அம்பேத்கரின் கல்வியைப் பற்றிய பார்வை!

நூல் விமர்சனம்

பள்ளிக் கல்வி, உயர்கல்வி, சட்டக் கல்வி – என புரட்சியாளர் அம்பேத்கரின் கல்வி குறித்த சிந்தனைகளின் தொகுப்பு.

*****

“1944 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள் அம்பேத்கர் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது பட்டியல் சமூகத்தினரின் கல்வி குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் இப்போதும் நாம் நினைவு கூரத்தக்கவை.

உயர் சாதி இந்துக்கள் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கும் முயற்சிகளைத் தாம் எப்போதும் ஆதரித்து வருவதாகவும், ஆனால் பட்டியல் சமூகத்தவரின் கல்வி குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என,  தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பட்டியலின மக்களுக்காக விடுதிகளைத் திறப்பது மற்றும் பல வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற நடவடிக்கைகளை மனப்பூர்வமாக அவர் வரவேற்றாலும், “அத்தகைய காரியங்களை அரசாங்கம், அரசாங்க செலவிலிருந்து செய்ய வேண்டும்.

அப்போதுதான் எந்த ஒரு சாதியும் இன்னொரு சாதிக்காக தாங்கள் இதைச் செய்தோம் என்று கருதும் நிலை இருக்காது.

அது போலவே எந்த ஒரு சாதியும் இன்னொரு சாதி தமக்கு இதைச் செய்ததால் தாம் அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டிய நிலை ஏற்படாது” என அவர் தெரிவித்தார்.

மாகாண அரசுகள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சட்டம் மற்றும் முதுநிலை கல்விக்காக எதையும் செய்யவில்லை என்பதை டாக்டர் அம்பேத்கர் சுட்டிக் காட்டினார்.

அவரது வற்புறுத்தல் காரணமாக அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு பட்டியலின சமூகத்தைச் சார்ந்த மாணவர்களின் உயர்கல்விக்காக  ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாய் ஒதுக்கியது.

அதை சுட்டிக்காடிய அவர், “இந்திய அரசாங்கம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் தொழிற்கல்வி மற்றும் அறிவியல் கல்விக்கு அதிக கவனம் தருகிறது.

ஒவ்வொரு வருடமும் 10 முதல் 15 மாணவர்களை ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பி அங்கே இருக்கும் மிகச் சிறந்த கல்வியை அவர்கள் பெறுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அது போல ஒவ்வொரு மாகாண அரசும் செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின சமூகத்தின் உயர்கல்விக்காக குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாகாண அரசும் ஒதுக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குவது தனது திட்டங்களில் ஒன்று என அவர் தெரிவித்தார்.

அவ்வாறு நடந்தால் மத்திய அரசு ஒதுக்கும் மூன்று லட்ச ரூபாயை இந்தியாவில் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் படிக்கும் பட்டியலின மாணவர்களுக்குச் செலவு செய்வதற்குப் பதில் ஒட்டுமொத்த தொகையையும் அந்த மாணவர்களின் அயல்நாட்டுக் கல்விக்காகப் பயன்படுத்தலாம்” என்றார் (23.09.1944 The Hindu).

பட்டியலின மாணவர்கள் அயல்நாடுகளுக்குப் போய்  கல்வி பயில்வதன் முக்கியத்துவம் இன்று மேலும் கூடியிருக்கிறது.

அதற்காக இந்திய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் தொகையை ஒதுக்கினாலும் அதனால் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பெரிதும் பயனடைந்துவிடாதபடி விதிகளை வகுத்து வைத்துள்ளனர்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே ‘அறிஞர் அம்பேத்கர்’ என்ற பரிமாணத்தை அழுத்தமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்தத் தொகுப்பை வெளியிடுகிறேன்.

அறிஞர் அம்பேத்கர் மேதைமைக்கான உதாரணம் மட்டுமல்ல, தான் பெற்ற அறிவைச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் அவரே சிறந்த எடுத்துக்காட்டு. இதை மாணவ சமுதாயம் மனதில் கொள்ள வேண்டும்.

இந்திய அரசியல் திருப்புமுனையான கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சமூகத்தின்பால் அக்கறை கொண்டவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டாலொழிய நம்மைச் சூழ்கிற சாதிவெறி, மதவெறி என்னும் கொடுநெறிகளை நாம் வெற்றிகொள்ள முடியாது.

சனாதனம், கல்வியில்தான் தனது பதுங்கு குழிகளைத் தயாரித்து வைத்துள்ளது என்பதை பாஜக ஆட்சியில் பார்த்து வருகிறோம். டாக்டர் அம்பேத்கரின் கல்வியியல் சிந்தனைகள் அந்தப் பதுங்கு குழிகளை நிச்சயம் நிர்மூலமாக்கும்.

முன்னுரையில் ரவிக்குமார்

கல்வியைப் பற்றி அம்பேத்கர்!

பதிப்பாசிரியர்: ரவிக்குமார்

விலை ரூ 230/-

பிரதிகளுக்கு : +91 95662 66036

Comments (0)
Add Comment