முள்ளன்டிரம் மடம்: அப்பைய தீட்சிதரின் அடிச்சுவட்டில்!

தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார் ஆய்வாளர் ரெங்கையா முருகன். அதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது அனுபவங்களை சுவைபட எழுதிவருகிறார்.

சமீபத்தில் அவர், ஆரணிக்கு அருகே வசித்த அப்பைய தீட்சிதரின் குருவான ராமானந்த தீர்த்தர் மடம் பற்றி எழுதியுள்ளார். அவை தாய் வாசகர்களுக்காக…

ஆரணி அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் முள்ளன்டிரம். சிதிலமடைந்த நிலையில் உள்ளது சைவ வைணவ சமரச நோக்காளர் சிவார்க்கமணிதீபிகை தந்த அப்பைய தீட்சிதர் குருவுமான ராமானந்த தீர்த்தர் மடம்.

இன்றும் வேலூர் பகுதிகளில் வசிக்கும் வாணிபச் செட்டியார் சாதியினர் தனது இல்ல திருமண அழைப்பிதழில் தவறாமல் இடம் பெறும் வாசகம் ராமானந்த தீர்த்தரின் பரிபூரண ஆசியால் என்று இடம் பெறும்.

ஆனால் உண்மையில் அந்த இனத்தவருக்கு முள்ளன்டிரம் ராமானந்த தீர்த்தர் மடம் குறித்த தகவல் தெரியாது.

பெரியவங்க செய்ததை அப்படியே பின்பற்றுகிறோம் என்ற தொனி மட்டுமே இருக்கிறது.

ஆரணி – வேலூர் பயணதடத்தில் சேவூர் அருகே பிரிந்து செல்லும் பாதையில் வெட்டியான் தொழுவம் கிராமத்தை தாண்டி முள்ளன்டிரம் கிராமம் வந்து விடும்.

வெட்டியான் தொழுவம் கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்த சில்லென்ற இளங்காற்றுடன் தரைக்காடுகளினூடாக போய்ச் சேரலாம் முள்ளன்டிரம் கிராமத்துக்கு.

ஆரணி அருகே உள்ள மோசூர் கிராமத்தைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரிகள் 16 ம் நூற்றாண்டில் எழுதிய யாத்ரா பிரபந்தம் நூலில் ஆரணியைச் சுற்றிலுமுள்ள அடையபலம், முள்ளன்டிரம் கிராமங்களினைச் சுட்டி காட்டிய வர்ணனைகள் நிறைந்த பிரயாண நூல் எழுதியவர்.

இந்த பிரயாண நூலில் அப்பைய தீட்சிதர் எவ்வாறு பல்லக்கில் கொண்டு வந்து அவரை கவுரவப் படுத்தினார்கள் என்ற விசயங்களும் பதிவாகி உள்ளது.

மதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் ஆமர்த்தக மட வகையறாக்கள் சோழிய பிராமணர்கள் வைகை நதிக்கரையில் தங்கி தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பல நூல்கள் ஆக்கி தந்துள்ளனர்.

அதே போன்று பாலாற்று நதிப்படுகைகளில் சோழர் மற்றும் பாண்டிய அரசர்களுக்கு ஆச்சாரியார் ஸ்தானம் வழங்கிய சிவாச்சாரியார்கள் கோளகி மற்றும் பிஷா மட வகையறாக்கள் ஆரணி, தேவிகாபுரம், முள்ளன்டிரம், போன்ற பகுதிகளில் தங்கி ஏராளமான சமஸ்கிருத நூல்களினை படைத்தார்கள்.

ஒரு பெருங்குறை இவர்கள் தமிழில் ஒரு நூல்கூட எழுதியதில்லை என்பது மட்டுமே. அதே வேளையில் அன்றைய காலத்து தொடர்பு மொழி பெரும்பாலும் சமஸ்கிருதம் இருந்ததால் இந்த மொழியிலேயே படைத்திருப்பார்கள் போலும்.

முள்ளண்டிரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணகிரிநாதர் என்கிறார் மு.இராகவையங்கார் . அவர் எழுதிய தமிழ் சாஸனக் கவி சரிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளன்டிரம் கிராமத்து அக்ரஹாரம் முழுமையாக பல்வேறு அறிவுசார் பண்டிதர்கள் நிறைந்த பூமி.

முள்ளன்டிரம் பாலகவி, ராமகவி டிண்டிமகவி, அருணகிரிநாதர் இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இன்று அந்த அக்ரஹார வீதி எந்த பொலிவும் இல்லாமல் சுவடுகளின்றி காண்கையில் எனக்கு ஏக்க பெருமூச்சு மட்டுமே மிஞ்சினாலும் இந்த தெருவினுள் பிரவேசிக்கையில் என் மனம் 16 ம் நூற்றாண்டின் காலத்தில் புதைந்த நினைவுகளோடு அக்ரஹார வீதியில் வலம் வந்தேன்.

அத்தெருவில் வசிக்கும் இன்றைய தலைமுறை எந்த வாசனையுமின்றி இயல்பாக கடந்து செல்லும் சாமான்யர்களால் குழுமியிருக்கிறது.

அவ்வளவு சாதாரணமானது அல்ல இந்த வீதி. ஒரு காலக்கட்டம் வரை வேதவிற்பன்ன விசயங்களுக்காக தெற்கில் இருந்து வடக்கே பயணமாயினர்.

ஆனால் அப்பையா தீட்சிதர் காலத்தில் தான் வடக்கே உள்ள வேதபண்டிதர்கள் அப்பைய தீட்சிதரைக் காண தெற்கு நோக்கி பயணப்பட்டனர்.

மாபெரும் பண்டிதர்கள் உலவிய பூமியில் இந்த கடையேனும் அவர்கள் நடந்த வழித்தடத்தில் பயணம் செய்தது உள்ளார்ந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்பயணத்திற்கு உதவி புரிந்த ஆரணி நகரின்இன்றைய மொழிபெயர்ப்பு பண்டிதர் மதிப்புமிகு ஜி.குப்புசாமி, காதி அலுவலர் திரு. முருகன் மற்றும் அறம் செய்வோம் சுதாகர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

தென்தமிழகத்தில் வேம்பத்தூர் என்றால் வடதமிழகத்தில் முள்ளன்டிரம். இரண்டு ஊர்களின் அக்ரஹார வீதிகளில் பயணிக்கையில் ஒத்த மனநிலையில் இருந்தேன்.

படம்: சிதிலமடைந்த நிலையில் உள்ள இராமானந்த தீர்த்தர் மடம். அப்பையா தீட்சிதர் காவியங்கள் பயின்ற இடம்.

தகவல்: பாலமுருகன், வேலூர்.

Comments (0)
Add Comment