கனிவும் கருணையும் கொண்ட எழுத்து!

நூல் அறிமுகம் :

ஹெர் ஸ்டோரிஸ் இணையதளத்தில் நானாக நான் தலைப்பில் வெளியான கட்டுரைத் தொடர் பாதைகள் உனது பயணங்கள் உனது என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.

“எல்லா பெரிய விஷயங்களுக்கும் சிறிய தொடக்கமே இருக்கிறது என்பார்கள். அப்படி தொடங்கிய சிறு முயற்சிதான் இந்த கட்டுரைத் தொகுப்பு.

ஆண்டாண்டு காலமாக மனத்துக்குள் அடக்கி வைத்திருக்கும் புழுக்கங்கள், ஆற்றாமைகள், இயலாமைகள், சமூக அவலங்கள், குடும்ப வன்முறைகள் எனப் பலவும் இயல்பாக எழுத்துகளாக உருமாறின.

பாலினச் சமத்துவம் என்ற ஒற்றைச் சரடைக் கொண்டு பின்னத் தொடங்கிய கட்டுரைகள் வேறு தலைப்புகளிலும் இயல்பாகவே பயணித்தன” என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் ஹேமா.

மறுகன்னத்தைக் காட்டத்தான் வேண்டுமா என்ற கட்டுரையில் தொடங்கி குடிக்கத் தெரிந்த மனமே என்பது வரையில் 24 கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.

முதல் கட்டுரையில் தன் சமூகக் கோபத்தை வெளிக்காட்டுகிறார் ஹேமா. வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என்பது முக்கியமான வாசகமானாலும், வன்முறையை எப்படி எதிர்கொள்ளவேண்டும்.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டித்தான் ஆகவேண்டுமா என்ற கேள்வி வரும்போது, அப்படி மறுகன்னத்தைக் காட்டவேண்டிய அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது என்று உறுதியாகச் சொல்கிறார்.

திருமணம் பற்றி ஒரு கட்டுரையில் பேசும் அவர், திருமணம் என்பது நம் வாழ்வின் முக்கியமான ஒரு அங்கம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், திருமணம் மட்டுமே நம் வாழ்க்கையல்ல. அல்லது திருமணம் செய்துகொள்வதற்காக மட்டும் நாம் பிறக்கவில்லை.

அதிலும் குறிப்பாக பெண்கள் திருமணம் செய்து பிள்ளை பெற்றுக் கொள்வதற்காகவே பிறந்தவர்கள் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

அணிந்துரை எழுதியுள்ள கவிஞர் யுகபாரதி, “இதுவரை இந்தச் சமூகம் ஒரு விஷயத்தை எப்படிப் பார்த்து வந்ததோ, அதற்கு மாற்றாகவும் மறுபரிசீலனைக்குரியதாகவும் சிலவற்றைத் தெரிவித்திருக்கிறார்.

பெரும்பாலான இடங்களில் கனிவுடனும் கருணையுடனும் வார்த்தைகளைப் பிரயோக்கும் அவர், ஓரிரு இடங்களில் காத்திரமாகவும் கனற்றியிருக்கிறார்.

இக்கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள அனைத்துமே அவராகவே கண்டடைந்த பார்வைகள், இப்பார்வைகள் நம்மையும் வெளிச்சப்படுத்துகின்றன.

ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் என்ன நினைக்கிறாரோ, அதை உறுத்துமாலும் உரைக்கும்படியும் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து அவர் எழுத வேண்டும் என்பதே என் அவா” என்று பாராட்டியிருக்கிறார்.

தற்சார்பு பொருளாதார நிலைதான் பெண்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்பதில் உறுதியாக இருக்கும் ஹேமா, ஒரு சமூக மாற்றம் வேண்டுமானால் ஆண்மை அழியட்டும் என்று சொல்லும்போது திக்கென்றிருக்கிறது.

அந்தப் பெயரில் நடக்கும் எல்லா அழிச்சாட்டியங்களையும் தோலுரிக்க வேண்டிய கட்டாயத்தைத்தான் அவர் பேசு பொருளாகி இருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது என்று சொல்கிறார் ஆசிப் மீரான்.

நூலாசிரியர் சொல்வதைப் போல எழுத்தை ஒரு தவமாக மேற்கொள்ளாமல், ஒரு பயிற்சியாக செய்து தன் எண்ணங்களை வெளிப்படையாக பதியமிட்டிருக்கிறார்.

பாதைகள் உனது பயணங்கள் உனது (பிரேக் த ரூல்ஸ்) : ஹேமா
வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ்,
16 மகாலெட்சுமி அடுக்ககம்,
1, ராக்கியப்பா தெரு,
சென்னை – 4
விலை ரூ. 160

Comments (0)
Add Comment