ஓவியங்களில் இந்தியத் தன்மை!

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 2015 ஆம் ஆண்டு நடந்த ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலருக்காக நவீன ஒவியர் கே.எம். ஆதிமூலம் எழுதிய கட்டுரை.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் சிற்பமும் ஓவியமும் நீண்ட வரலாறும், பாரம்பரியத் தொன்மையுங் கொண்டவை.

உலக வரலாற்றில் இந்தியாவின் அமரத்தன்மை கொண்ட சிற்பங்கள் உன்னதமான இடத்தை வகித்து வருகின்றன.

புறத்தோற்றத்தின் அழகையும், வடிவமைப்புகளையும் அப்பழுக்கின்றி, தத்ரூபமாக, நிஜத்தின் நகல்களாக (Renaisance Paintings) ஐரோப்பியக் கலைஞர்கள் செய்து கொண்டிருந்த காலத்திலும், அதற்குப் பல நூறு ஆண்டுகள் முற்பட்ட காலத்திலும் நமது கலைஞர்கள் வெகு தொலைவுக்குப்போய் ‘Spiritual Beauties’ என்ற ஆழமான அம்சங்களை உண்மையான பாவங்களுடன், உணர்ச்சிப் பாங்குடன் தெளிவான படைப்புகள் மூலம் வெளியிட்டார்கள்.

மனிதர்கள், பிற உயிரினங்கள், தாவரங்கள், பொருள்களின் வெளித்தோற்றத் தன்மைகள், அளவுகள் மீறப்பட்ட ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கட்டவிழ்க்கப்பட்ட படைப்புகளாக இவை இருந்தன.

சில புராதனச் சிற்பங்களைக் காணும்போது, அவற்றைப் படைத்த கலைஞர்கள் தவ வலிமை மிக்கவர்களாக இருந்திருப்பார்களோ என்று கூட எண்ணத்தோன்றும்.

ஆனால், இவற்றைத் தனிப்பட்ட ஒரு கலைஞனின் படைப்பு என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் முழுக் கலைநோக்கையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதான கூட்டு முயற்சிகளாகவே தோற்றமளிக்கின்றன – (பிரமாண்டமான கோயில் நிர்மாணங்கள், கற்கோயில்கள், குகைக்கோயில்கள், பெரும் சிற்பங்கள், விகாரங்கள் ஆகியவற்றை உதாரணத்திற்குக் கூறலாம்). அதுவும் நூற்றுக்கு நூறு சமயங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே.

இருநூறு வருட ஆங்கில ஏகாதிபத்தியத்தில் மேற்சொன்ன ஒரு தொடர்பான வளர்ச்சியினின்றும் நமது கலை மரபு துண்டிக்கப்பட்டு, சிறு கோயில்களுக்குச் சிலை வடிப்பதோடு நின்றுவிட்டது. கலையைப் பார்த்து இரசிக்கின்ற ஒரு பாரம்பரியமே கூட இல்லாமல் போய்விட்டது.

அதன் காரணமாகவே கலைஞர்களின் இன்றைய படைப்புகள்  மக்களிடத்தில் குறைந்த அளவு பாதிப்புக்கூட ஏற்படுத்த முடியவில்லை என்பதோடு கலைஞர்களைப் பற்றிய உயர்வான அபிப்பிராயம்கூட கொள்ள முடியாமல் போய்விட்டது.

ஓவிய, சிற்பக் கலைகளைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இந்திய மக்களிடம் இல்லாத சமயத்தில் 19ஆவது நூற்றாண்டின் இரண்டாம் கட்டத்தில் தெற்கில் – முதல் இந்தியர் என்ற பெருமையுடன் ரவிவர்மா (1848-ல் கேரளத்தில் அரச குடும்பத்தில் பிறந்து, தியோடர் ஜான்சன் என்னும் ஆங்கில ஓவியரிடத்தில் அடிப்படைப் பயிற்சி பெற்றவர்) பிரமுகர்களையும், தனிப்பட்ட மனிதர்களையும், மேற்கத்திய பாணி நகல்களாக (Realistic) அவர்களின் தளவாடங்களைக் கொண்டு திரைச்சீலையில் (Canvas) தீட்டினார்.

பெரும்பாலான இவரது படைப்புகள் நெய் வண்ணங்களைக் கொண்டு தீட்டப் பெற்றவைகளாகும்.

இந்து மதத்தின் மேல் இவருக்கிருந்த அளவுகடந்த நேசம் காரணமாக, புராண, இதிகாசக் காட்சிகளையும் கடவுள் அவதாரங்களையும், அதே மேற்கத்திய உடலமைப்பு பாணியில் தென்னிந்திய வகை ஆடை ஆபரணங்களைப் பூட்டி, சாதாரண ஆண், பெண்களாக அசைய வைத்தார்.

இவரையடுத்து அதாவது இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், வங்காளத்தில் சில முக்கியக் கலைஞர்கள் (அபனேந்திநாத தாகூர், ககனேந்திரநாத தாகூர், நந்தலால் போஸ், ஜாமினி ரே போன்றவர்கள்) சேர்ந்து முன் நின்று நடத்திய இயக்கம்தான் அநேகமாக இந்தியாவில் கலை சம்பந்தமான முதல் இயக்கமாகும்.

இது கவிஞர் தாகூர் அவர்களின் குடும்பத்தை மையமாகக் கொண்டு இயங்கியதால் மக்களது கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.

இக்கலைஞர்கள் யாவரும் மேற்கத்திய பயிற்சி முறை, செய்முறை உபகரணங்கள் யாவற்றையும் ஒதுக்கிவிட்டு, சுதேசிகளாக, முழுக்க முழுக்க இந்திய உபகரணங்களைக் கொண்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்டு, இந்தியத் தன்மை கொண்ட ஓவியங்களை வரைந்தனர்.

இதற்குக் காரணமாக இருந்தவரும், ஊக்கமளித்தவரும் அந்நாளில் கல்கத்தா ஓவியக் கல்லூரி முதல்வராக இருந்த திரு.ஹேவல் என்பவர்தாம்.

அசலான ஒரு வங்க மரபு அங்கே உதயமாகி, அதன் ஒளிக்கதிர்கள் பல திசைகளிலும் பரவி இளங்கலைஞர்களிடத்தில்  ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தபோதிலும் இந்த இயக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்களே சிலர் நம்பிக்கையிழந்து வெளியேறி, எந்தக் கட்டுப்பாடுமில்லாத சுதத்திரப் பறவைகளாக, பரீட்சார்த்தமான ஓவியங்களைப் படைத்தார்கள். 

பல்வேறு துறைகளில் நாம் பின்தங்கியவர்களாக மதிப்பிடப் பெறினும், ஓவிய, சிற்பக் கலை வளர்ச்சியில், நமது கலைஞர்களின் சாதனை, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் நவீன கலை வளர்ச்சியோடு பல அம்சங்களிலும் இணையானதாகவே இருப்பதைப் பெருமையோடு கூற வேண்டும்.

இன்றைய ஓவியங்கள், சிற்பங்களைப் பற்றிப் பலரும் பலவிதமாக மதிப்பீட்டுடன் விமர்சனம் செய்வதும், பெரும்பாலோருக்கு இவை புரியாத புதிராய், குழப்பமான விஷயங்களாக இருப்பதுவும் நாம் நன்கு அறியக் கூடும்.

ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் இக்கலை வளர்ச்சி தளர்ந்து போகாமல், மேலோங்கிச் செல்வதற்குக் காரணம், இது ஓர் உண்மையான உயர்ந்த தத்துவங்கள் மேலோங்கிச் கொண்ட ஒரு நுண்கலையாக இருப்பதுதான் எனலாம்.

– ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பு மலரிலிருந்து…

Comments (0)
Add Comment