சரித்திரத்தில் சில நிமிர்வுகள்…!

– வெளிவராத பிரபஞ்சனின் சிறுகதை

எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாளையொட்டி இந்த மீள்பதிவு.
பிரபஞ்சன். தமிழ் வாசகர்கள் நன்கு அறிந்த எழுத்தாளர்.

சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், கவிதை, விமர்சகன் என்று பலதளங்களில் இயங்கி அழுத்தமான தடத்தை ஏற்படுத்திவிட்டு மறைந்த பிரஞ்சன் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய சிறுகதை இது.

தமிழக வரலாற்றோடு இணைந்த ஒரு நிகழ்வை சிறுகதையாகத் தொடர்ந்து எழுதலாம் என்கிற முயற்சியில் பிரபஞ்சன் எழுதித் தந்த முதல் சிறுகதை இது.
இதுவரை பிரசுரம் ஆகாத அவருடைய சிறுகதையை ‘தாய்’ இணைய இதழ் மூலம் பொதுவெளிக்குக் கொண்டு வருகிறோம்.
*
இது சுதந்திர நாடு என்கிறோம். பண்பாடு, கலாச்சாரம், உன்னதம், தியாகம் உள்ள பூமி என்கிறோம். இந்தப் பெருமை வந்த விதம் என்ன? எண்ணற்ற மாபெரும் மனிதர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி இழந்து நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை தேடித் தந்தார்கள்.

அந்த மகத்தான மனிதர்களை நினைத்துப் பார்க்க வேண்டாமா நாம்? நேற்றைய நாளை அறியாதவர்கள் நல்ல நாளையை உருவாக்க முடியாது.
வரலாற்றுப் பக்கங்களில், யாரும் அறியாமல் உறங்கும் மாபெரும் மனிதர்களை இன்றையத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்யும் தொடர் இது.
*
திருப்பத்தூர்க் கோட்டைக்கு எதிரே திரண்டு நின்றிருந்தது மக்கள் திரள். மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக போராளிகள் நின்றிருந்தார்கள். அவர்கள் கைகள் பின்புறம் சேர்த்துக் கட்டப்பட்டு, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அசைய முடியாமல் நின்றிருந்தார்கள்.

அவர்களைச் சுற்றி ஆங்கிலச் சிப்பாய்கள், உள்நாட்டுச் சேவகர்கள், துப்பாக்கியுடன் நின்றிருந்தார்கள். அவர்களின் துப்பாக்கிச் சனியன்கள் போராளிகளின் தலையைக் குறிபார்த்துக் கொண்டிருந்தன.

அசைபவர்கள் சுடப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது. கோட்டையை ஒட்டியிருந்த மேற்குப் பக்கத்தில் தூக்கு மரங்கள் நடப்பட்டுக் கொண்டிருந்தன.

துரைசாமி தன் அப்பா சின்னமருது, பெரியப்பா பெரியமருது ஆகியோரையே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பா சின்னமருது பாண்டியன், கிளிக் கூண்டு போல மனிதக் கூண்டு செய்யப்பட்டு, அதற்கு உள்ளே கைகளும், கால்களும் பிணைக்கப்பட்டு நின்றிருந்தார்.

சற்று நேரத்தில் தூக்கிலிடப்படப் போகிறார்கள். அப்பாவின் முகம் வேதனையால் சுருங்குவது துரைசாமிக்குத் தெரிந்தது. கருத்தான் என்கிற அப்பா வளர்த்த படைவீரன் சுட்ட காயம் புடைக்க வைத்து உயிர் பறிக்கும் வாதையில் துன்பப் பட்டுக் கொண்டிருந்தார்.

அந்த நிலையிலும் கடைசிக் குழந்தையான, 15 வயசு துரைசாமியைப் பார்த்துச் சிரித்தார். தலையை அசைத்தார்.

‘பயப்படாதே’ என்பது அதன் பொருள்.

தூக்கு மரம் நடும் பணி அனேகமாக முடிந்தது. ஆங்கிலத் தளபதி வெல்ஷ் என்பவனும், அக்னியூ என்பவனும் வந்து அமர்ந்தார்கள். தூக்குப் போடும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயன், தன் கடமையைத் தொடங்கினான்.

பெரியப்பா, பெரிய மருது கடைசி முறையாகக் கூட்டத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டார். தன் மக்களை, இளவரசர்களைப் பார்த்தார். ஒன்றும் பேசாமல் தூக்கு மேடையில் ஏறினார்.

இரண்டு தென்னைகளை நட்டு, நடுவில் முதுகுச் சட்டம் போட்டுத் தயார் செய்யப்பட்டிருந்தது தூக்குமேடை.

பெரியப்பாவின் உடம்பு சற்றே துடித்து அடங்கியது.

அடுத்தது அப்பாவின் முறை.

அப்பாவின் கைகள் கூண்டுக்குள் இருந்த கம்பியோடு பிணைந்திருந்தது என்றாலும், அவர் தலை நிமிர்ந்திருந்தது.

அவர் துரைசாமியை, தன் கடைசி இளைய பிள்ளையைப் பார்த்தார்.
“அப்பா” என்று முணுமுணுத்தான் துரைசாமி.

“தைரியமாக இரு” என்று சொல்வது போல் இருந்தது சின்ன மருதுவின் பார்வை.
கூண்டோடு சேர்த்து சின்னமருது தூக்கிலிடப்பட்டார். கூண்டு அசைந்து ஓய்ந்தது.
அப்பா இறந்து விட்டார் என்று உறுதி செய்யப்பட்ட பின், அவர் மகனும் துரைசாமியின் அண்ணனுமான சிவத்த தம்பி தூக்கிலிடப்பட்டான்.

அதன் பின் சிவத்த தம்பியின் மகன் முத்துசாமியும் கொல்லப்படுகிறார்.
“ஐயோ இது என்ன அக்கிரமம்? தாத்தா, மகன், பேரன் மூன்று பேரையும் தூக்குப் போட்டுக் கொள்கிறார்களே… அரசர் தானே உங்கள் எதிரி. இந்தக் குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள்” என்று அலறினார் தளவாய் பிள்ளை.

வெல்ஷ் அவரைத் திரும்பிப் பார்த்தான். அக்னியூ ஆத்திரத்துடன் எழுந்தான்.
“விடு… வயதானவன்” என்றான் வெல்ஷ்.
தொடர்ந்து ஐநூறு பேர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.

மைதானம் வெறுமையாகக் கிடந்தது. துரைசாமியின் கண்கள் பூத்துப் போயின. அம்மா, பெரியப்பா, அண்ணன்மார்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மரச் சட்டங்களுக்கு மத்தியில், தாம்புக்கயிறால் சுருக்கப்பட்டு, உடம்பு துடித்து அடங்குவதைப் பார்த்தபடி நின்றான் துரைசாமி.
அக்னியூ முன், துரைசாமி கொணர்ந்து நிறுத்தப்பட்டான்.

“இவனை என்ன செய்யலாம் வெல்ஷ்” என்றான் அக்னியூ. வெல்ஷ் துரைசாமியைப் பார்த்தான்.

அவன் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. தன்னை நண்பனாக ஏற்றுக்கொண்ட சின்னமருது தன்னைத் தன் அரண்மனைக்குள் வரவேற்று, விருந்துளித்தது நினைவுக்கு வந்தது.

தனக்கு ‘களரி’ என்ற ஆயுதத்தைப் பழகித் தந்தது, தான் மதுரையில் இருந்த வரைக்கும், மாதாமாதம் அருமையான அரிசியும், அழுத்தமான தோல்களையுடைய மிகச் சுவையான ஆரஞ்சுப் பழங்களையும் அனுப்பியது, அந்த நண்பனின் மகன் என்பது நினைவுக்கு வந்தது.

“இவனை ஆயுள் தண்டனைக் கைதியாக்கி, பிரின்ஸ் ஆப் வேல்சுத் தீவுக்கு அனுப்பிடலாம்”

தூத்துக்குடிக் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் துரைசாமி.
கப்பல் இன்று மாலைக்குள் வந்துவிடும் என சொன்னார்கள். மூன்று மாதங்களாக, கப்பல் வருகைக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தார்கள் அந்த 73 அடிமைகள். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் சொன்னார்கள்.

திருப்பத்தூரிலிருந்த வரைக்கும் அவன் சிறை வைக்கப்பட்டவன் தான் என்றாலும் வெல்ஷ் கருணையால் கைவிலங்குகள், கால்விலங்குகள் அகற்றப்பட்டன.
கைகள், கால்கள் வீசி நடப்பது எவ்வளவு பெரிய சுகம்!

சோறு இல்லாமல் இருந்து கூட விடலாம், சுதந்திரம் இல்லாமல் முடியாது.
அறைக்குள்ளே நடந்து நடந்து சரிந்தான். அவ்வப்போது அம்மா, அப்பா நினைவுகள் வரத்தான் செய்தது.

கூண்டில் அடைபட்ட புலி போல் விழித்துப் பார்த்த அப்பா ஞாபகம் வந்தது. “ஐயோ… என் பிள்ளையைக் கொண்டு போறாங்களே..” என்று அலறிய அம்மா நினைவுக்கு வந்தார்.

கால்கள் துடிக்க, உடம்பு உதற தன் முன்னால் உயிர்விட்ட சகோதரர்கள் வந்து போனார்கள்.

“வெல்ஷ் என்னையும் நீ கொன்றிருக்கலாம்… இப்படி நாளுக்கு நாள் செத்து மடியும்படி விட்டிருக்கிறாயே, இது தண்டனையா, அன்பா..?” என்றபடி குமைந்தான்.
தூரத்தில் கப்பல் கரையை நோக்கி வருவது தெரிந்தது.

கரை நெருங்கியது. கைதிகள் கப்பலில் ஏற்றப்பட்டார்கள்.

அன்று இரவு தளபதி வெல்ஷ், தன் நினைவுக் குறிப்பில் பின்வருமாறு எழுதினார்.
11.02.1802 அன்றைய நினைவுக் குறிப்பு இது:

“கப்பல் துறையில் என்னுடைய பொறுப்பை லெப்டினன்ட் ராக் ஹெப்டிடம் ஒப்படைத்த அந்த நாளை நான் என்றும் மறக்க முடியாது. துரைசாமியைப் படகில் நான் கைப்படப் பிடித்து ஏற்றியபோது, எனது இளைய நண்பனின் எழில் வதனத்தை இன்னமும் நான் ஒரு சேரக் காணமுடிந்தது.

என்றைக்கும் அருமைத் தாய்த் திருநாட்டை விட்டு வெளியேறிச் செல்வதால், மீதி இருந்த அவனது தோழர்கள் பெருந்துயரினால் கம்பீரமானதும், மௌமானதுமான சோகத்தோடு காணப்பட்டார்கள்.’’

பின்னாளில் தளபதி வெல்ஷ் பினாங்குத் தீவுக்கு ஓய்வுக்காகச் செல்வதற்காக வந்திருந்தான். சீனாவிலும் காண்டன் முதலான நாடுகளிலும் பணிசெய்து பதவி உயர்வு முதலான பல சிறப்புகளைப் பெற்று, விடுமுறைக்காக அங்கு வருகை தந்திருந்தான் அவன்.

சுத்தமான காற்றும் நீரும் உணவும் அவன் உடம்பை ஆரோக்கியமாக்கிக் கொண்டிருந்தன.

ஒருநாள் தன் மாளிகைப் பூங்காவில் காற்றை அனுபவித்தபடி இருந்தான். அவன் முன் நரைத்த தலையும், தள்ளாடிய உடையுமாக ஒரு வயோதிகன் வந்து நின்றான்.

“யார் நீ…” என்று உரத்துக் குரலெடுத்துக் கூறினான் வெல்ஷ்.
“என்னோடு என்ன வேலையாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டான். வந்தவன் பதில் சொல்லத் தயாராக இல்லை போலும்.

வெல்ஷ் அவனை ஏறிட்டுப் பார்த்தான். அவனை எங்கும் பார்த்த நினைவு அவனுக்கு இல்லை. சுருக்கமும் வெடிப்பும் கூடிய இந்த வயதாளி யார்?. மீண்டும் மீண்டும் கேட்ட பிறகு அந்த வயோதிகன் அழுதபடி சொன்னான்.

“தொ…ர…சா…மி..’’.

வெல்ஷ் அன்று இரவு இப்படி எழுதுகிறான்.

“அந்த வார்த்தை ஈட்டி போல் என் இதயத்தில் பாய்ந்தது. ஆமாம் எனக்கான தண்டனை அது. எனக்குத் தண்டனை அப்போது கிடைத்து விட்டது. என் அன்புக்குரிய பரிதாபமான கைதி (துரைசாமி) மாறுபட்ட நிலையில்,
ஆனால் அதே மன திடத்துடன் அந்த நினைவுகளைச் சிந்தனையில் தேக்கி, பழைய நட்பினை மனதில் அசை போட்டபடி என் முன் வந்து நிற்கிறான்…” என்று தொடர்கிறது அந்த நினைவுக் குறிப்பு.

பினாங்குத் தீவில் ஆயுள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த துரைசாமி தன் தண்டனைக் காலத்தில் 17 ஆண்டுகள் முடித்து விட்டிருந்தான்.

அந்த சந்தர்ப்பத்தில் தான் வெல்ஷ் தன் தந்தையின் நண்பன், தான் இருக்கும் தீவுக்கு வந்திருப்பதைக் கேள்விப்படுகிறான்.

அதிகாரத்தில் சந்திக்கிற வெல்ஷ் தன்னை விடுதலை செய்யக் கூடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்தால் அது தவறும் இல்லை. அது மனித இயல்பும் கூட. ஆனால் வெல்ஷே சொல்கிறான், துரைசாமியின் நோக்கம் அது இல்லை என்று.

அந்த இடர்ப்பாடான வேளையிலும், கருணை கோரி துரைசாமி வெல்ஷ்ஷிடம் வரவில்லை என்பதே உண்மை.

“துரைசாமி, உன் விடுதலைக்கு நான் உதவ முடியாது”

“நான் அதற்கு வரவில்லை. என் கடிதத்தை இன்றும் உயிர் பிழைத்து இருக்கும் என் குடும்பத்தாரிடம் சேர்க்க வேண்டும். அதற்கு உங்களால் உதவ முடியுமா?”

வெல்ஷ் அந்தக் கணம் துரைசாமிக்கு உதவவே நினைத்தான். என்றாலும் அந்தத் தீவின் தலைமைப் பதவியில் இருக்கும் பானர்மேன் என்பவன் அதற்கு அனுமதி தர வேண்டும். பானர்மேன் உடனடியாக முடிவு செய்யவும் முடியாது. இவைகளைச் சொல்லி “என்னால் முடியாது” என்றான் வெல்ஷ்.

துரைசாமி, வெல்ஷைச் சந்தித்ததும், வெல்ஷ் துரைசாமியைச் சந்தித்ததும் அதுவே கடைசி தடவை.

1821 ஆம் ஆண்டு தம் இருபது ஆண்டுகால தண்டனையை முடித்துத் தாயகம் திரும்பிய, சிவகங்கை சமஸ்தானத்தின் கடைசி வாரிசு, மதுரையில் யாரும் அறியாமல் மடிந்து போனார்.

Comments (0)
Add Comment