‘அன்னை ஜானகி-100’ சிறப்பு மலரிலிருந்து…
வி.என். ஜானகி நடித்த திரைப்படங்கள் மொத்தம் 31. அதில் தமிழில் மட்டும் 29 படங்கள், தெலுங்கில் 2 படங்கள்.
நடிப்பு, நடனம் மட்டுமில்லாமல் பாடுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஜானகி. மும்மணிகள் என்ற திரைப்படத்தில் சொந்தக்குரலில் திரைப்பாடலைப் பாடியிருக்கிற ஜானகி தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் பாடியிருக்கிறார்.
பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்ட மாதிரியே மணிப்புரி, கதக் போன்ற நாட்டியங்களையும் கற்றுக் கொண்டார் ஜானகி.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு டான்ஸ் மாஸ்டர் ஜெய்சங்கரிடம் நடனத்தைக் கற்றார்.
கலையும், தொழிற்கல்வியும் கற்றுக்கொண்டால், இந்த உலகின் எந்த மூலையிலும் வாழ்ந்துவிடலாம்” என்று அடிக்கடி சொல்வார், ஜானகி.
1947-ம் ஆண்டு வெளிவந்த படம் “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி”. இத்திரைப்படம் வி.என். ஜானகிக்கு ஒரே நாளில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது.
படத்தை இயக்கித் தயாரித்தவர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம். ”வெள்ளித்திரைக்கு அதி அற்புதமான நடிகை கிடைத்தார்” என்று சினிமாப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டின.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமானார் ஜானகி.
ஜானகி நடித்த பல படங்களில், ‘அனந்த சயனம்’, ‘தேவகன்யா’, ‘ராஜா பத்ருகரி’, ‘மானசம்ரக்ஷணம்’, ‘சகடயோகம்’, பங்கஜவல்லி’, ‘சித்ரபகாவலி’, ‘தியாகி’, ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘சந்திரலேகா’, ‘மோகினி’, ‘ராஜமுக்தி’ போன்ற படங்கள் முக்கியமானவை.
அதிலும் அவர் தனியாக நாட்டியம் ஆடிய ‘கிருஷ்ணன் தூது, ‘சக்குபாய்’, ‘சகுந்தலா’, ‘சாவித்திரி’, ‘சூரியபுத்ரி’, ‘பக்திமாலா’ முதலான படங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.
“எனக்கு எந்த வேடம் கொடுத்தாலும் அதை ஏற்று பொருத்தமாக நடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.
தன் சினிமா வாழ்கையின் வெற்றியெல்லாம், பட டைரக்டர்களின் விருப்பப்படி நடிப்பதில்தான் இருக்கிறது” என்று கூறியவர் வி.என். ஜானகி.
அந்தக் கால சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதருடன் இணைந்து 1948 ல் வெளிவந்த “ராஜ முக்தி” படத்தில் நடித்திருக்கிறார்.
அறிஞர் அண்ணா வசனம் எழுதி 1949ல் வெளிவந்த ‘வேலைக்காரி’ படத்தில் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து நடித்திருக்கிறார் வி.என்.ஜானகி. படம் பெரு வெற்றியைப் பெற்றது.
‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் நடிப்பதற்கு ஊதியமாக எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.4001, ஜானகிக்குத் தரப்பட்ட சம்பளம் ரூ. 5000.
கலையில் முன்னுக்கு வரவேண்டுமானால் அடக்கமும் ஆர்வமும் இருக்க வேண்டும். இந்தக் குணங்கள் வி.என். ஜானகியிடம் நிறைந்திருந்தன.
அதோடு பட முதலாளிகளுக்கு படத் தயாரிப்பின்போது தன்னால் எந்தவிதக் கஷ்டமும் ஏற்படக்கூடாது என்று அவர் கருதியதால், திரையுலகில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்.
பட உலக ரசிகர்களின் அபிப்பிராயத்தைப் பொறுத்துதான் தனது பெயரும் புகழும் இருக்கிறது என்பதை நட்சத்திரங்கள் அவ்வளவாக உணர்ந்ததாகக் காட்டிக் கொள்வதில்லை. ஆனால் அதில் விதிவிலக்காக இருந்தவர் வி.என்.ஜானகி.
திருமணத்திற்கு பின் வி.என்.ஜானகி தேவகி, ‘வேலைக்காரி’ ஆகிய படங்களில் நடித்தார்.
அதற்கு பின் எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி, பி.எஸ். வீரப்பா, ஏ.காசிலிங்கம் (படத்தின் இயக்குநரும் இவரே) ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரித்த ‘நாம்’ படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்தார் வி.என். ஜானகி. அதோடு அவர் தொடர்ந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
‘மருத நாட்டு இளவரசி’ மைசூர் நவஜோதி ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட நாட்களில்தான் அதில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். வி.என். ஜானகி இருவருடைய இதயங்களும் ஒன்றுபட்டுப் பிறகு தம்பதியாகக் கரம் பற்றினர்.
எம்.ஜி.ஆரும் – ஜானகியும் திரையுலகில் உச்சம் தொட்டிருந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி மறைவுக்குப் பிறகு, 1962-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கும் ஜானகிக்கும் திருமணம் நடைபெற்றது.
இயக்குநர் கே. சுப்ரமணியம் (நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) தலைமையில் எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ஜானகி சட்டப்படி ஜானகி எம்.ஜி.ஆர் ஆனார்.
திருமணத்திற்குப் பிறகு சென்னை இராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் குடியேறினார்கள் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாவும்.
இராமாவரம் தோட்டத்திற்கு எம்.ஜி.ஆரும், ஜானகியும் குடி வந்தபோது அது முழுக்கத் தென்னந்தோப்பாகவே இருந்தது.
26 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட தோட்டத்தில் முதலில் சிறு வீடு தான் கட்டப்பட்டு, பின்னாளில் தான் அங்கு மாடிவீடு கட்டப்பட்டது.
அந்த வீட்டில் அடிக்கடி மாற்றங்கள் செய்வதில் எம்.ஜி.ஆருக்கும், ஜானகிக்கும் விருப்பமில்லை.
இராமாவரம் தோட்டத்திலேயே இருக்கும் பசுக்களிடமிருந்து கறக்கப்படும் பாலில் காபி போட்டு விருந்தினர்களுக்குக் கொடுப்பதில் ஜானகிக்கு அலாதிப் பிரியம்.
ஜானகி அம்மா இருந்த வரைக்கும் இந்த நிலை தொடர்ந்தது.
இராமாவரம் தோட்டத்தில் உள்ளவர்கள் எம்.ஜி.ஆரை “சேச்சா” என்று அழைப்பார்கள். ஜானகி அம்மாளைப் பலரும் அழைப்பது “தோட்டத்தம்மா” என்று தான்.
(தொடரும்…)
முதல் பகுதியின் இணைப்பு – https://thaaii.com/2022/12/30/articles-about-janaki-mgr/
அன்னை ஜானகி – 100
நூற்றாண்டுச் சிறப்பு மலர்
வெளியீடு: மெரினா புக்ஸ்
தரணி காம்ப்ளெக்ஸ்,
1A, திருநாத முதலி நகர்,
திருப்பத்தூர். – 635 601
- அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரைப் பெற கீழே உள்ள இணைப்பைத் தொடுக…