– தோப்பில் முஹம்மது மீரான்
தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவர். ‘சாய்வு நாற்காலி’ நாவலுக்காக 1997-ல் சாகித்திய அகாடமி விருதுபெற்றவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள – தமிழக எல்லைப் பகுதியில் வாழும் தனித்துவம் மிக்க இஸ்லாமியர்களின் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்.
அவரிடம் இந்து தமிழ் நாளிதழுக்காக எடுக்கப்பட்ட நேர்க்காணல்…
உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்…
சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டணம். அது மலையாளம், தமிழ் என இரு மொழிகளும் பேசப்படும் ஊர். 1940-ல் நான் பிறந்தேன். பள்ளிப் படிப்பெல்லாம் அங்கு அருகிலேயே படித்தேன். நாகர்கோவிலில் உள்ள தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் படித்தேன்.
கதைகள் எழுதுவதில் நாட்டம் எப்படி வந்தது?
பத்து, பன்னிரெண்டு வயதில் இருந்தே கதைகள் எழுதுவேன். எங்கள் ஊரில் கொலைச் சம்பவங்கள் மிக அபூர்வமாகத்தான் நடக்கும். அப்படி நடக்கும்போது அதைப் பற்றி சுத்துப்பட்டு ஊர்களில் உள்ள கவிஞர்கள் கவிதையாகப் பாடுவார்கள்.
அம்மாதிரிப் பாடல்களை அவர்களே பாடி சந்தையில் விற்பார்கள். அவற்றையெல்லாம் வாங்கிப் படிப்பேன். பக்கத்து ஊர்களில் நடக்கும் கூத்து, நாடகங்களையெல்லாம் தவறாமல் பார்ப்பேன்.
இதுமட்டுமல்ல என் கூடப் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். எங்கள் அப்பா எல்லோரையும் சுற்றி உட்காரவைத்துக் கதைகள் சொல்வார்.
இவை எல்லாம்தான் காரணம் என நினைக்கிறேன். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ முழு நாவலும் என் அப்பா சொன்ன கதைகள்தாம்.
உங்கள் முதல் படைப்பும் அதுதானா?
அதற்கு முன்பு நிறைய கதைகள் எழுதி மலையாளப் பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். சில நாட்களிலேயே கதைகள் திரும்ப வந்துவிடும். அப்போது தமிழ் எழுதத் தெரியாது.
1962 வாக்கில் எங்கள் பகுதியில் நடந்த மீனவர் – முஸ்லிம் கலவரத்தை ‘ஒரு ரிப்போர்ட்டிங்’ போல முழுமையாக எழுதினேன். அதை மலையாளப் பதிப்பகங்களுக்கு அனுப்பினேன்.
அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த ரிப் போர்ட்டிங்கை மலையாள எழுத்தாளர்கள் கே.ஜி.சேதுநாத், கரமணை ஜனார்த்தனன் ஆகியோர் படித்துவிட்டு ‘சிறந்த நாவல்’ என்றார்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது ‘கூனன் தோப்பு’ நாவலாக வெளிவந்தது.
முதலில் பிரசுரமான கதை எது?
மெட்ராஸில் (சென்னை) இருந்து வந்த ‘பிறை’ என்னும் ஒரு பத்திரிகையில் 1968-ல் எனது முதல் சிறுகதை ‘நரக பூமியில்’ பிரசுரமானது. அந்தக் கதை மலையாளத்தில் எழுதப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது.
நிலா முதீன் என்பவர்தான் மொழிபெயர்த்தார். அந்தச் சமயத்தில் நானும் மெட்ராஸில் வேலை பார்த்ததால் ‘பிறை’யில் தொடர்ந்து எழுதினேன்.
தமிழில் நேரடியாக எழுதியது எப்போது?
மிகச் சமீபத்தில்தான். ‘சாய்வு நாற்காலி’க்கு முன்பு வரை நான் நேரடியாகத் தமிழில் எழுதிய தில்லை. நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதிப் பிரதி எடுக்க வேண்டும். தமிழில் வாசிப்பும் 1990களுக்குப் பிறகுதான்.
2000 வருடத் தமிழ் எழுத்து வரலாற்றை விட்டுவிட்டு வேறோர் இடத்தில் இருந்து நீங்கள் கதை சொல்லத் தொடங்குகிறீர்கள் எனலாமா?
எனக்குத் தமிழ் இலக்கியம் தெரியாது. எங்கள் ஊர் பெரிய கலாச்சார பூமி. அங்கு இருந்த நிலப்பிரபுத்துவ அமைப்பால் அடிமைப் பட்ட மக்களின் வாழ்க்கையைத்தான் எடுத்துக் கொண்டேன்.
நான் ஜெயகாந்தனை வாசித்தது கிடையாது; மெளனியை வாசித்தது கிடையாது; பிச்சமூர்த்தியை வாசித்தது கிடையாது. எனக்குத் தெரிந்த விஷயத்தை, எனக்குத் தெரிந்தபடி என்னுடைய மொழியில் சொல்கிறேன். அவ்வளவுதான்.
தமிழில் நீங்கள் வாசித்த படைப்புகளில் உங்களைப் பாதித்தவை எவை?
என்னை எந்த நூலும், ஆசிரியரும் பாதித்தது கிடையாது. 1990களுக்குப் பிறகுதான் தமிழ் வாசிக்கவே ஆரம்பித்தேன். அதற்குக் காரணம் பேராசிரியர் கி.நாச்சிமுத்துதான். “தமிழ்ல ஏதாவது படிச்சிருக்கீங்களா?” எனக் கேட்டார்.
“படிச்சதில்ல சார்” எனச் சொன்னேன். “இத படிச்சுப்பாருங்க”ன்னு சுந்தர ராமசாமியின் ‘புளிய மரத்தின் கதை’யையும் கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராம’த்தையும் கொடுத்தார். நான் முதலில் வாசித்தவை இந்த இரு நூல்கள்தாம்.
உங்கள் எழுத்துக்கு முன்னோடி என யாரையும் சொல்ல முடியாதா?
இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அவர்களுடைய மொழியைக் கொண்டே எழுதக் காரணமாக இருந்தவர் வைக்கம் முகம்மது பஷீர்தான். அவரது கதைகளைப் படித்த போதுதான் நாமும் இஸ்லாமிய வாழ்க்கையைப் பதிவுசெய்யலாம் எனத் தோன்றியது.
அவர் பெரிய மேதை. அவர் மொத்தம் எழுதியது 1900 பக்கங்கள்தாம். பாலைச் சுண்டக் காய்ச்சுவதுபோலப் பக்கங்களைச் சுருக்கிவிடுவார். அவரின் நூறு பக்கங்களைப் படித்தால், ஆயிரம் பக்கமாக விரிந்துகொள்ளும். அது பஷீரிடம் உள்ள சிறப்பு. அது நம்மால் முடியுமா?
ஒரு வகையில் உங்கள் எழுத்துகளை வட்டார வழக்குக் கதைகள் என வகைப்படுத்தலாமா?
எனக்கு இதில் மாறுப்பட்ட கருத்து உண்டு. இப்படி வகைப்படுத்துவது எழுத்தைச் சிறுமைப் படுத்தும் வேலை. இது மாதிரியான வகைப் படுத்துதல் மலையாளத்தில் இல்லை.
பெருமாள் முருகன், பூமணி, சோ. தர்மன் போன்றோர் எல்லாம் தமிழின் பெரிய எழுத்தாளர்கள். அவர்களையும் வட்டார வழக்கு என்றால், பொதுக்கதைகள் எவை? அசோகமித்திரன் எழுதுவதா?
உங்கள் கதைகளில் தொடர்ந்து இஸ்லாம் அடிப்படைவாதத்தைப் பதிவு செய்துள்ளீர்கள். இதை உங்கள் சொந்த சமூகம் எவ்வாறு எதிர்கொண்டது?
எதிர்ப்புகள் வந்தன. யாரும் புத்தகம் வாங்க மாட்டார்கள்; படிக்க மாட்டார்கள். ‘முஸ்லிம் எதிரி’ எனப் பிரச்சாரம் செய்தார்கள்.
இதற்குச் சக படைப்பாளிகளும் காரணம். அதே சமயத்தில் கவி கா.மு.ஷெரீப், அப்துல் வகாப் உள்ளிட்ட பலரிடம் இருந்து பாராட்டுகளும் வந்தன. அடிப்படைவாதிகள்தாம் என்னை எதிர்த்தார்கள். சமூகத்தில் அவர்கள்தானே அதிகம்.
இன்றைக்குள்ள இஸ்லாமியத் தமிழ் எழுத்துகளை வாசிக்கிறீர்களா?
இம்மாதிரி வகைப்படுத்துதல் மீது எனக்கு உடன்பாடில்லை. இஸ்லாம் வாழ்க்கையைப் பதிவுசெய்த வகையில் அர்ஷியா என்பவரின் முயற்சி எனக்குப் பிடித்திருந்தது. கீரனூர் ஜாகிர் ராஜா, களந்தை பீர்முகம்மது ஆகியோரின் எழுத்துகளும் பிடித்திருக்கின்றன.
இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?
போர்த்துக்கீசியப் படையெடுப்பின் காரணமாக எங்கள் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்தார்கள். அவர்கள் இன்றைக்குப் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் வாழ்க்கையைத்தான் நாவலாக எழுதிவருகிறேன்.
உங்கள் எழுத்துகளுக்கு வரலாறுதான் ஆதாரமாக இருக்கிறதா?
நான் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் கடந்த காலத்தின் வழியாக வரலாற்றுக்குச் சென்றுவிடுவேன். வரலாறு எனக்குப் பிடிக்கும். வரலாற்றுப் புத்தகங்கள் நிறைய வாசிப்பேன்.
வரலாற்றை மறந்துவிட்டுப் படைப்புகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை படைப்பு என்பது கடந்த காலத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும். நிகழ்காலம் அதற்கு முக்கியமல்ல.
- நன்றி : இந்து தமிழ் திசை நாளிதழ்