ஒரு இயக்குனரின் ஒரு படம் ‘ஆஹா’, ‘ஓஹோ’வென்று புகழும் வகையில் இருக்கும். இன்னொரு படம் ‘இவராப்பா அந்த படத்தை எடுத்தாரு’ என்று நம்பிக்கையின்றி கேட்கும் வகையில் இருக்கும்.
ஆனால், ஒரு படத்தின் முன்பாதியும் பின்பாதியும் அவ்வாறு சொல்லத்தக்க வகையில் இருப்பது எதில் சேர்த்தி?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘பஹீரா’ அப்படியொரு அனுபவத்தை வழங்குகிறது.
ஒரு ‘காதல்’ சைக்கோ!
சென்னை, மும்பை, ஹைதராபாத் என்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெண்ணுடன் பழகுகிறார் பிரபு (பிரபுதேவா).
வெவ்வேறு பெயரில், வெவ்வேறு தோற்றத்தில், வெவ்வேறு குணாதிசயம் கொண்டவராகக் காட்டிக்கொண்டு, அவர்களைக் காதலிப்பது போன்று ஏமாற்றுகிறார்.
யாருமில்லாத அரங்கில் அவர்களைத் திருமணம் செய்து, தேனிலவுக்காக இலங்கைக்கு அழைத்துச் செல்கிறார். அதன்பின், அவர்களது கதி அதோகதியாகிறது.
அந்த பெண்கள் தொடர்ச்சியாக கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர்.
போலீஸ் விசாரணையில், ‘டெடி பியர்’ வடிவில் பொம்மை அனுப்பிக் கொன்றது தெரிய வருகிறது.
பொம்மை எப்படிக் கொல்லும் என்று விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி (சாய் குமார்) தலைமையிலான தனிப்படை, குள்ள உருவமுள்ளவர்களைக் கொண்டு இந்த கொலைகள் நிகழ்ந்திருப்பதைக் கண்டறிகிறது.
அப்போது, தன் தோழி (அமைரா தஸ்தூர்) உடன் அந்த சைக்கோ கொலையாளி இலங்கைக்குச் சென்றிருப்பதாகத் தகவல் தெரிவிக்கிறார் ஒரு பெண். உடனே, இலங்கைக்கு விரைகிறது தனிப்படை.
அந்த பெண்ணைக் காப்பாற்றினார்களா, சைக்கோ கொலைகாரனும் பெண்களை ஏமாற்றி இலங்கைக்கு அழைத்துச் செல்பவரும் ஒரே நபர்தானா உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘பஹீரா’வின் இரண்டாம் பாதி.
கொஞ்சம் கூட சகிக்க முடியாத அளவுக்கு முதல் பாதி இருந்தாலும், அதனை ஈடுகட்டும் விதமாக பின்பாதி நேர்த்தியாக இருப்பது ‘பஹீரா’வின் சிறப்பு.
அசத்தும் பிரபுதேவா!
சைக்கோ பாத்திரத்தில் பிரபுதேவா நடிப்பது புதிது. அதிலும் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் அவர் நடித்திருக்கும் விதம் உண்மையாகவே மிரட்டல் ரகம். அது போதாதென்று விதவிதமான கெட்டப்களில் வந்து அசத்தியிருக்கிறார்.
தொடக்க காட்சியில் வரும் யாஷிகா முதல் சஞ்சிதா, ஜனனி, காயத்ரி, ரம்யா நம்பீசன் என்று அரை டஜன் நாயகிகள் ‘பஹீரா’வில் தலை காட்டியிருக்கின்றனர்.
ஆனால், மேக்கிங் வீடியோவில் இடம்பெற்ற சோனியா அகர்வாலைத் திரையில் காணவில்லை; அவரது காட்சிகள் ‘கட்’ செய்யப்பட்டது ஏனோ?
பின்பாதி முழுக்க அமைரா தஸ்தூர் ராஜ்ஜியம். அவர் கவர்ச்சிகரமாகத் தோன்றாத காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
‘பஹீரா’ தரும் இன்னொரு ஆச்சர்யம், பிரபுதேவாவின் நண்பராக வரும் ஸ்ரீகாந்தின் நடிப்பு. அவர் நடித்த காட்சிகளே படத்தின் உயிர்நாடி.
இவர்கள் தவிர்த்து நாசர், பிரகதி, சாய்குமார், சண்முகராஜன், பக்ரு உட்படப் பலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
செல்வகுமார் மற்றும் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு, செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை நினைவூட்டுகிறது. முன்பாதி முழுக்க ‘கிளப் டான்ஸ்’ பார்த்தது போன்றிருக்க, பின்பாதி மட்டுமே ஒரு ‘சைக்கோ த்ரில்லர்’ ஆகத் தென்பட உதவியிருக்கிறது.
அறிமுக இசையமைப்பாளர் கணேசன் இசையில் பாடல்கள் அனைத்தும் மசாலா கலவை சரியாக அமையாத கொத்து பரோட்டாவாக அமைந்துள்ளன.
ஆனால், பின்பாதியில் அவர் தந்திருக்கும் பின்னணி இசை ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கிறது.
கலை இயக்குனர் சிவா யாதவ் குழுவை நிறையவே வேலை வாங்கியிருக்கிறது ‘பஹீரா’. திரையில் யதார்த்தம் தெரிய உதவாதபோதும், கலை வடிவமைப்பின் உழைப்பு படத்தில் அதிகம்.
சகிப்புத்தன்மை வேண்டும்!
‘பொண்ணுங்களுக்கு ஒண்ணுன்னா மாதர் சங்கம் வரும், பசங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா இந்த பஹீரா வருவான்’, ‘இதேமாதிரி எல்லா விஷயத்துலயும் பர்ஸ்ட் டைம் ஹஸ்பெண்ட் கூடதான் பண்ணனும்னு பொண்ணுங்க நினைச்சிட்டா எப்படியிருக்கும்’ என்று தொடரும் வசனங்களே இந்த படம் என்ன வகையறா என்பதைச் சொல்லிவிடுகிறது.
உண்மையைச் சொன்னால், ‘குத்துங்க எஜமான் குத்துங்க’ என்று சிகப்பு ரோஜாக்கள் காலத்து பேச்சுகளின் வேறு வடிவம் தான் இது. இந்த விஷயத்தில் மட்டும் கால மாற்றம் என்பதைக் கணக்கிலெடுக்க மறந்துவிடுகிறது தமிழ் திரையுலகம்.
சிம்பு திரைக்கதை எழுதிய ‘மன்மதன்’ படத்தையும் லேசாக தொட்டுச் செல்கிறது இப்படம்.
அது பட்டவர்த்தனமாக தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு ‘ஸ்பை த்ரில்லர்’ ரேஞ்சில் மும்பை, சென்னை, ஹைதராபாத் என்று வெவ்வேறு இடங்களில் கதை நிகழ்வதாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
‘ஜங்கிள் புக்’ கதையில் வரும் மௌக்லி, பஹீரா பாத்திரங்கள்தான் இப்படத்திற்கான அடிப்படை.
நம்மில் பலருக்கு அந்த கதை தெரிந்திருக்குமா என்ற யோசனையின் பக்கமே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் செல்லவில்லை.
ஒரு பெண் பல ஆண்களுடன் பழகுவதால் உண்மையான காதலர்கள் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார் இயக்குனர்; உண்மைக் காதலர்களும் பாய் பெஸ்டிகளும் ஒரே சமூகத்தில்தான் வாழ்கின்றனர் என்பதை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.
‘நல்ல பொண்ணுங்களை …. பொண்ணுங்கன்னு சொல்ற பசங்களும் … பசங்கதான்’ என்று கிளைமேக்ஸில் ‘பீப்’ சத்தத்துடன் வசனத்தை ஒலிக்கவிட்டு நியாயம் சேர்த்தாலும், படம் முழுக்க நிறைந்திருக்கும் குப்பையின் நெடியே நம் மேலெழுகிறது.
சில காட்சிகளை எஸ்.ஜே.சூர்யா போன்று நகைச்சுவையாகச் சொல்ல முயற்சித்திருப்பது பலன் தந்திருக்கிறது.
அதேநேரத்தில், ஆபாசம் என்றபோதும் ரசிகர்கள் ஏற்கும் வகையில் அழகுறக் காட்சிகளை வடிவமைக்கும் திறனை அவரிடம் இருந்து எடுத்தாளத் தவறியிருக்கிறார்.
‘பஹீரா’வின் முன்பாதியில் கார் பார்க்கிங்கில் வரும் சண்டைக்காட்சியொன்று இடம்பெற்றுள்ளது.
ஆபாசக் குப்பையாகக் கருதப்படும் படங்களில் கூட அப்படியொரு குப்பைக் காட்சி இடம்பெறாது. முன்பாதி முழுக்க இது போன்ற விஷயங்கள் நிறைந்திருப்பதே இப்படத்தின் மாபெரும் பலவீனம்.
சுருக்கமாகச் சொன்னால், பின்பாதியில் நிரம்பியிருக்கும் பிரபுதேவா – அமைரா தஸ்தூர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், ஸ்ரீகாந்த் இடம்பெறும் பிளாஷ்பேக்கும் மட்டுமே ரசிக்கும் வகையில் உள்ளன.
அதனைப் பார்க்க வேண்டுமென்றால், இடைவேளை வரை சகிப்புத்தன்மையுடன் தேமேவென்று திரையைப் பார்த்தவாறு காத்திருக்க வேண்டும்.
படத்தொகுப்பாளர் ரூபன் கொஞ்சம் ரசிகர்களிடம் தயவு காட்டி பல காட்சிகளுக்கு கத்திரி போட்டிருந்தால் அல்லது முன்பாதியை முழுக்கவே ‘ரீஷூட்’ செய்யலாம் என்று ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அறிவுறுத்தியிருந்தால், பிரபுதேவாவுக்குப் பேர் சொல்லும் படமாக ‘பஹீரா’ அமைந்திருக்கும்.
அதனைச் செய்யாத காரணத்தினால், வாந்தி எடுத்த இடத்திலேயே அமர்ந்து விருந்துண்ணும் அனுபவத்தைத் தந்திருக்கிறது ‘பஹீரா’!
– உதய் பாடகலிங்கம்