலர் வியாதி வந்தால் முறத்தில் இரும்புச் சங்கிலியைப் போட்டு ஆகாயத்தைப் பார்த்து, புடைப்பார்கள்.

அவர்களுக்கு தெய்வ அருள் வந்து வியாதி குணமாக ஏதாவது ஒரு பரிகாரம் தோன்றும்; நோயாளியிடம் கூறுவார்கள். நோயாளி அதைச் செய்ததும், வியாதி குணமாகி விடுமாம்.

காடர்களுக்குக் காட்டுக் கிழங்கு (இது சேப்பங்கிழங்கைப் போல் வழவழப்பாக இருக்கிறது) தேன், கருங்குரங்குகள்தான் முக்கியமான உணவு.

இத்துடன் மூங்கில் அரிசி, ஆடு மாடு, பறவை இனங்கள். மச்சங்கள், எலி இனங்கள் முதலியவைகளைச் சாப்பிடுகிறார்கள்.

இவர்களுக்கு அரிசி கிடைப்பது அரிது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல நாட்களில் சாராயம், கஞ்சா குடிப்பதில் விருப்பம் அதிகம்.

காடர்களின் முக்கியமான தொழில் தேன் எடுப்பதும், மரங்கள், மூங்கில் முதலியவைகள் விற்பனை செய்வதும் ஆகும். இன்று சிலர் பயிர்த் தொழில் செய்கிறார்கள்.

வலைகளை வைத்து மிருகங்களையும், பறவைகளையும் பிடிப்பதில் சமர்த்தர்கள். இவர்களின் பட்டிக்குச் செல்லும் போது, என்ன? இவ்வளவு நாய்கள் வளர்க்கின்றனரே என்று சிந்தித்தேன்.

விசாரித்ததில் ஒவ்வொரு நாயும் வேட்டைக்காகவே வைத்திருக்கின்றனரென்று தெரிந்து கொண்டேன்.

முயல், காட்டுப்பன்றி, மான் முதலியவைகளை வேட்டையாடவும், கொடிய விலங்குகள் வருகின்றன என்று தெரியப்படுத்தவும் நாயைப் பழக்கியிருக்கின்றனர்.

தேன், கொம்புகள், தோல், குளம்பு, விலங்குகளின் பற்கள், பறவைகளின் சிறகுகள் முதலியவைகளை ஊர்களுக்குள் கொணர்ந்து, விற்பனை செய்து, தங்களுக்கு வேண்டியதை வாங்கிச் செல்கின்றனர்.

நமக்கு ஆகவேண்டிய வேலைகள் ஏதாவது இருந்தாலும், அதையும் முகமலர்ச்சியுடன் செய்து கூலி பெற்றுக் கொள்கின்றனர்.

பாம்புக் கடிக்கு உடனே நிவாரணம் அளிக்கும் மருந்து இவர்களிடம் இருக்கிறது. சிலர் விஷ வேர்களைத் தண்ணீரில் கரைத்து மீனை மயக்கிப் பிடித்து, அவைகளை உண்பார்கள்.

மானிடர் கண்களுக்கு எட்டாத தூரத்திலும், மலைச் சரிவுகளிலிருக்கும் பாறைகளின் இடுக்குகளிலும் தேனீக்கள் கூடு கட்டுவதை இக்காடர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். சுமார் நூறடி இருக்கும் சில காட்டு மரங்களின் மேல், தேன் கூடுகள் திரண்டிருக்கும்.

அவ்வித மரங்களின் மேல் ஏறுவது இயலாத காரியம். அவ்விதமான இடங்களில் உயரமான மூங்கில்களைக் கணுக் கணுவாக விட்டு விட்டு வெட்டி மரத்துடன் சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாகக் கட்டி, மூங்கில் கணுவின் மேல் கால் வைத்து ஏறி உச்சியில் சென்று, தேனை எடுத்துத் தங்கள் முதுகில் கட்டியிருக்கும் மூங்கில் குழாயில் போட்டுக் கொள்ளுவார்கள்.

அடர்ந்த காடுகளில் ஐம்பதடி மூங்கிலை எடுத்துச் செல்வது சிரமமல்லவா அவ்விதமான இடங்களிலிருக்கும் தேனை எடுக்க, சுமார் ஓரடி நீளமுள்ள அறுபது, எழுபது மர ஆப்புகளைத் தயார் செய்து கொண்டு அடிமரத்திலிருந்து ஒவ்வொன்றாக அடித்துக் கொண்டே ஏறுவார்கள்.

முதலில் அடித்த ஆப்பின் மேல் இடது காலை ஊன்றி, அதற்கு மேலிருக்கும் ஆப்பில், மற்றொரு காலைக் கொக்கி போல் மாட்டிக்கொண்டு, இன்னொரு ஆப்பைத் தலைக்கு மேல் அடிப்பார்கள்.

இப்படி ஆப்பு அடித்துக் கொண்டே ஏறிய காடனைக் கீழிருந்து மர உச்சியில் பார்த்தால் ஒரு பருந்தைப் போல் சிறு உருவமாகத் தெரிவான்.

ஒவ்வொரு பட்டிக்கும் ஒவ்வொரு தலைவனுண்டு. தலைவனைக் குடும்பப் பரம்பரையாகவே தேர்ந்தெடுப்பது வழக்கம். தலைவனை மூப்பன் என்றும், அவன் மனைவியை “மூப்பாட்டி” என்றும் அழைக்கின்றனர்.

மாரியாத்தா, ஐயப்பன், மதுரை வீரன், காளி முதலிய குல தெய்வங்களை வணங்குவதுடன் காட்டு யானைகளைத் தூரத்தில் கண்டு கைகூப்பி வணங்குகிறார்கள்.

வால் குட்டையான கருங்குரங்குகளை, “காட்டின் சாபக்கேடுகள்” என்று வேட்டையாடிக் கொன்று புசிக்கின்றனர்.

கொடிய மிருகங்களிடமிருந்து தப்ப “மலைவாசி” என்ற தெய்வத்தையும் வணங்குகிறார்கள்.

வியாதி வந்தால், இறந்தவர்களை நினைத்து “நினைவு பூஜை” செய்தால், வியாதி சுகமாகிறதென்ற நம்பிக்கை இன்றும் இவர்களிடையே நிலவி வருகிறது.

இவர்கள் பேசும் பாஷைக்கு இலக்கணமும், இலக்கியமுமில்லை. கொச்சைத் தமிழும், மலையாளமும் பேசுகிறார்கள்.

மலை ஏறுவதிலும், மரமேறுவதிலும், மிருகங்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மோப்பம் பிடித்துச் செல்வதிலும்,

மோப்பத்தால் எத்திசையில், எவ்விலங்குகள், எவ்வளவு தூரத்தில் வருகிறதென்று தெரிந்து கொள்வதிலும் வல்லவர்களாகியவர்களின் இனம் மேம்படவும், குழந்தைகள் கல்வியறிவு பெறவும், நல்லதோர் வாழ்வு வாழவும்,

இவர்கள் இனம் அழிவுறாமல் காக்கவும் நல்ல குடி தண்ணீரும், நிலமும், கலப்பையும், வீடு வசதியும் நல்ல வழியும் ஏற்படுத்திக் கொடுத்து, இவர்களைக் கவனித்தால், இன்னும் சில ஐந்தாண்டுகளிலாவது இவர்கள் முன்னேற்றம் அடைய இடம் உண்டு.

பீலோ இருதயநாத்

கட்டுரை ஆசிரியர் குறிப்பு:

பீலோ இருதயநாத் (1916-1992);  இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளையும் நாடோடிகளையும் நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறைப் பற்றி அறிந்து கொண்டு அதை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு கட்டுரைகள் எழுதியவர்.

இவர் தமிழ்நாட்டில் பழங்குடி ஆய்வுகளின் முன்னோடி ஆவார். 1950 ஆம் ஆண்டு முதல் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழின் முன்னணி இதழ்களில் பழங்குடிகளின் பண்பாடு, கோவில் சிற்பக்கலை உள்ளிட்டு பண்பாடு தொடர்பாக கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவை 30-க்கும் மேற்பட்ட நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக 25 ஆண்டுகாலம் பணி செய்திருக்கிறார்.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் (1960), இந்திய அரசின் நல்லாசிரியர் விருதும் (1978) பெற்றுள்ளார்.

நன்றி:  தமிழ்த்தடம் (தமிழகப் பழங்குடிகள்) சிறப்பிதழில் வெளிவந்த ஒரு கட்டுரை.

Comments (0)
Add Comment