முதல்வரான பிறகு மகிழ்ச்சி இல்லை – அண்ணா!

“1967 இல் அண்ணா முதல்வரானார். முதல்வரான பிறகு அப்பா மகிழ்ச்சியாகவே இருந்ததில்லை. அண்ணா நுங்கம்பாக்கத்தில் இருந்த தன் வீட்டிலேயே வாழலானார். வீட்டிற்கு வெளியே காவலர்கள் உடுப்புடன் கையில் துப்பாக்கியுடன் எப்போதும் நின்று கொண்டிருப்பார்கள்.

அண்ணாவிற்கு இது மனத்தை ஏதோ செய்தது. ஒரு மனிதன் நாள் முழுவதும் இப்படி நிற்பதா என்று நினைத்த அண்ணா அந்தப் பாதுகாப்பை முதலில் நீக்கினார்.

நுங்கம்பாக்கம் வீட்டில் கீழ் வீட்டில் அலுவலகமும், அண்ணாவின் குடும்பமும் இருந்தன. அரசாங்கத்தில் தரும் பெரிய அழகு இருக்கைகளை வீட்டின் வரவேற்பறையில் போடச் சொன்ன என் அன்னையாரை அப்பா கண்டித்து, அரசாங்கப் பொருள்கள் என வீட்டில் இருக்கக்கூடாது, அலுவலகத்தில் இருக்கட்டும் என்றார்கள்.

அண்ணா அவர்கள் வெளியூர் செல்லும்போது அண்ணாவின் காருக்கு முன் ‘Pilot’ எனும் ஒரு வண்டியும், பின்னால் ‘Escort’ எனும் ஒரு வண்டியும் செல்லும் முன்னால் செல்லும். முன்னால் செல்லும் வண்டியில் ஒரு பலம் வாய்ந்த ‘Horn’ எனச் சொல்லப்படும் ஒலிப்பான் இருக்கும்.

அது மிக அதிகமான ஒலியை எழுப்பும். அதையும் அப்பா அவர்கள் வேண்டாம் என்று சொல்லி நிறுத்திவிட்டார்கள். பின்னால், ஒரு காரில் சாதாரண உடையில் ஐந்து காவலர்கள் செல்லும்படி ஓர் ஏற்பாட்டைச் செய்தார்கள். அரசாங்கக் காரில் எங்கள் குடும்பத்தினரை அவர் ஏற்றிச் சென்றதே இல்லை.”

– நன்றி: ‘அண்ணா என் தந்தை’ நூலில் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment