முன்மாதிரிப் பஞ்சாயத்தாகத் திகழும் முத்துகாபட்டி!

டாக்டர் க.பழனித்துரையின் மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 1

நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி ஒன்றியத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் ஓர் கிராமப் பஞ்சாயத்து. முத்துகாபட்டி என்பது அதன் பெயர். எழில் சூழ்ந்த அந்த பசுமைக் கிராமம் 144-க்குப் பெயர்போன கிராமம்.

சாதிச் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் கிடையாது. காவல் நிலைய கண்காணிப்பில்தான் அந்தக் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 18 சாதிகளைக் கொண்ட கிராமப் பஞ்சாயத்து. விவசாயத்திற்கு பஞ்சமில்லை.

அதேபோல் அடிதடிக்கும் பஞ்சமில்லை. அரண்மனை போன்ற வீடுகளுக்கும் பஞ்சமில்லை. எங்கும் பசுமை. மக்கள் மனதினிலே ஒரு சலிப்பு. காரணம் சாதியப் பூசல். எவ்வளவு வசதி இருந்தும் அமைதியாக மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை.

அல்லது வாழத்தெரியவில்லை அல்லது வாழ எவரும் வழிகாட்டவில்லை. இந்த ஊர் இன்று பலரைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

அதன் சாதனைச் செயல்பாடுகளினாலே. இது எப்படிச் சாத்தியமானது. அங்கு உள்ளாட்சி உயர் பிடிக்கிறது, மக்கள் உள்ளாட்சியை நம்புகின்றார்கள்.

உள்ளாட்சி மக்களை எப்போதும் மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பங்கெடுக்க வைக்கிறது. அதற்கான ஒரு தலைமை உருவாகியிருக்கிறது.

அந்தத் தலைமை என்பது ஒரு கூட்டுத் தலைமை. இன்று அந்தப் பஞ்சாயத்து மக்கள் பஞ்சாயத்தாக, நம்பிக்கைப் பஞ்சாயத்தாக, முன்மாதிரிப் பஞ்சாயத்தாக மாறியுள்ளது.

உலகிலும், நாட்டிலும் தலைமைக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது என்று ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் பஞ்சாயத்து மாற்றுத் தலைமை இங்கே உருவாகியிருக்கிறது என கொட்டடித்து அனைவரையும் அழைக்கிறது.

அதன் செயல்பாடுகளால் ஊடகத்தின் பார்வையை தன் வசப்படுத்தி அந்த ஊர் முன் மாதிரி என பிரகடனப்படுத்த முனைகிறது அந்தப் பஞ்சாயத்து.

சமூக ஊடகத்தின் மூலம் நாமும் அந்தப் பஞ்சாயத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டு அங்கு சென்று களம் என்ன கூறுகிறது என்று பதிவு செய்தோம்.

இந்தப் பஞ்சாயத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து. அருள் ராஜேஸ் ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் பணி செய்து அரசியலில் ஈடுபாடு கொண்டு உள்ளாட்சியில் ஒரு முறை ஒன்றியப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்.

அந்தத் தோல்வி அவரை களைப்படையச் செய்யவில்லை, மாறாக உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தது.

அதன் விளைவு தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் மக்கள் பிரச்சினைகளை சரி செய்ய மக்களுடன் பணியாற்றியது பொதுமக்களில் பலருக்கு இவரின்மேல் நம்பிக்கை அதிகரித்தது.

அந்த நேரத்தில் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப்பின் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. சிற்றூரட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட முனைந்தார்.

அதற்கு முதல் படியாக தன் நண்பர்களை ஊருக்குள் ஊடுருவச் செய்வது மக்கள் மத்தியில் தன்னைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்க முனைந்தார்.

அருள் ராஜேஸ், பார்க்க எதோ சாதாரண சராசரி மனிதர்போல் காட்சியளித்தாலும், அவருடைய கிராமம் பற்றிய பார்வையும், திட்டமும் அவர் எவ்வளவு தீர்க்கமாக கிராமத்து மக்களின் உளவியல் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.

அந்த ஊர் மக்களின் மனதில் இருந்த சாதிப்பூசலின் தாக்கத்தை உணர்ந்த அருள் ராஜேஸ் அமைதியின்மையை மையப் பொருளாக்கி ஒரு கதையாடலைக் கட்டி மக்களிடம் வித்தியாசமாக கொண்டு சேர்க்க முனைந்ததுதான் இவரின் சாகசச் செயல்.

மக்கள் அமைதியாய் மகிழ்ச்சியுடன் வாழ கிராம மக்களிடம் ஒற்றுமை உருவாக்குவதுதான் என் முதல் பணி என்று கூறி மக்களை அணுகியது பலரின் புருவத்தை உயர்த்த வைத்தது.

மக்களுக்கு இது வித்தியாசமாகப்பட்டது. அடுத்து பஞ்சாயத்துப் பதவி என்றால் எவ்வளவு காசு பார்க்கலாம் என்று வருகிறார்கள் என்ற கதையாடலை மாற்றி, இந்தப் பஞ்சாயத்து தமிழகத்தில் ஒரு முன்னுதாரணப் பஞ்சாயத்தாக மாற்றுவேன்.

இந்தச் செயல்பாடுகளில் ஒரு பைசா கூட எனக்குத் தேவையில்லை. நான் உங்களின் சேவகனாக இருப்பேன் என்பதை எல்லா சமூகங்களைச் சேர்ந்த தன் நண்பர்கள் மூலம் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்தார்.

இந்த இரண்டும் பொதுமக்களிடம் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியது. எல்லாச் சமூகத்தை சேர்ந்தவர்களையும், எல்லா அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களையும், பொதுக்கருத்தாளர்களையும் சந்தித்து இளைஞராக உரையாடியது மக்கள் இவர்மேல் வைத்திருந்த நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

அதே நேரத்தில் தன்னம்பிக்கையுடன் புதிய உள்ளாட்சி பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள தன்னாட்சி என்ற அமைப்பை அணுகி கிராமப் பஞ்சாயத்தின் வலு என்ன?

அதிகாரங்கள் என்னென்ன? அதிகாரங்களை எப்படிப் பயன்படுத்துவது போன்ற அனைத்தையும் உள் வாங்கிக் கொண்டு தான் ஒரு விபரம் அறிந்த மனிதர் என்ற பார்வையை பொதுமக்களுக்குக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

தேர்தலில் அவர் எதிர்பார்த்தபடி வெற்றி அவரைத் தழுவியது. தான் ஒரு பைசா கூட செலவில்லாமல் வெற்றி பெற்றுவிட்டோம், அதற்கு மக்கள் ஆதரவாக இருந்துள்ளனர் என்ற உணர்வு மேலோங்கியவராக களத்திற்கு வந்தார்.

வெற்றி பெற்றவர் பஞ்சாயத்தை தன் கட்டுப்பாட்டில் தன் கைக்குள் வைத்துச் செயல்பட எண்ணாமல் மக்கள் கைக்கு எடுத்துச் செல்ல வியூகம் வகுத்து அனைத்துச் செயல்பாடுகளிலும் வார்டு உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.

அந்த ஊரில் மதிக்கத்தக்க சமூகத்தை சேர்ந்த ஒருவரை உதவித் தலைவராக ஆக்கியது மட்டுமல்ல, அவரை அப்பா, அப்பா என அழைத்து தன் மனச்சாட்சியாக வைத்துச் செயல்படுவது இவரின்மேல் பலருக்கு பெரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

அதேபோல் செய்யப் போகின்ற காரியங்கள் அனைத்தையும் கிராமசபைக்குக் கொண்டு சென்று கிராமசபை அனுமதியைப் பெற்று செயல்பட்டது,

இவர் தன்னைக் கரைத்துக்கொண்டு, தலைவர் என்ற சிந்தனையை மாற்றி சேவகர் என்ற நிலையில் இருந்து செயல்படுவதாக மக்களுக்கு ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொண்டேயிருந்தது, தன் ஆதரவு வட்டம் பெருகுவதற்கு வழிவகை செய்தது.

மக்கள் ஆதரவு இல்லாமல் எந்தப் பணியும் கிராமங்களை வெற்றிபெறாது, ஆகையால் தான் அனைத்தையும் மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களின் சிந்தனைக்கும் முடிவுக்கும் விட்டுவிடுகிறேன் என்று கூறியது, அவர் மக்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு கட்டியம் கூறுகிறது.

டாக்டர் க.பழனித்துரை

– (தொடரும்)

Comments (0)
Add Comment